You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 2: நன்றி தெரிவித்த இஸ்ரோ - விக்ரம் லேண்டரின் நிலை என்ன?
சந்திரயான் 2 விண்கலனின் தரையிறங்கும் ஊர்தி (லேண்டர்) விக்ரம் உடனான தகவல் தொடர்பு, அது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் சற்று முன் இழக்கப்பட்ட நிலையில், நன்றி தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.
"எங்களுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி. நம்பிக்கைகள் மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களின் கனவுகள் அளிக்கும் உத்வேகத்தால் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்," என்று செவ்வாய் இரவு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 - 2:30 மணியளவில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்திலிருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட தினத்தன்று, விக்ரம் உடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்தத் தொடர்ந்து 14 நாட்கள் முயல்வோம் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்குச் சமமாகும்.
சந்திரயான் 2-இன் சுற்றுவட்டக் கலன் (ஆர்பிட்டர்) விக்ரம் லேண்டரின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் விக்ரம் விழுந்த இடத்தை தாங்கள் கண்டுபிடித்துவிதாகவும் செப்டம்பர் 8ஆம் தேதி இஸ்ரோ அறிவித்திருந்தது.
இஸ்ரோ தெரிவித்த 14 நாட்கள் முடிவடைய, அதாவது நிலவின் மீது விக்ரம் லேண்டர் விழுந்துள்ள பகுதியில் சூரியன் மறைய இன்னும் சுமார் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் இஸ்ரோ இவ்வாறு ட்விட்டரில் பதிந்திருப்பது, தரையிறங்கு ஊர்தியுடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளது.
எனினும், இது குறித்து இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
இத்திட்டத்தை செயல்படுத்திய தொடக்கத்தில் ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டாக இருந்தது. தற்போது ஆர்பிட்டரில் அதிக எரிபொருள் இருப்பதால், தற்போது ஏழறை ஆண்டுகள் அதன் பணி தொடரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அப்போது சிவன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு சொந்தமான சுற்றுவட்ட ஊர்தியான 'லூனார் ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர்' (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் விழுந்த இடத்திற்கு மேல் சென்று, புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிலவின் மேற்பரப்பு மற்றும் அங்குள்ள சூழல் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய நாசாவால் இந்த ஊர்தி 2009இல் ஏவப்பட்டது.
எதிர்காலத்தில் விண்கலங்கள் மற்றும் மனிதர்கள் தரை இறங்குவதற்கு ஏற்ற குறித்த தகவல்களை இந்த ஆர்பிட்டர் நாசாவுக்கு அனுப்பும்.
விக்ரமுடன் தொடர்புகொள்ள நாசா தமக்குச் சொந்தமான விண்வெளியில் உள்ள கலன்களுடன் தொடர்புகொள்வதற்கான ஆண்டனாக்கள் மூலம் முயன்றது. அந்த முயற்சிகளும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இஸ்ரோ இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்