சௌதி அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது 'இரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது' - அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

"ஏவுகணை ஏவப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது" - அமெரிக்கா

செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார்.

ஏமனில் இருந்து தாக்குதல் நடந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக சௌதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.

தொடர்புடைய செய்திகளைப் படிக்க:

காஷ்மீரில் இருந்து சக்கர நாற்காலியில் திருப்பி அனுப்பப்பட்ட யஷ்வந்த் சின்ஹா

காஷ்மீரில் நிலைமைகள் அனைத்தும் இயல்பாக உள்ளதாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காஷ்மீருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், காஷ்மீர் விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

டெல்லிக்கு திரும்பிய அவரோடு பிபிசி இந்தி மொழி செய்தியாளர் சந்தீப் ராய் பேசினார். அவருக்கு நடந்தவை பற்றி அவரே விளக்கினார்.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்: மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹம்மத்

பிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.

ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை மலேசிய அரசு தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியா அல்லாத வேறொரு நாட்டிற்கு ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஜாகிர் நாயக்கை ஏற்றுக் கொள்ள பல நாடுகள் தயங்குவதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இலங்கை தாமரை கோபுரம் கட்டியதில் முறைகேடு

தெற்காசியாவிலேயே மிக பெரிய கோபுரமான தாமரை கோபுரத்தை இலங்கையில் நிர்மாணிக்கும் திட்டத்தின் போது பில்லியன் ரூபாய் சீனாவினால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அடிக்கல் நாட்டி தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தம்?

1948இல் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராக இருந்த ஹபீப் இப்ராஹிம் ரஹிம்தூலாவின் லண்டன் வங்கிக் கணக்கில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாமின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த நவாப் மொயின் நவாஸ் ஜங் என்பவரால் பரிமாற்றம் செய்யப்பட்ட ஒரு மில்லியன் பவுண்டுகள் தற்போது 35 மில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. அது இன்னமும் கூட ரஹிம்தூலாவின் நாட்வெஸ்ட் வங்கி கணக்கில்தான் இருந்து வருகிறது.

இவ்வளவு பெரிய தொகையாக வளர்ந்துள்ள அந்த பணப்பரிமாற்றத்துக்கு நிஜாம் மற்றும் பாகிஸ்தானின் வாரிசுகள் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், நீண்டகாலமாக இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி மார்கஸ் ஸ்மித் தனது தீர்ப்பை அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் லண்டன் ராயல் நீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :