மடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த தொழில்நுட்பக் கட்டுரை.

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.

சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பாட்டெரி ஆகியவற்றுடன் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

"சாதாரண திறன்பேசியுடன் ஒப்பிடும்போது எங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்" என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியுள்ளார்.

எவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நம்பிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திறன்பேசிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த திறன்பேசியின் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணைய சுதந்திரம்: மோசமான நிலையில் இந்தியா

கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் உலகம் முழுவதும் இணைய சுதந்திரம் மோசமடைந்து வருவதாக அமெரிக்காவை சேர்ந்த இணைய சுதந்திர கண்காணிப்பு நிறுவனமான பிரீடம் ஹவுஸ் கூறியுள்ளது.

உலகிலுள்ள 65 நாடுகளின் இணைய சுதந்திரத்தை ஆய்வு செய்த இந்நிறுவனம், பிரீடம் ஆன் தி நெட் (Freedom On The Net) என்ற வருடாந்திர இணைய சுதந்திரம் குறித்த தனது ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், கடந்த மே மாதத்துடன் முடிந்த 12 மாத காலகட்டத்தில் உலகிலேயே மோசமாக சீனாவில் அதிகளவு இணைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அதற்கடுத்த இடங்களை இரான், எத்தியோப்பியா, சிரியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இணைய சுதந்திரத்தை பேணிக்காக்கும் நாடுகளில் முதலிடத்தை எஸ்டோனியாவும், ஐஸ்லாந்து, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அதற்கடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத மோதல்கள், தீவிரவாத தாக்குதல், கலவரம் உள்ளிட்ட காரணங்களுக்கான இந்த வருடத்தில் அதிகமுறை இணையம் துண்டிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவு பரவி வரும் போலிச் செய்திகளின் காரணமாக பலர் உயிரிழந்து வருவதாகவும், அதற்கு உதாரணமான குழந்தைகளை கடத்தி செல்வதற்கு ஹிந்திக்காரர்கள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக கூறி, பாகிஸ்தானின் கராச்சியில் வெளியிடப்பட்ட காணொளியை யாரோ தமிழகத்தில் பரப்பியதால் அச்சுறுத்தலுக்குள்ளான மக்கள் தவறுதலாக வடமாநிலத்தை சேர்ந்த குறைந்தது இருவரை அடித்தே கொன்றதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களது கார் செல்லப்பிராணிபோல உங்களை சுற்றி வரும்!

அலைபேசியில் டெஸ்லா நிறுவனத்தின் செயலியில் உங்களது காரை வா என்று கூறினால் உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து கார் தானே வரும் வசதியை ஆறு வாரங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மின்கலத்தில் இயங்கும் கார்கள் பிரிவில் உலகளவில் முன்னணியிலுள்ள டெஸ்லா நிறுவனம் தனது ஆட்டோபார்க் எனப்படும் தானியங்கி கார் இயக்கு மென்பொருளான சம்மன்-ஐ (Summon) தனது மற்ற போட்டி நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் பயனர்களின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், டெஸ்லாவின் அலைபேசி செயலியில் உங்களது இருப்பிடத்தை அளித்துவிட்டு காரை வருமாறு கூறினால் உங்களை தானாக தேடி வரும் வசதியை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து டெஸ்லா கார்களிலும் இந்த வசதியை பயன்படுத்த முடியுமென்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :