You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்?
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்?
தற்போது நாம் பரவலாக பயன்படுத்திவரும் சிம் கார்டுகள் கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு வடிவமைப்பு மாற்றங்களுக்கு பிறகு நானோ என்ற மிகச்சிறிய அளவிற்கு வந்தடைந்துள்ளது.
உங்களது கைபேசிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள குண்டூசி போன்ற பொருளை பயன்படுத்தி சிம் கார்டு வைக்கும் டிரேவை கவனமாக திறந்து, மிகச் சிறிய பகுதியில் சிம் கார்டு கீழே விழாமல் உள்ளே வைப்பதற்கு சிரமப்படுபவரா நீங்கள்? அதற்கு மாற்று ஏதாவது உள்ளதா என்று நீங்கள் நினைத்ததுண்டா? இதுவரை நினைத்ததில்லை என்றால் இனியும் நினைக்காதீர்கள்! ஏனெனில் அப்படி ஒரு மாற்று பயன்பாட்டுக்கே வந்துவிட்டது.
சாதாரண சிம் கார்டு பயன்பாட்டு முறைக்கு முடிவுக்கட்டும் இ-சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வருங்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் திறன்பேசிகளில் சிம் கார்டே இல்லாமல் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.
இந்நிலையில், பிபிசி தமிழின் வாராந்திர தொழில்நுட்ப தொடரின் சிறப்பு பகுதியில் இந்த வாரம் இ-சிம் என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது? அதன் சிறப்பம்சம் என்ன? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.
இ-சிம் கார்டு என்றால் என்ன?
அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான். ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது. அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும்.
இ-சிம் கார்டுக்கான தேவை என்ன?
"என்னுடைய புதிய கைபேசியில் மிகப் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் திரை இருக்க வேண்டும், நல்ல சத்தம் வேண்டும், பல சென்சார்கள் இருக்க வேண்டும், இரண்டுக்கும் மேற்பட்ட அதிநவீன கேமெராக்களையும் சிறந்த பிளாஷ் லைட்டையும், இரண்டு சிம் கார்டுகளை போடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்" என்று நாம் தினந்தினம் கைபேசியின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த, அதிகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு கைபேசியிலிருந்து எதையெல்லாம் நீக்கினால் வேறொரு சிறப்பம்சத்தை கூட்டலாம் என்று நினைத்து அடுத்தடுத்து செய்த படிநிலை மாற்றங்களின் விளைவுதான் இது.
சுருங்க சொன்னால், கையளவு உள்ள கைபேசியில் அதிக இடத்தை அடைக்கும்/ வடிவமைப்பை சிக்கலாக்கும் பழமையான சிம் கார்டுக்கான இடத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதே இ-சிம்!
இது எப்படி வேலை செய்கிறது?
மேலே குறிப்பிட்டப்பட்டதை போன்று, உங்களது கைபேசியின் உள்ளேயே இ-சிம் அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு ஐபோனின் புதிய வரவான ஐபோன் 10 எஸ், எஸ் மேக்ஸை எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு ஐபோன்களிலுமே முதல் சிம் சாதாரண நானோ சிம், இரண்டாவது இ-சிம். நீங்கள் சாதாரண சிம்மை அமைத்த பிறகோ அல்லது அமைக்காமலோ கூட இ-சிம்மை நிறுவ முடியும்.
அதாவது, ஐபோனிலுள்ள செட்டிங்ஸ் > செல்லுலார் > ஆட் செல்லுலார் பிளான் வரை வந்துவிட்டு உங்களது கைபேசி அழைப்பு வசதி அளிக்கும் நிறுவனம் வழங்கிய தாளில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, அடுத்து கேட்கும் கன்பர்மேஷன் எண்ணை பதிவிட்டவுடன் உங்களது பழைய கைபேசி எண், திட்டம் என அனைத்துமே உடனடியாக வந்துவிடும்.
மாறாக, உங்களது தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் பிரத்யேக செயலியின் மூலமும் இதை நிறுவலாம் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இ-சிம்மின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
முதலாவதாக கைபேசி தயாரிப்பாளர்களுக்கு இடத்தை அடைக்கும் சாதாரண சிம் கார்டிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இதன் மூலம் வடிவமைப்பில் கவனம் செலுத்த முடியுமென்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.
சாதாரண சிம் கார்டுகளை போன்று அடிக்கடி தேய்ந்து போகும் பிரச்சனையோ, தொழில்நுட்ப பிரச்சனைகளோ இதில் இல்லை.
குறிப்பாக, அடிக்கடி பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய எண்ணை மாற்றுபவர்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்பவர்களும் உடனுக்குடன் சிம் கார்டை மாற்றாமலேயே எண்ணையும், நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளமுடியும் என்பது வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியாவில் இதை பயன்படுத்த முடியுமா?
அமெரிக்காவிலுள்ள முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இ-சிம் கார்டுகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுந்தான் இ-சிம் வசதியை அளிக்கின்றன. வருங்காலத்தில் இ-சிம் பொதிக்கப்பட்ட திறன்பேசிகளின் வருகை பெருகினால் மற்ற நிறுவனங்களும் இ-சிம்முக்கு ஆதரவு வழங்கும்.
சீனாவிலுள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் கூட இ-சிம் வசதியை வழங்கவில்லை என்பதால் அந்நாட்டில் மட்டும் இரண்டு சாதாரண சிம் கார்டுகளை பொறுத்தக்கூடிய ஐபோன்கள் விற்கப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.
முடிவுக்கு வருகிறது ஜிமெயில் இன்பாக்ஸ் சேவை
ஜிமெயில் பயன்பாட்டாளர்களுக்கு சேவைகளை சிறப்பாகவும், புதுமையாகவும், வேகமாகவும், புதிய வடிவமைப்புடன் வழங்குவதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த இன்பாக்ஸ் என்னும் சேவையை வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜிமெயில் பயன்பாட்டாளர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஒரு மின்னஞ்சலை நீக்கிவிட்டு தேவையானபோது மீண்டும் வரவழைக்கும் வசதி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் மின்னஞ்சலுக்கு ஏற்ற பதிலை கொடுக்கும் வசதி, முக்கியமான மின்னஞ்சலை மேலே வைத்துக்கொள்ளும் வசதி போன்ற பல்வேறு விதமான சிறப்பம்சங்களை இன்பாக்ஸ் வழங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மேம்படுத்தப்பட்ட சாதாரண ஜிமெயில் சேவையிலேயே இன்பாக்ஸில் இருந்த சிறப்பம்சங்களை இணைத்துள்ளதாகவும், அதை தொடர்ந்து முன்னேற்றவுள்ள நிலையில் இன்பாக்ஸின் இயக்கத்தை வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தோடு நிறுத்திக்கொள்வதாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்