You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம்
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.
"வைஃபையை பயன்படுத்தி வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்" - அசத்தும் புதிய தொழில்நுட்பம்
வைஃபை இணைப்புகளில் வெளிப்படும் சிக்கனல்களை கொண்டு பள்ளி-கல்லூரி-அலுவலக வளாகங்கள், பேருந்து-ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களுக்கு கொண்டுவரப்படும் பைகளிலுள்ள வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டறியலாம் என்று ரட்ஜர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் முறைகளுக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுவதுடன் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகவும், மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் தாங்கள் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டளவில் எளிமையானதாகவும், செலவை பெருமளவில் குறைப்பதாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய குழுவில் ஒருவரான நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழக பேராசிரியர் யின்யிங் சென்.
வைஃபை அல்லது கம்பியில்லா சிக்கனல்களை பயன்படுத்தி உலோகத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், அலுமினிய கேன்கள், மடிக்கணினிகள், பேட்டரிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றின் வடிவத்தை/ பரிமாணங்களை இனங்கண்டு, அபாயம் விளைவிக்கக்கூடிய பொருட்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், தண்ணீர், அமிலம், ஆல்கஹால் மற்றும் மற்ற திரவ வடிவிலான இரசாயனங்களின் அளவையும் இந்த வைஃபை சிக்கனல்களை கொண்டு கண்டறியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை நிறுவுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆன்டெனாக்களை கொண்ட வைஃபை சாதனம் தேவைப்படுமென்றும், சாதனத்திலிருந்து வெளிப்பட்டு பொருட்களின் மீது பட்டு அமைப்புக்கு திரும்ப வரும் அலைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவுக்கு விண்கலம் தயாரித்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் எதிர்கால திட்டங்களுக்கு தேவையான விண்கலத்தை அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ளது.
நிலவுக்கு மனிதனை முதலில் அனுப்பியது முதல், பல்வேறு கோள்களின் இயக்கத்தையும், இயல்புகளையும் கண்டறிந்தது வரை மட்டுமல்லாமல், சென்ற வாரம் சூரியனின் வெளியடுக்கான 'கிரோனாவுக்கு' முதல் முறையாக செயற்கைக்கோளை அனுப்பியது வரை விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு முயற்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், மற்ற விண்வெளி பயணத்திற்கும் தனது விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு தேவையான விண்கலத்தை "கம்மர்ஷியல் கிரியூ ப்ரோக்ராம்" என்னும் திட்டத்தின் கீழ் தயாரிக்கும் பணியினை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசா வழங்கியிருந்தது.
முழுவதும் தானியங்கி முறையில் இயங்கி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ள "கிரியூ ட்ராகன்" என்னும் இந்த விண்கலத்தை முழுவதும் தயாரித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவிடம் ஒப்படைத்துள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களுக்கு இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி நாசாவின் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி வாகனம் நான்கு கதவுகளை கொண்டுள்ளதாகவும், விண்வெளி வீரர்கள் அவர்களது இருக்கையில் அமர்ந்தவாரே பூமியையும், சந்திரனையும், சூரிய குடும்பத்தையும் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி செயலியை பயன்படுத்தும் 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தங்களது கூகுள் ட்ரைவில் சேமித்துள்ள பேக்கப்புகள் (தரவு சேமிப்பு) வரும் நவம்பர் மாதம் முதல் கூகுள் ட்ரைவின் மொத்த சேமிப்பளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலைபேசி குறுஞ்செய்தி செயலிகளில் உலகளவில் பிரபலமாக உள்ள வாட்ஸ்ஆப் செயலியில் மேற்கொள்ளப்படும் லட்சக்கணக்கான குறுஞ்செய்தி/ புகைப்பட/ காணொளி/ கோப்பு பரிமாற்றங்களை பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேவையான கூகுள் ட்ரைவில் எதிர்கால பயன்பாட்டு கருதி பேக்கப் (தரவு சேமிப்பு) செய்கின்றனர். அதாவது, ஒரு அலைபேசி எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் கணக்கு தொடங்கும் ஒருவர் தனது அலைபேசியை மாற்றும்போது பழைய அலைபேசியிலுள்ள தரவுகளை புதிய அலைபேசியில் பெறுவதற்கு இது உதவுகிறது.
கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் கணக்கு வைத்துள்ள எவரும் 15 ஜிபி வரை கூகுள் ட்ரைவில் இலவசமாக தரவுகளை சேமிக்கலாம். தரவுகளின் அளவு 15 ஜிபியை தாண்டினால் மேற்கொண்டு பயன்படுத்த கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். வாட்ஸ்ஆப்பை அதிகளவில் பயன்படுத்துபவர்களின் கூகுள் ட்ரைவை இந்த பேக்கப்களே பெருமளவில் அடைத்துக்கொள்வதால் பயனர்கள் சிரமத்திற்குள்ளாக வேண்டிய சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டுக்குமேல் தங்களது வாட்ஸ்ஆப் தரவை கூகுள் ட்ரைவில் புதுப்பிக்காத பயனர்களின் பழைய தரவுகள் வரும் நவம்பர் 12ஆம் தேதியன்று முழுவதுமாக நீக்கப்படுமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - கிளவுட் கம்ப்யூட்டிங் (மேகக் கணிமை)
பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம், கிளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும் மேகக் கணிமை பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் அதன் நிகழ்கால, எதிர்கால செயல்பாடு/ தேவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
கிளவுட் கம்ப்யூட்டிங் எனப்படும் மேகக் கணிமை என்றால் என்ன?
மேகக் கணிமை (கிளவுட் கம்ப்யூட்டிங்) வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வசதியுள்ள நமது மேசை கணினிகள்/ அலைபேசி/ வரைப்பட்டிகை/ மடிமேற்கணினியை இதேபோன்ற மற்றொரு மின்சாதனம் வழியாக தொடர்பு கொண்டு செயலாற்ற முடியும்.
மேகக்கணிமையின் சிறப்பம்சமே தேவைப்படும்போது உடனுக்குடன் அதன் செயல்திறனையும், சேமிப்பகத்தினையும் விரிவுப்படுத்திக்கொண்டே செல்வதுதான்.
நமக்கு எவ்வாறு பயன்படுகிறது?
உங்களது கணினியின் உள்நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவலை/ தரவை அந்த கணினியில் மட்டுந்தான் பயன்படுத்த முடியும். ஆனால், உங்களது மேகக் கணிமையில் சேமிக்கப்பட்டுள்ள விஷயத்தை இணைய வசதியுள்ள அனைத்து கணினிகளிலும், அலைபேசியிலும் கூட பயன்படுத்த முடியும்.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் புதிய ஆண்ட்ராய்டு கைபேசி ஒன்று வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் உங்களது கூகுள் கணக்கை புகுபதிகை (அதாங்க... சைன் இன்) செய்தவுடன், உங்களது பழைய கைபேசியில் சேமித்து வைத்திருந்த தொடர்பு எண்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்ற பல விடயங்கள் தானாகவே வந்திறங்குவதை பார்த்துள்ளீர்களா? ஆம், அது மேகக் கணிமையின் மாயஜாலாம்தான். இதுபோன்று நமது பல்வேறு தினசரி நடவடிக்கைகளில் மேகக்கணிமையின் பங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
பிரபலமான சேவைகள் என்னென்ன?
கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன்டிரைவ், ட்ராப்பாக்ஸ் போன்றவை உலகளவில் பிரபலமானவை. இவர்களை தவிர்த்து இன்னமும் பலர் இந்த சேவையை வழங்கி வருகின்றனர்.
உதாரணத்திற்கு இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள டிஜிலாக்கர் எனும் இந்தியர்களுக்கான பிரத்யேக சேமிப்பகம். இந்த சேமிப்பகத்தில் உங்களது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை இணைத்துவிட்டால் எங்கேயெல்லாம் அரசாங்க அடையாள அட்டை உபயோகம் உள்ளதோ இந்த சேமிப்பகத்தில் உள்ள ஆவணங்களை காட்டினால் போதும்.
மேகக் கணிமையின் மூலம் வேறென்ன செய்ய முடியும்?
மேகக் கணிமையை பயன்படுத்தி தனிப்பட்ட/ அலுவல் சார்ந்த தகவலை சேமிப்பதை தவிர்த்து வேறென்னவெல்லாம் செய்ய முடியுமென்று தமிழக அரசின் 'கணினித் தமிழ் விருது' வென்றவரும் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைவருமான செல்வ முரளியிடம் கேட்டதற்கு, "கூகுள் ட்ரைவில் நீங்கள் இணைம் வழியே பயன்படுத்தும் கூகுள் டாக்ஸ் (Google Docs), கூகுள் ஸ்பிரட்ஷீட் (Google Spreadsheet) போன்றவற்றை பயன்படுத்தி உடனுக்குடன் ஒரு செல்பேசி செயலியையே உருவாக்கிட முடியும். அதுவும் இந்த ஸ்பிரட்ஷீட் எனப்படும் கணக்கீட்டுத் தாள் செயல்பாடு சாதாரண தனி நபர் பயன்பாடு முதற்கொண்டு மிகப்பெரிய கணக்கீடுகளை செய்யக்கூடியது. இதை செயல்படுத்திட சாதாரண உலாவி (பிரௌசர்) போதும் என்பதுதான் இதன் சிறப்பு," என்று அவர் கூறுகிறார்.
"கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை விண்டோஸ் இயங்குதளம் பதியப்பட்டுள்ள கணினியில் விண்டோஸும், மேக்ஓஎஸ் பதியப்பட்டுள்ள கணினியில் மேக்ஓஎஸ் மட்டும்தான் பயன்படுத்த முடிந்தது. ஆனால், தற்போது மேகக் கணிமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக எந்த இயங்குதளத்திலும், எந்த இயங்குதளத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகியுள்ளது."
மேகக்கணிமை சேமிப்பகம் பாதுகாப்பானதா?
"மேகக் கணிமையை பொறுத்தவரை தகவல் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அளவு வரை பிரச்சனையே இல்லை. ஆனால், உங்களது மேகக் கணிமை கணக்கின் புகுபதிகை விவரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியமானது. மற்ற கணினி சார்ந்த சாதனங்களை போலன்றி மேகக் கணிமையில் தரவு சேமிப்பளவை தேவைப்படும்போது அதிகப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது" என்று கூறுகிறார் செல்வ முரளி.
மேகக்கணிமை என்பது அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகிவிட்ட இந்த காலத்தில், தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கியமான தரவுகளை அதில் சேமிக்க விரும்புவர்கள், சேவை வழங்கும் நிறுவனம் கேட்கும் பணத்தை மட்டும் பார்க்காமல் அதன் நம்பகத்தன்மை, பாதுகாப்பு அம்சங்களை பார்த்துவிட்டு தகவல்களை பதிவேற்றுவது சிறந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :