15 நொடிகளில் உடலை 3டியாக மாற்றும் மாயக்கண்ணாடி

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

உடலை 3டியாக மாற்றும் மாயக்கண்ணாடி

அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த 'நேக்கட் லேப்ஸ்' என்னும் நிறுவனம், பயனர்களின் உடலை முப்பரிமாணத்தில் பதிவு செய்யும் 'உலகின் முதலாவது முப்பரிமாண ஸ்கேனரை' அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய 1990களுக்கு முன்பு வரை உடற்கட்டு (பிட்னெஸ்) சார்ந்த விடயங்களை தெரிந்துகொள்வதற்கு, பதிவுசெய்து பாதுகாப்பதற்கு குறிப்பிடத்தக்க வழியேதும் இல்லை. அதன் பிறகு, கைபேசி, ஸ்மார்ட் வாட்ச் போன்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.

இந்நிலையில், உங்களது உடலை பதினைந்தே நொடிகளில் ஸ்கேன் செய்து, முப்பரிமாண வடிவில் வழங்குவதுடன், உங்களது எடை, உடலிலுள்ள கொழுப்பின் சதவீதம், கொழுப்பற்ற பகுதியின் எடை போன்ற பல விதமான தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியை இந்த கருவி அளிக்கிறது.

மேலும், இந்த கருவியை பயன்படுத்தி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்து, உங்களது உடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்/ பின்னேற்றத்தையும் இதன் மூலம் காண முடியும்.

இதுபோன்ற கருவியின் மூலம் பெறப்படும் உடலின் மின்னணு வடிவத்தை கொண்டு எதிர்காலத்தில் மருத்துவம், பேஷன், வீடியோ கேம் போன்ற பல்வேறு விடயங்களில் புதுமையை புகுத்த முடியுமென்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1,650°C வெப்பநிலை; மணிக்கு 7,00,000 கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் விண்கலம்

சுமார் ஆறு வருடங்கள் பயணம் செய்து, சூரியனுக்குள் நுழைந்து ஆய்வு செய்யும் உலகின் முதல் விண்கலத்தை இன்னும் சில தினங்களில் நாசா விண்ணில் ஏவவுள்ளது.

பூமியை போன்று மனிதன் வாழ்வதற்கு தகுதியுள்ள மற்ற கிரகங்களை ஆய்வுச் செய்யும் பணியில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய விண்வெளி கழகம், இந்தியாவின் இஸ்ரோ போன்ற பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஆனால், சூரிய மண்டலத்திலுள்ள அத்தனை கோள்களும் சுற்றி வரும் சூரியனை அதனுடைய உட்சபட்ச வெப்பநிலையின் காரணமாக எவராலும் இதுவரை நெருங்க முடியவில்லை.

இந்நிலையில், சுமார் 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் சூரியனின் சுற்றுப்பாதையை மணிக்கு 7,00,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வந்து ஆய்வு செய்யும் 'பார்க்கர் சோலார் ப்ரோப்' என்னும் விண்கலத்தை வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியக் காற்று (Solar Wind) எப்படி உருவாகிறது என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பு அறிவிப்பு

கூகுள் நிறுவனம் தனது கைபேசி இயங்குதளமான ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பான 'ஆண்ட்ராய்டு 9 பை'யை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய பதிப்புகளுக்கு ஆல்பா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃரோயோ, ஜிஞ்சர்பிரட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஸ்மலோவ், நக்கெட், ஓரியோ போன்ற பெயர்களில் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களோடு கூடிய பதிப்புகளை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், கடந்த ஆறாம் தேதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 9வது பதிப்பை 'பை' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

"பயனர்களின் கைபேசி செயல்பாட்டை எளிமையாகவும், வேகமாகவும், திறன்வாய்ந்ததாகவும் மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் திறனை அடிப்படையாக கொண்டு ஆண்ட்ராய்டின் இந்த பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது.

இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - இணைய சமநிலை (நெட் நியூட்ராலிட்டி)

பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம், சமீப காலமாக இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பெரும் விவாதப்பொருளாகி உள்ள இணைய சமநிலை (நெட் நியூட்ராலிட்டி) குறித்து தெரிந்துகொள்வோம்.

இணைய சமநிலை என்றால் என்ன?

இணையதள சேவை நிறுவனமும், அரசாங்கமும் சட்டப்பூர்வமாக நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து இணையதளங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இணைய சமநிலை அல்லது நெட் நியூட்ராலிட்டி எனப்படும்.

அதாவது, இணைய சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளில் இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதன் பயன்பாட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிடுவதை முடக்கவோ, அதன் வேகத்தை குறைக்கவோ அல்லது மற்றவற்றைவிட அதிகப்படுத்தவோ, நாடு அல்லது இடம் சார்ந்து அதிக கட்டணத்தை வசூலிப்பதையோ அல்லது சில இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் இலவசமாக அளிப்பதையோ மேற்கொள்ள முடியாது.

இணைய சமநிலையற்ற நிலையால் யாருக்கு லாபம்?

இணைய சமநிலையற்ற சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் இணையதள சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றை மட்டும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேகமாக அளிக்கலாம். இதன் மூலம், ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் இணையதளங்களை ஒருவர் பார்க்க முற்பட்டால், ஒன்று அது மெதுவாக செயல்படலாம் அல்லது முடக்கப்படலாம்.

இதன் மூலம், ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு குறிப்பிட்ட இணையதள நிறுவனத்திடமிருந்து நேரடியான வருமானமும், அதன் காரணமாக அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வியாபாரத்தின் மூலமாக அந்த குறிப்பிட்ட இணையதள நிறுவனத்துக்கும் வருமானம் கிடைக்கும்.

இந்தியாவில் தற்போதைய நிலை என்ன?

இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இணையதள சேவையை வழங்கும் "இணைய சமநிலை" குறித்த டிராயின் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் (ஜூலை) ஒப்புதல் அளித்துள்ளதால் அதுசார்ந்த பிரச்சனைகள் இந்தியாவில் முடிவுக்கு வந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :