You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிரம்பி வழியும் மேட்டூர் அணை: பொங்கிப் பெருகும் காவிரி
கர்நாடகாவில் இருந்து அதிகரித்துவரும் நீர்வரத்தால், மேட்டூர் அணை 39வது ஆண்டில் இரண்டாம் முறை 120 அடியை எட்டியது.
கட்டப்பட்டு 85 ஆண்டுகள் முடிந்துள்ள மேட்டூர் அணை இதுவரை 39 ஆண்டுகள் மட்டுமே முழு கொள்ளவை எட்டியுள்ளது. 2018ம் ஆண்டு, ஜூலையில் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறையாக கிடைக்காத காரணத்தாலும், தமிழகத்தில் போதுமான மழையில்லாத காரணத்தாலும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நடப்பாண்டில் கர்நாடகாவில் கனமழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடந்த மாதம் 23ஆம் தேதி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அதன் பிறகு கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்ததாலும் மேட்டூர் அணையில் இருந்து தமிழக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த 2ம் தேதி முதல் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
நடப்பு ஆண்டில் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையிலிருந்து 62 ஆயிரம் கன அடி என மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
"வினாடிக்கு சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கன் அடி நீர் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் எட்டிய நிலையில், இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டத்தின் அளவு தற்போது 120.12அடியாக உள்ளது. அணையின் வரலாற்றில் இது 39 ஆண்டுகளில் நடப்பு ஆண்டில் 2வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது," என்று பொதுப்பணித் துறையின் கண்காணப்பு பொறியியல் அதிகாரி நடராஜன் தெரிவித்தார்
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆறு செல்லும் வழித்தடங்களில் 16 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வருவாய்த் துறை மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் மிகவும் தாழ்வான பகுதி என ஆறு கிராமங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றுப் படுகைகளில் சென்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்