You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: விமானத்தை திருடிய ஊழியர் - நடந்தது என்ன?
சியாட்டில் விமான நிலையத்தில் பயணியர் யாரும் இல்லாத விமானம் ஒன்றை திருடி, மேலேழுந்து பறந்து அருகிலுள்ள தீவில் மோதியவர் அந்த விமான நிலையத்தை சேர்ந்த ஊழியர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை திருடி, பறந்த அந்த ஊழியர் "ஹாரிசன் ஏர்" என்ற விமான நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக விமானத்தை கட்டி இழுப்பது மற்றும் பயணிகளின் பைகளை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது போன்ற பணிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதுவரை அந்த ஊழியரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அவரை ரிச்சர்ட் ரஸ்ஸல் என்று குறிப்பிட்டு வருகின்றன.
அந்த ஊழியர், உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலையில் அனுமதியில்லாமல் விமானத்தை இயக்கியதால் சியாட்டிலுள்ள டகோமா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட இந்த விமானத்தை இரண்டு ஃஎப்15 பைட்டர் ஜெட் விமானங்கள் துரத்தி சென்றன. ஆனால், புகெட் சவுண்ட் என்ற இடத்தில் விமானம் மோதியதில் அந்த நபர் பலியானார்.
இந்த நபர் உள்ளூரை சேர்ந்த 29 வயதானவர் என்று தெரிவித்திருக்கும் உள்ளூர் ஷெரீஃப் அலுவலகம் இதுவொரு 'தீவிரவாத சம்பவம் அல்ல' என்று கூறியுள்ளது.
"தீவிரவாதிகள் தண்ணீரின் மேலே வட்டமடிக்கமாட்டார்கள்" என்று குறிப்பிட்டு, ஜாலிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் சோகத்தில் முடிவடைந்துள்ளதாக தோன்றுகிறது என்று பியர்ஸ் வட்டார ஷெரிஃப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாக எபிசி7 நியூஸ் வெளியிட்டுள்ளது.
ரஸ்ஸலின் முன்னாள் சக பணியாளர் ஒருவர் அவரை 'மிகவும் அமைதியானவர்' என்று கூறியுள்ளார்.
"ரிச்சர்ட் மற்ற பணியாளர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டார். நான் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நினைத்து பெரிதும் வருந்துகிறேன்" என்று சியாட்டில் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய ரிக் கிறிஸ்டென்சன் கூறியுள்ளார்.
76 இருக்கைகளோடு இரண்டு எந்திரங்களை கொண்ட டர்போபிராப் பாம்பார்டியர் Q400 விமானம் 'ஹாரிசன் ஏர்' நிறுவனத்தின் துணை நிறுவனமான அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு சியாட்டில் டகோமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் மேலெழுந்து பறந்தது.
தாறுமாறாக பறந்த அந்த விமானத்தை, பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ஜெட் விமானங்கள் பறந்து கண்காணிக்க தொடங்கின.
ஒரு மணிநேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 30 மைல் தொலைவுக்கு அப்பால் இருக்கின்ற கெட்ரான் தீவில் இந்த திருடப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. ஜெட் விமானங்களால் இந்த மோதல் நிகழவில்லை..
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்