You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு
உடல் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண சிறந்த வழியை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக நம்புகின்றனர் நிபுணர்கள்.
தோலில் உள்ள பாக்டீரியா அக்கிளில் இருந்துகொண்டு எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெரிந்துவிட்டாலே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் அவர்கள்.
யார்க் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களை சேர்ந்த இரு குழுவினர் இந்த ஆய்வில் மூலக்கூறு பகுப்பாய்வின் முதல் படியை தாண்டியுள்ளதாக கூறுகின்றனர்.
இது வியர்வை துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தலைமுறை டியோடரன்ட் எனப்படும் துர்நாற்ற நீக்கியை உருவாக்குவதற்கான பாதையாக அமையக் கூடும். இத்தகவல் ’இ லைஃப்’ என்ற இதழில் கூறப்பட்டுள்ளது.
வியர்வை
தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது.
- உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. துர்நாற்றம் அற்ற இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
- முடி நிறைந்த தோள் பகுதி அக்கிளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. இவை மணமற்று இருந்தாலும் பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன.
டியோடரன்ட்டா அல்லது ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட்டா?
துர்நாற்ற நீக்கிகள் என்பவை உண்மையில் துர்நாற்றத்தை மறைக்க உதவுபவை. மேலும் அவை எத்தனால் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பொருள் மூலம் பாக்டீரியாவை அழிக்கின்றன.
ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட் என்பவை அலுமினியம் குளோரைடு கொண்டவை. இவை தோலில் உள்ள வியர்வையை வெளியிடும் நுண்ணிய துளைகளை அடைத்து வெளியாகும் வியர்வையின் அளவை குறைக்கின்றன.
நவீன கால டியோடரன்ட்டுகளை கை இடுக்கிற்குள் உள்ள அணுகுண்டை போன்றே பார்க்க முடியும் என்கிறார் யார்க் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியரும் கட்டுரையை இணைந்து எழுதியவருமான டாக்டர் கேவின் தாமஸ்.
துர்நாற்றத்தை போக்க பல பாக்டீரியாக்களை செயலிழக்க செய்வது அல்லது அழித்தொழிக்கும் பணியை இந்த டியோடரன்ட்டுகள் செய்வதாக கூறுகிறார் கேவின் தாமஸ்.
ஆனால் நமது அக்கிளிலுள்ள பல பாக்டீரியாக்களில் சிலவை மட்டுமே உடல் துர்நாற்றத்திற்கு காரணமாகின்றன என்கிறார் தாமஸ்.
ஸ்டாஃபிலோகாக்கஸ் ஹோமினிஸ் எனப்படும் இவ்வகை பாக்டீரியா வியர்வையிலுள்ள உடல் துர்நாற்றத்துக்கு காரணமான சில கூட்டுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை விழுங்கும் நகரக்கூடிய புரதத்தை பயன்படுத்துவதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.
உடல் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நுட்பத்தை கண்டறிவதற்கான முதல் படிக்கல்லாக இந்த ஆய்வு முடிவை பயன்படுத்தமுடியும் என்கின்றனர் கேவின் தாமஸும் அவரது உடன் பணிபுரிபவர்களும்.
நகரக்கூடிய புரதங்களை தடுத்து நிறுத்தும் பொருட்களை கொண்ட தெளிப்பான் அல்லது உருளும் தன்மை கொண்ட ஒரு கண்டுபிடிப்பாக அது இருக்கும் என்கின்றனர் அவர்கள். உயிரி தொழில் நுட்பம் மற்றும் உயிரி அறிவியல் ஆராய்ச்சிக்குழு மற்றும் யூனிலீவர் நிறுவனத்தின் தொழிற்கொடை வாயிலாக இதற்கான ஆய்வுகள் நடக்கின்றன.
இதற்கெல்லாம் முன்பாக உடல் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் உள்ளன.
வியர்வையை தடுத்து நிறுத்துங்கள்
- தினமும் சுத்தமாக இருத்தல்
- அக்கிளை பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உள்ள சோப் உதவியுடன் கழுவுங்கள்
- டியோடரன்ட் அல்லது ஆன்டிபெர்ஸ்பெர்ஸ்பிரன்ட் பயன்படுத்தவும்
- வியர்வை விரைவில் காயும் வகையில் அக்கிளிலுள்ள முடிகளை நன்கு மழிக்கவும்.
- உடலில் நன்கு காற்று படும்படியான பருத்தி ஆடைகளை அணியவும்.
- தூய்மையான ஆடைகளை அணியவும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்