You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அளவுக்கு அதிகமாக திரவ உணவு உயிருக்கு ஆபத்தானதா?
உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவர்கள் பெரும்பாலும் நோயாளிகளை திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குவார்கள். ஆனால், அதிக தண்ணீரை விரைவாக அருந்தினால் அது ஆபத்தில் முடிவடையும் என்பது 59 வயது பெண் ஒருவரைப் பொருத்தவரை உண்மையாகியிருக்கிறது.
சிறுநீர் தொற்று ஒன்றை தவிர்க்க எடுத்த முயற்சிகளை தொடர்ந்து, அந்த பெண்மணி ஹைபோனேடேரேமியா அல்லது நீர் போதை என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் நோய்கள் குறித்த கட்டுரைகளை எழுதும் மருத்துவர்கள், ஆரோக்கியமான மனிதர்களிடையே ஏற்படும் ஓர் அரிதான நிகழ்வு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், நோயாளிகள் திரவ உணவுகளை உட்கொள்வதற்கு போதுமான வழிகாட்டுதல் தேவை என்று கூறியுள்ளனர்.
இந்த பெண்மணியின் நோய் குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், திரவ உணவுகள் உட்கொள்வது முக்கியம்தான் ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்கின்றனர்.
வியர்வை வழிந்தாலோ அல்லது காய்ச்சலில் அவதிப்பட்டாலோ எவ்வளவு நீர் அருந்துவது பாதுகாப்பானது என்பதை மருத்துவர்கள் மிகவும் குறிப்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்தத்தில் சோடியத்தின் அளவு வழக்கத்துக்கு மாறாக குறைந்த அளவில் இருக்கும் போது ஹைபோனேடேரேமியா என்ற நிலை ஏற்படுகிறது.
ரத்தத்தில் உள்ள செல்களில் நீரின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த சோடியம் உதவுகிறது.
கட்டுப்பாடு இழப்பு
லண்டனில் உள்ள ஏ&இ என்ற மருத்துவமனையில் மேலே சொல்லப்பட்டுள்ள பெண் நோயாளி, தன்னுடைய தொற்று நோய்க்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு பக்கவாதம் வந்திருப்பதாக அந்த பெண்மணி நினைத்திருந்தார். மேலும். தன்னால் அவரது உடல் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தன் உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்பட்டதையும் அவர் நினைவு கூறுகிறார்.
உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரும் நோக்கில், சிலமணி நேரங்களில் ஆலோசனைப்படி பல லிட்டர் தண்ணீரை அருந்திய தகவலை அவர் மருத்துவர்களிடம் வெளிப்படுத்தினார். அடுத்த 24 மணி நேரங்களுக்கு திரவ உணவுகளை உட்கொள்ள மருத்துவர்கள் கட்டுப்பாடு விதித்தனர். பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால், அதன்பின் தான் வலுவிழந்தது போல உணர்ந்ததாகவும், சுமார் ஒரு வாரம் கழித்து சாதாரண நிலைக்கு மீண்டும் திரும்பியதை போன்று உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன், மற்றொரு பெண் ஒருவர் காஸ்ட்ரோ என்டெரிட்டிஸ் எனப்படும் இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக நீரை அருந்தியதால் ஹைபோனேடேரேமியா நிலை உருவாகி அதன் பின் மரணமடைந்தார்.
எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்?
லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் நியூட்டிரிஷன் மற்றும் டயட்டிக்ஸ் துறையின் ஓய்வுப்பெற்ற பேராசிரியரான டாம் சாண்டர்ஸ், பெண்கள் தினசரி 2 லிட்டர் தண்ணீரும், ஆண்கள் 2.5 லிட்டர் தண்ணீரும் சராசரியாக உட்கொள்ள வேண்டும் என்கிறார்.
தண்ணீர் தேவைகள்
உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது
மொத்த திரவம் உட்கொள்ளுதலிலிருந்து, உணவு மூலம் சுமார் 20 % தண்ணீர் கிடைக்கிறது.
ஆனால், ஒரு நாளைக்கு பெண்கள் சுமார் 1.6 லிட்டர் திரவம் தேவைப்படுகின்றது. ஆண்களுக்கு இது 2 லிட்டராக உள்ளது.
போதுமான தண்ணீரை அருந்துகிறீர்கள் என்றால் சிறுநீர் மங்கலான வைக்கோல் நிறத்தில் இருக்கும்
போதுமான தண்ணீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் மிகவும் மங்கலாக இருக்கும்
பால், பழச்சாறு, டீ மற்றும் காஃபி போன்ற மற்ற பானங்களும் தண்ணீர் தரும்