முகத்தை அழகாகக் காட்டும் செல்போன் செயலி: வடகொரியாவில் அறிமுகம்

வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்

பட மூலாதாரம், DPRK Today

தங்களது முகங்களை வித்தியாசமான வடிவங்களில் பார்க்க உதவும் "பியூட்டி ஆப்" எனப்படும் முகத்தை அழகாக்கி காட்டும் செயலி முதல் முறையாக வட கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முகத்தை அழகாக்கி காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கம்யூனிச நாடான வட கொரியாவில் முதல் முறையாக போம்ஹயங்கி 1.0 (ஸ்பிரிங் சென்ட்) என்ற "பியூட்டி ஆப்" திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.

வட கொரிய செய்தி நிறுவனமான டிபிஆர்கே டுடேவின் செய்தியின்படி, இந்த செயலியானது அதன் பயன்பாட்டாளர்களுக்கு "எந்த விதமான ஒப்பனை யுக்திகள் தங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை செயலியிலுள்ள வேறுபட்ட தெரிவுகளை பயன்படுத்தி தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலியை உருவாக்கிய கேயான்ஹங் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தங்களது செயலி "வட கொரிய பெண்களிடமிருந்து மிகவும் நல்லவிதமான கருத்துகளை பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

"நீங்கள் அழகாவதை நீங்களே பார்ப்பீர்கள்" என்று அந்த செயலியின் முன்னோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்

பட மூலாதாரம், ARIRANG-MEARI

வட கொரியாவில் சட்டவிரோதமாக பார்க்கப்படும் தென் கொரிய நாடகங்களின் விளைவாக நாட்டில் சரும பராமரிப்பு மற்றும் அழகு சார்ந்த விடயங்களில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது சோலை தலையிடமாகக்கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான டெய்லி என்கே,.

வட கொரியாவில் இரண்டு அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அந்நாட்டின் எல்லையை கடந்து உள்ள உலகின் மற்ற பகுதிகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்வதென்பது தொழில்நுட்பரீதியாக அந்நாட்டில் சாத்தியமில்லை.

மாறாக, உலகளாவிய அளவில் கிடைக்கக்கூடிய செய்தி, தகவல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் உள்நாட்டு சந்தை உள்ளது.

ஆண்ட்ராய்டு மற்றும் பல்வேறு கணினி இயங்குதளங்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் "சாக்கர் பியர்ஸ் பாட்டில்" என்னும் முப்பரிமாண கால்பந்து விளையாட்டை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அமெரிக்க ராணுவத்தினரை எதிரிகளாக கொண்ட "ஹன்டிங் யாங்கீ" என்னும் விளையாட்டும் மிகவும் பிரபலமானது என்கிறது சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்னும் பத்திரிக்கை.

வட கொரியாவின் முதல் பியூட்டி ஆஃப் அறிமுகம்

பட மூலாதாரம், AFP

வட கொரியா தனக்கென பிரத்யேக கையடக்க கணினிகளையும், உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதள பதிப்பையும், 35 இலட்சத்துக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களையும் கொண்டுள்ளதென ஜப்பானின் நிக்கி செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வட கொரியா மற்ற நாடுகளிலிருந்து ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையிலுள்ள ஓட்டைகளைத் தவறாக பயன்படுத்தி சீனாவிலிருந்து கைபேசி மற்றும் மற்ற மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதால், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகளினால் அதன் அளவை சரியாக வரையறுக்க இயவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :