You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் உணவு என்ன?
இங்கிலாந்தில் உள்ள டோர்செட் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கடல்வாழ் ஊர்வன உயிரியின் படிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது உயிரிழக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இக்தியோசார் (Ichthyosaur) என்று அழைக்கப்படும் அந்த உயிரினம் கடைசியாக சிப்பி மீன்களை உணவாக உட்கொண்டிருந்ததை, அதன் இரைப்பை பகுதியில் இருந்த எச்சங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தபோது அது வயது மூப்பு அடையாத இளம் ஊர்வனவாகவே இருந்துள்ளது.
இந்த வகை ஊர்வனவற்றுள் ஒரு இளம் உயிரினத்தின், தனித்துவம் மிக்க படிமம் ஒன்று கண்டெடுக்கப்படுவது இதுவே முதன் முறை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"அந்தப் படிமத்தின் விலா எலும்புகளுக்கு மத்தியில் கொக்கி போன்ற சிறிய அமைப்புகள் பாதுகாப்பாக இருந்தது," என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீன் லோமக்ஸ் கூறுகிறார்.
"இவை வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த சிப்பி மீன்களின் துடுப்புகள். எனவே அந்த இளம் இக்தியோசார் இறக்கும் முன்பு கடைசியாக உண்ட உணவு சிப்பி மீன்களே," என்கிறார் அவர்.
இக்தியோசார்களின் சுமார் 1000 படிமங்கள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வந்தாலும், இளம் மற்றும் புதிதாக பிறந்த இக்தியோசார்களின் படிமங்கள் மிகவும் அரிதானவையாகவே உள்ளன.
டோர்செட் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் படிமத்தின் மண்டை ஓட்டை வைத்து அது இளம் வயதிலேயே உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நைஜல் லார்க்கின், பிரிட்டனின் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள லேப்வொர்த் அருங்காட்சியகத்தில் இருந்த இந்த இளம் உயிரினத்தின் படிமத்தின் முக்கியத்துவத்தை ஒரு ஆய்வின்போது அறிந்துள்ளார்.
ஆனால், அதுவரை அது எங்கு கண்டெடுக்கப்பட்டது மற்றும் அதன் வயது ஆகியன பற்றிய தரவுகள் ஆவணப்படுத்தப்படாமல் இருந்தன.
பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தப் புதை படிமத்துடன் ஒட்டியிருந்த சிறிய பாறைத் துகளை ஆய்வு செய்ததில், அது 19.9 கோடி முதல் 19.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று கண்டுபிடித்தனர்.
"பாறை இடுக்குகளில் மறைந்து கிடக்கும் நுண்ணிய புதை படிமங்களைக் கண்டறிந்து ஆராய்வதன் மூலம் பல பல உயிரினங்களின் மர்மங்களை அறிய முடியும்," என்கிறார் நைஜல் லார்க்கின்.
'ஹிஸ்டோரிகல் பையாலஜி' எனும் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- "பைபிள்" வாசிக்கப்பட்டதால் பீதியடைந்து ரயிலைவிட்டு ஓடிய பயணிகள்
- லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரியின் தாக்குதல் நோக்கம்
- இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
- மோதி குறித்தும், விருதை திருப்பித் தருவது குறித்தும் பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?
- காஷ்மீர்: இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைதாரிகள் தாக்குதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்