You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடல் வாழ் உயிரினங்களின் அழிவை கணிக்க திமிங்கலத்தை கொண்டு ஆய்வு
20 ஆம் நூற்றாண்டு காலத்தில் திமிங்கலங்களின் உடல் அளவு சுருங்குவதைவைத்து, வன உயிரினங்கள் எப்போது சிக்கலில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு உதவலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
வேட்டையாடுவதின் தாக்கத்தால், 20 வது நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் நான்கு திமிங்கல இனங்களின் சராசரி உடல் அளவு விரைவாக குறைந்துவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால் திமிங்கிலத்தின் எண்ணிக்கை சரிவதற்கு 40 வருடங்களுக்கு முன்பே , எச்சரிக்கை சமிக்ஞைகள் காணப்பட்டன.
இந்த ஆய்வு `இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் பரிணாமம்` இதழில்( Nature Ecology and Evolution journal) வெளியாகியுள்ளது.
1900 மற்றும் 1985ம் ஆண்டுகளுக்கு இடையில் கப்பல்களால், வணிக ரீதியாகப் பிடிக்கப்பட்ட திமிங்கலங்களின் உடல் அளவை கொண்ட ஏராளமான ஆவணங்களை சுவிட்சர்லாந்தில் ஜூரிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிளெமெண்ட்ஸ் மற்றும் அவரது சக பணியாளர்கள் ஆராய்ந்தனர்.
1985ம் ஆண்டுக்கு பிறகு, உலக அளவில் திமிங்கலங்களை வேட்டையாடுவதற்கு தடை கொண்டுவரப்பட்டது.
நீல நிற திமிங்கலம், பிஃன், சேய் மற்றும் ஸ்பெர்ம் வகை திமிங்கலம் ஆகிய விதவிதமான திமிங்கலங்கள் தொடர்பான தரவுகளை ஆராய்ந்ததில், அவைகளின் உடல் அளவுகள் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
''1905ம் ஆண்டு இருந்ததை விட, 1980களில், ஸ்பெர்ம் வகை திமிங்கலத்தின் உடல் அளவு நான்கு மீட்டர்கள் குறைவானதாக இருந்தது,'' என்கிறார் ஆய்வாளர் கிளெமெண்ட்ஸ்.
கடலில் உள்ள பெரிய உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டதால், இந்த நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.
"இதன் அர்த்தம் திமிலங்களின் எண்ணிக்கை சரிவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்சரிக்கை அறிகுறிகளை கண்டறியக் கூடியதாக இருந்தது என்பதுதான்," என்று கிளமெண்ட்ஸ் கூறினார்.
இதேபோன்ற போக்கு முன்பு பல மீன் வகைகளில் காணப்பட்டபோது, அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதன் விளைவாக இந்த நிலை ஏற்பட்டது என்று புரிந்துகொள்ளப்பட்டது.
கடல் வாழ் உயிரினங்களின் சராசரி உடலின் அளவில் உள்ள மாற்றங்களைக் கண்காணிப்பது, அவைகளின் எண்ணிக்கை சரிந்து விடும் ஆபத்தில் உள்ளதா என்று கணிக்க உதவும் என்று இந்த முடிவு தெரிவிக்கிறது.
"எங்களது தொழில் நுட்பத்தை, அழிந்து விடும் என்ற கவலைகள் நிலவும் பிற உயிரினங்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். மேலும், அழிவை சந்திக்கும் உயிரினங்களை பாதுகாக்க தேவையான தலையீடு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இது உதவும்,''என்கிறார் கிறிஸ்டோபர் கிளெமென்ட்ஸ்.
பிற அறிவியல் செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்