தமிழகத்தில் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களாக அதிகரிப்பு

தமிழகத்தில், அரசுப் பணிபுரியும் பெண்களுக்கு, பேறுகால சலுகையாக வழங்கப்படும் 6 மாதகால மகப்பேறு விடுப்பை 9 மாத காலமாக உயர்த்துவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
சமீபத்தில், மத்திய அரசு பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கும் முடிவை சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பேரவை விதி 110 இன் கீழ் இன்று சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
சென்னை கீழ்பாக்கம் உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளில், 357 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் 497 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அரங்க உபகரணங்கள் உள்ளிட்டவை நிறுவப்படும் என்பன உள்ளிட்ட சுகாதாரத்துறை தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பிலான பேச்சுக்கு அனுமதி வழங்க வழங்கப்பட்டதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி 110 இன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடுவதற்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டனர்.








