எய்ம்ஸ் மருத்துவ மாணவர் மரணத்தில் சந்தேகம்: நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பட்டமேற்படிப்பு பயின்று வந்த தமிழக மாணவர் சரவணனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சரவணனின் தந்தை கணேசன் ரிட் மனுவொன்றை டெல்லி உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பட மூலாதாரம்,
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சரவணன் (26) டெல்லி கெளதம் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் தனது அறையில் இறந்து கிடந்தார்.
அவரது அறையில் இருந்து ஊசி போடுவதற்கான குழாயை கைப்பற்றியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவர் இறந்தது அவரது பெற்றோருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
சரவணனோடு பள்ளி மற்றும் பட்டபடிப்பு பயின்ற மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் சரவணனுக்கு நீதி வேண்டும் என்று பதிவிட்டிருந்தனர்.
பி பி சியிடம் பேசிய கணேசனின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், மாணவன் சரவணன் இறப்பு தற்கொலை இல்லை என அவரது பெற்றோர் நம்புகின்றனர் என்றார்.
''சரவணன் தனது பள்ளிப படிப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார். அவர் பட்டமேற்படிப்பு படிக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்ததை சாதனையாக எண்ணியுள்ளார் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. இந்த நிலையில்அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை. அவரின் மரணத்திற்கான காரணம் வெளிவர வேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர்,'' என்றார். மேலும், இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
சரவணனின் மரணம் குறித்த வழக்கு பற்றி தில்லி காவல் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜன் பகத்திடம் பேசிய போது,'' இறந்த மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகுதான் இது கொலையா அல்லது தற்கொலையா என்று தெரியவரும். அதன் பிறகு தான் முதல் தகவல் அறிக்கையை பெற்றோரிடம் அளிக்க முடியும், '' என்றார்.












