16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம்
இந்தியாவின் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களின் ஒருவரான இரோம் ஷர்மிளா, தான் 16 வருடமாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், PTI
மேலும், தான் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
மணிப்பூர் மற்றும் வேறு சில வட கிழக்கு இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் (ஆயுதப் படையின் சிறப்பு அதிகார சட்டம்), பாதுகாப்புப் படையினருக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தை அளிப்பதாகவும், அந்தச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய ஷர்மிளா, அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இத்தனை ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஷர்மிளாவுக்கு, கடந்த 14 வருடங்களாக மூக்கு வழியாக குழாய் பொருத்தப்பட்டு கட்டாயமாக உணவு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தான் திருமணம் செய்ய கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இரோம் ஷர்மிளா மேலும் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.








