ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோருகிறது தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை அறிய விரும்புவதாகவும் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டப்பிரிவு 435ன் கீழ் மத்திய அரசின் கருத்தைக் கோருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
படக்குறிப்பு, சட்டப்பிரிவு 435ன் கீழ் மத்திய அரசின் கருத்தைக் கோருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் தரப்பில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசிடம் முறையிட்டுள்ளதாகவும், அதிலும் நளினி தரப்பில் தமிழக அரசு தங்களை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட சிறை கைதிகள் 24 வருடங்களாக சிறையில் உள்ள காரணத்தாலும், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இந்த நால்வரும் வெளிநாட்டு பிரஜைகள் என்கிற காரணத்தாலும் அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில், இந்த ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது. தற்போது இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.