சிறார் குற்றவாளிகள் வயது வரம்பைக் குறைக்கும் சட்டத்திருத்தம் நிறைவேறியது

பட மூலாதாரம், AP
இந்தியாவில் கொலை, மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை தண்டிக்கும்போது 18 வயதுவரை அவர்களை சிறார் குற்றவியல் தண்டனைச்சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று தற்போதைய இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதைத் திருத்தி 16 ஆண்டுகளைக் கடந்தவர் அனைவருமே வயதுக்கு வந்தவர்களாக கருதப்பட்டு மற்றவர்களைப் போல பொதுவான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும் சிறார் குற்றவியல் தண்டனைச் சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்ற மேலவையில் செவாய்க்கிழமை நிறைவேறியது.
இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட, டில்லி மருத்துவ மாணவியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட்ட சிறுவன், இந்தியாவின் சிறார் குற்ற தண்டனைச் சட்டத்தின் கீழ் அதிக பட்ச தண்டனையாக 3 ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை விடுவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது இவருக்கு பதினேழு வயது என்பதால் மற்ற குற்றவாளிகளிடமிருந்து இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிறார் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty
நடந்த குற்றத்தின் கொடூரத்திற்குக் காரணமான அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டத் தண்டனை போதுமானதல்ல என்று கொல்லப்பட்ட மாணவியின் குடும்பமும், பெண்ணுரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் கடும் அழுத்தங்களை கொடுத்தனர்.
அந்த பின்னணியில் இன்றைய நாடாளுமன்ற மேலவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதா ஏற்கனவே இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையில் மே மாதத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இன்று மேலவையிலும் இது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டதும் இது சட்டமாகும்.
அதேசமயம், இந்த சட்டத்திருத்தம் சிறார் உரிமைகளுக்கு எதிரானது என்றும், சிறார் குற்றங்களை குறைப்பதைவிட, இது சிறார்களை மேலதிகமாக குற்றவாழ்க்கையை நோக்கித்தள்ளும் சாத்தியங்களே அதிகம் இருப்பதாகவும் கவலைகளும் எழுப்பப்பட்டுள்ளன.












