சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்
படக்குறிப்பு, விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

பட மூலாதாரம், bbctamil

படக்குறிப்பு, சிறிய சாலைகள் கூட வெள்ள நீரில் மூழ்கியுள்ளன

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்
படக்குறிப்பு, வெள்ள நீர் எந்த அளவுக்கு தேங்கியிருந்தது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

பட மூலாதாரம், bbctamil

படக்குறிப்பு, வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது

சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்
படக்குறிப்பு, முன்னர் ஏரிகள் இருந்த இடங்களில் வீடுகளை கட்டியவர்களின் நிலை இதுதான்

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை
படக்குறிப்பு, சென்னையிலுள்ள பல சுரங்கப் பாதைகளில் நீரின் அளவு குறையவில்லை

நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.
படக்குறிப்பு, நீர்நிலைகளின் கரையோரங்களில் இருந்தவர்களின் நிலை மிகவும் மோசமானது.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

பட மூலாதாரம், BBCtamil

படக்குறிப்பு, பல வீடுகளின் கீழ் தளங்கள் முழுவதும் நீர் புகுந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

சாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

பட மூலாதாரம், bbctamil

படக்குறிப்பு, சாலைகளில் ஓடும் நீர் முற்றாக வடிய பல நாட்களாகலாம் எனக் கருதப்படுகிறது

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.
படக்குறிப்பு, ஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன
படக்குறிப்பு, புறநகர் பகுதிகளில் வீடுகளைக் கட்டும்போது நில ஆவணங்கள் கவனமாகப் பார்க்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.

இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.