ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், அ.இ.அ.தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

பட மூலாதாரம், BBC World Service
இதற்கான அதிகாரபூர்வ அறிப்பை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அ.தி.மு.கவின் ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின் படி தான் போட்டியிடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் சில நாட்களுக்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜூன் 27ஆம் தேதியன்று அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் முதல்வர் பதவியையும் இழந்தார்.
பிறகு, மேல் முறையீட்டில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், கடந்த மே 23ஆம் தேதியன்று மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்றார்.
அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள், ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதால், அதற்கு ஏதுவாக அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.








