உடைமாற்றும் இடத்தில் கேமரா - ஸ்மிருதி இரானி புகார்
ஆயத்த ஆடைகள் விற்பனைக் கூடத்தின் உடை மாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய காமிராவை கண்டு அதிர்ச்சியுற்ற மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty
கோவாவிலுள்ள துணிக்கடை ஒன்றுக்கு இரானி சென்றிருந்தபோதே அவர் இதைக் கண்டு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கலாங்குட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் லோபோ இது குறித்து குறிப்பிடுகையில், தானே அக்கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அப்போது பெண்களின் உடை மாற்றும் காட்சிகளின் வீடியோ பதிவுகள் உள்ளதை உறுதி செய்துள்ளதாகவும் கூறினார்.
அவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
கோவா காவல்துறையினர் இந்த விஷயம் தொடர்பில் அந்த விற்பனைக் கூடத்தின் ஊழியர்கள் 4 பேரை கைது செய்து, அக்கடையில் இருந்த கண்காணிப்பு வீடியோ பதிவுகளையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.
மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தை அடுத்து கோவாவில் அமைந்துள்ள அனைத்து உடைகள் விற்பனை கூடங்களிலும் காவல்துறையினர் சோதனைகளைத் தொடங்கியுள்ளார்கள்.
மேலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவதற்கு உணவுக் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கோவா காவல்துறை அறிவித்துள்ளது.
ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஃபேப் இந்தியா நிறுவனமோ, அந்தக் கண்காணிப்பு கேமராக்கள் உடைமாற்றும் இடத்துக்கு வெளியே இருந்தன என்று கூறியுள்ளார்.












