ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலவருமான ஜெயலலிதா மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவதாக இந்திய உச்சநீதிமன்றம் திங்களன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் அந்த வழக்கின் அரச வழக்கறிஞரான பவானி சிங்கின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரால் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்று அவர் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி அன்று சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு 3 வார காலத் தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

திங்களன்று உச்சநீதிமன்றத்தில் பவானி சிங்கின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேந்திர ராய், பவானி சிங்கின் உடல் நிலை தற்போது சரியாகியுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராக தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, இந்த சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை மீது வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹன் மற்றும் ஜே.செல்மலேஷ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த கட்ட விசாரணைகளில் பவானி சிங் தொடர்ந்தும் ஆஜராக வேண்டும் என்றும், எந்த காரணங்களை காட்டியும் அவர் ஆஜராவதிலிருந்து விலகக்கூடாது என்றும் அறிவுறுத்தியது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக கிட்டத்தட்ட 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குவித்துள்ளதாகத் தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிகட்ட விசாரணைதான் தற்போது நடந்துவருகிறது.

அந்த வழக்கில் அரச வழக்கறிஞர் அவருடைய இறுதி வாதங்களை முன்வைக்க தாமதம் செய்ததற்காகவும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிரிந்து தவறியதற்காகவும், பவானி சிங்கிற்கு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று கிட்டத்தட்ட 60,000 ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தள்ளுபடி ஆனதை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.