போதைப்பொருள் வழக்கில் சுதாகரன் விடுதலை

முன்னாள் வளர்ப்பு மகன் விடுதலை
படக்குறிப்பு, முன்னாள் வளர்ப்பு மகன் விடுதலை

ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் வி.என்.சுதாகரன் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

முதல்வரின் தோழி சசிகலாவின் நெருங்கிய உறவினரான சுதாகரன் 1991-96 ஆட்சிக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். தனது வளர்ப்புமகன் என அவரை ஜெயலலிதா அறிவித்தார். நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியை அவர் திருமணம் செய்துகொண்டார். அத் திருமணம் அகில இந்திய அளவில் அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் சுதாகரன் தனது வளர்ப்பு மகனில்லை என்றார் ஜெயலலிதா. ஆனாலும் அவருக்கெதிராக பின் வந்த திமுக அரசு தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சுதாகரனும் ஒருவர். அவ்வழக்கு இன்னமும் பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.

வளர்ப்புமகனில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் சுதாகரன். பின்னர் 2001-ம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சுதாகரன் வீட்டிலும், அலுவலகத்திலும் போதைப்பொருள் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகளின்போது அவ்விரு இடங்களிலிருந்தும் 88 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றியதாகக் கூறினர். இதுதொடர்பாக, வி.என். சுதாகரன், தோட்டம் பாஸ்கரன், மொய்னுதீன், மற்றும் சலாஹூதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் சலாஹூதீன் தலைமறைவாக, மற்ற மூவர் மீது வழக்கு நடந்தது.

இந்த வழக்கில் இன்று திங்கள் தீர்ப்பளித்த போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சின்னப்பன் அவர்கள் பேர் மீதான, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி வழக்கிலிருந்து அவர்களை விடுவித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பிற்குப் பிறகு சுதாகரன் செய்தியாளர்களிடம் எல்லாம் இறைவனருள் என்றார்.