ஜின்னாவின் இரு ஒலிப்பதிவுகள் பாகிஸ்தானிடம் ஒப்படைப்பு

முகமது அலி ஜின்னா
படக்குறிப்பு, முகமது அலி ஜின்னா

பாகிஸ்தானின் ஸ்தாபகரான முகமது அலி ஜின்னாவின் இரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்களின் ஒலிப் பதிவுகளை இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஜின்னாவின் இந்த இரு அரிய பேச்சுக்களின் ஒலிப் பதிவுகளை பாகிஸ்தானியர் பெரிய பொக்கிஷமாக கருதுகின்றனர்.

முகமது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி வட மேற்கு எல்லை மாகாண மக்கள் இந்தியாவுடன் சேர விரும்புகிறார்களா அல்லது பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேசிய பேச்சும், அதே ஆண்டு அகஸ்ட் 11 ஆம் தேதிய அரசியில் சாசன நிர்ணய சபையில் அவர் ஆற்றிய சொற்பொழிவின் ஒலிப் பதிவும் நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுநாள் வரை இந்த ஒலிப் பதிவுகள் அனைத்திந்திய வானோலியின் காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆவணங்களை தாம் பாதுகாப்போம் என்றும் பத்திரமாக வைத்திருப்போம் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.