பிஹாரில் இலவச உணவு நஞ்சானதால் 22 பள்ளிச் சிறார்கள் பலி

மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
படக்குறிப்பு, மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பிஹாரில் பழுதடைந்த உணவை உட்கொண்ட பள்ளிச் சிறார்களில் குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர். பலர் சுகவீனமடைந்துள்ளனர்.

பலியான சிறார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மொத்தமாக 47 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் அருகிலுள்ள நகர்ப்புற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட எல்லா மாணவர்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்களே.

சாரண் மாவட்டத்தில் மஸ்ராக் என்ற கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளிக்கூடத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த சிறார்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் வருகையை ஊக்குவிப்பதற்காக இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உணவில் போதுமான சுத்தம் பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் இருந்துவருகின்றன.

பள்ளிக்கூடங்களில் வறிய மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தமிழகத்தின் சென்னை நகரிலேயே முதன்முதலாக 1925-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.