அதிமுக குழப்பம்: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; ஓபிஎஸ்-க்கு பின்னடைவா?

பட மூலாதாரம், ADMK
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு எந்த அளவுக்குப் பின்னடைவு?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தற்போது அ.தி.மு.க. எடப்பாடி தரப்பு - ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் எந்தப் பிரிவின் வேட்பாளருக்கு அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசை தனது தரப்பு வேட்பாளராக அறிவித்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
தங்கள் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், கட்சியின் பொதுக் குழுவைக்கூட்டி வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு உடனடியாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தனது தரப்பு வேட்பாளரான தென்னரசுவை வேட்பாளராக ஏற்க சம்மதமா எனக் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியது. ஆனால், ஒரே ஒரு வேட்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு படிவங்களை அனுப்பியதற்கு பன்னீர்செல்வம் தரப்பு கண்டனம் தெரிவித்தது.

பட மூலாதாரம், ADMK
மொத்த பொதுக் குழு உறுப்பினர்களான 2665 பேரில் 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்தது. பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களைப் பெற்ற நிலையில், ஒருவர்கூட கே.எஸ். தென்னரசிற்கு எதிராக, படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
இதையடுத்து தங்கள் தரப்பு வேட்பாளரான தென்னரசுவுக்கே அதிக பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை இன்று தில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார் அந்தக் கட்சியின் அவைத் தலைவரான தமிழ் மகன் உசேன்.
இதற்கிடையில், இன்று காலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வைத்தியலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், இரட்டை இலை வெற்றிபெறுவதற்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும்கூறி, ஆச்சரியப்படுத்தினர்.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரமளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரம், தற்போதைய இடைத் தேர்தலுக்கு மட்டும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவே அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

"தான்தான் நிஜமான அ.தி.மு.க. என்று காண்பிப்பதில் எடப்பாடி கே. பழனிச்சாமி கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டார். இதற்குக் காரணம், ஓ. பன்னீர்செல்வத்திடம் ஒரு தொடர்ச்சியான உறுதி இல்லாததுதான். அவரைக் கட்சியைவிட்டு நீக்கிய பொதுக்குழுவே வேட்பாளரைத் தேர்வுசெய்யும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டபோதே அவருக்குத் தோல்வி உறுதியாகிவிட்டது. இப்போது இரட்டை இலைக்காக விட்டுக்கொடுப்பதாகச் சொல்கிறார். இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது என்று நினைப்பவர் அந்தச் சண்டையை ஆரம்பித்திருக்கவே கூடாது. 2017ல் இவர் தர்மயுத்தம் துவங்கியதால்தானே இரட்டை இலை முடங்கியது. அப்போது மட்டும் இரட்டை இலை முடங்கியது பரவாயில்லையா? எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, அ.தி.மு.க. ஜானகி அணி - ஜெயலலிதா அணி என பிரிந்தபோது, ஜெயலலிதா அப்படி நினைக்கவில்லையே? அவர் துணிந்து போட்டியிட்டார்.
ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இப்போது தோற்றுவிடுவோம் என்பது புரிந்துவிட்டது. அதனால் பின்வாங்கிவிட்டார். இனிமேல் அவருக்கு சாதகமான சூழல் ஏற்படுவது கடினம். பா.ஜ.க. ஏதாவது வாக்குறுதி அளித்து, அதன் காரணமாக வேட்பாளரை அவர் திரும்பப் பெற்றிருந்தால், பெரிதாக ஏதும் கிடைத்துவிடாது. மீண்டும் அ.தி.மு.கவிற்குச் சென்றால்கூட இனி எடப்பாடிக்கு இணையான பதவி கிடைக்காது. எடப்பாடிக்குக் கீழேதான் பணிபுரிய வேண்டியிருக்கும்.
எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் தொடர்ச்சியான ஒரு உறுதி இருந்தது. ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலிருந்து எப்படி வெளியில் வருவது என்றுதான் ஆரம்பத்திலிருந்து யோசித்துவந்தார். எப்படித் தீவிரமாகப் போட்டியிட்டு, எடப்பாடி தரப்பை வெல்வது என்பதை அவர் யோசித்ததாகவே தெரியவில்லை. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் இந்தத் தேர்தலுக்கு மட்டுமே தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒரு சின்ன நம்பிக்கை அளித்தாலும், எதிர் காலம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவர் தரப்பிற்கு புரிய ஆரம்பித்திருக்கும்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இதுவரை 59 பேர் அந்தத் தொகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













