பாகிஸ்தான் எல்லை அருகே நவீன ராணுவ விமான தளம் அமைக்கும் இந்தியா - நோக்கம் என்ன?

குஜராத்தில் புதிய ராணுவ விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டல்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி உருது செய்தியாளர்

பிரதமர் நரேந்திர மோதி சென்ற வாரம் குஜராத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள 'டீசா' வில், ராணுவ விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் வான் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

புதிய ராணுவ விமான தளம், வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விமானப்படையின் பயன்பாட்டிற்கு முழுமையாக தயாராகிவிடும்.நாட்டின் பாதுகாப்புக்கான சிறந்த மையமாக இது உருவாகும் என்று அடிக்கல் நாட்டு விழாவின் போது பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

"சர்வதேச எல்லை (பாகிஸ்தான்) இங்கிருந்து வெறும் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. நமது படைகள் குறிப்பாக விமானப்படை டீசாவில் இருந்தால், மேற்கு எல்லையில் எந்த சவாலுக்கும் நாம் மிகவும் திறம்பட பதிலடி கொடுக்க முடியும்," என்று அவர் கூறினார்.

"இந்த தளம் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக கட்டமைக்கப்படுகிறது. இரண்டாவதாக மோதி, இந்தியாவின் 'முன்னோக்கிய கொள்கையை' முன்னெடுத்துச்செல்கிறார். இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தும், பின்தங்கி இருக்காது என்ற வலுவான கொள்கையை காட்ட அவர் முயற்சிக்கிறார். மோதியின் துணிச்சலையும் இது காட்டுகிறது," என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி சுட்டிக்காட்டினார்.

இது குஜராத்தின் ஐந்தாவது ராணுவ விமான தளமாகும். இது தவிர மாநிலத்தில் வதோதரா, ஜாம்நகர், புஜ் மற்றும் நாலியா (கட்ச்) ஆகிய இடங்களில் இந்திய விமானப்படையின் முக்கிய தளங்கள் அமைந்துள்ளன. இவற்றில், கட்ச் மற்றும் புஜ் தளங்கள் டீசாவை போலவே, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.

இது பாகிஸ்தான் மீது எந்த ஒரு சிறப்பான விளைவையும் ஏற்படுத்தாது என்று ராகுல் பேடி கருதுகிறார்.

பாகிஸ்தான் இப்போதுள்ள தனது ராணுவ விமான தளங்களை மேம்படுத்தக்கூடும் அல்லது விரிவுபடுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

டீசாவின் ராணுவ விமான தளத்தில், நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் சாதனங்கள் இருக்கும். இந்த விமான தளம் 4519 ஏக்கரில் கட்டப்படுகிறது. இந்த நிலம் ஏற்கனவே விமானப்படையிடம் இருந்தது. தற்போது அங்கு 20 கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. அதே சமயம் 22 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரும் கட்டப்பட்டுள்ளது.

மோதியின் துணிச்சலையும் இது காட்டுகிறது

பட மூலாதாரம், ANI

விமானப்படை தொடர்பான தகவல்கள்

இந்திய விமானப்படையில் தற்போது மொத்தம் 1645 போர் விமானங்கள் உள்ளன.

"அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இந்த திட்டத்தை தொடங்குவது பற்றி பேச்சு அடிபட்டது. ஆனால் அந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்குவதற்கு முன்பே அவரது அரசு பதவியை இழந்தது. அதன் பிறகு 20 ஆண்டுகளாக எந்தப்பணியும் மேற்கொள்ளப்படவில்லை," என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்.

மோதி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஓராண்டுக்கு முன், இந்த ராணுவ விமான தளத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்த தளம் இரண்டு கட்டங்களாக கட்டப்படும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டத்தில் போர் விமானங்களுக்கான ஓடுபாதைகள், இணையான டாக்சிவேகள், லூப் டாக்ஸி டிராக்குகள் மற்றும் ஸ்க்வாட்ரன் டிஸ்பெர்ஸல் பகுதி போன்றவை கட்டப்படும். இரண்டாம் கட்டத்தில், நவீன தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்படும்.

बीबीसी हिंदी
बीबीसी हिंदी

2023 டிசம்பருக்குள் முழுத் திட்டத்தையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திட்டத்தின் தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங்கை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்தின் புஜ் மாவட்டத்தில் உள்ள நாலியா மற்றும் ராஜஸ்தானில் உள்ள பலோதி ராணுவ விமான தளத்திற்கு இடையே, செயல் உத்தி ரீதியாக காலியாக உள்ள இடத்தை டீசா ராணுவ விமான தளம் நிரப்பும் என்று பல்வேறு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டீசா ஒரு முன்னரங்க தளமாக இருக்கும். மேலும் பாகிஸ்தானின் ஜகோபாபாத் மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ விமானத் தளங்களில் இருந்து தாக்குதல் நடந்தால் முதல் தற்காப்பு அரணாக இது செயல்படும். எந்த ஒரு மோதல் சூழல் ஏற்பட்டாலும், ஹைதராபாத் (பாகிஸ்தான்), கராச்சி மற்றும் சக்கர் ஆகிய நகரங்களை தாக்கும் திறன் இதற்கு இருக்கும்.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இது பயன்படும்

பட மூலாதாரம், Getty Images

எதிர்காலத்தில் குஜராத் அல்லது வடமேற்கு பகுதியில் அதாவது மகாராஷ்டிரா அல்லது அதற்கு அப்பால் ஏதேனும் பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இது பயன்படும் என்றும் விமானப்படை நிபுணர்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் கூறப்படுகிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட விமானங்கள்

"டீசாவின் ராணுவ விமான தளம், தாக்குதல் தளமாக இருக்காது, தற்காப்பு தளமாக இருக்கும். இங்கு மிக்-29 மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் இலகு ரக தேஜஸ் விமானங்கள் அணியாக நிறுத்தப்படும். இந்தியாவின் முக்கிய தாக்குதல் விமானங்கள், ராஜஸ்தானின் ஜோத்பூர் ராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டுளன. அங்கிருந்து இந்த தளத்திற்கு வந்துசேர ஐந்து முதல் ஆறு நிமிடங்களே ஆகும்" என்று ராகுல் பேடி தெரிவித்தார்.

இந்த ராணுவ விமான தளம், குஜராத்தில் உள்ள அகமதாபாத், பவநகர் மற்றும் வதோதரா போன்ற நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள ஒரு டிரில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள தொழில்துறை பகுதிகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டப்படுகிறது.

बीबीसी हिंदी
बीबीसी हिंदी

"டீசா தளம் கட்டுவதற்கு முக்கிய காரணம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பாதுகாப்பு ஆகும். இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். இது தாக்குதலுக்கு உள்ளானால், இந்தியா பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுவிடும். அதன் பாதுகாப்பிற்கு இந்த தளம் முக்கியமானது,"என்று ராகுல் பேடி குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லடாக்கில் சீனாவுடனான மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது விமானப்படையை பெரிய அளவில் நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

விமானப்படையை நவீனப்படுத்தும் இந்தியா

பட மூலாதாரம், ANI

இந்திய விமானப்படையின் பெரும்பாலான போர் விமானங்கள் ரஷ்யாவிலிருந்து வந்தவை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை MiG-21, MiG-29 மற்றும் சுகோய் ரக போர் விமானங்கள் ஆகும். இந்த போர் விமானங்களில் மிகவும் பழமையானது மிக்-21. இப்போது படிப்படியாக இந்த விமானங்களின் இடத்தை, ரஃபேல், மிராஜ், ஜாகுவார் மற்றும் பிற புதிய போர் விமானங்கள் ஆக்கிரமிக்கின்றன.

தற்போது 632 போர் விமானங்கள், 438 ஹெலிகாப்டர்கள், 250 போக்குவரத்துக் விமானங்கள் மற்றும் 304 பயிற்சி விமானங்கள் என மொத்தம் 1645 விமானங்கள் தன்னிடம் உள்ளன என்று இந்திய விமானப்படை தெரிவிக்கிறது.

சமீபத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான 'தேஜஸ்' மற்றும் 'பிரசண்டா' ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவை அதிக எண்ணிக்கையில் விமானப்படையில் சேர்க்கப்படும்.

தற்போது இந்தியாவில் 31 போர் விமான படைப்பிரிவுகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கையை 42ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் நவீனமயமாக்கலுடன் கூடவே, வரவிருக்கும் ஆண்டுகளில் எல்லைக்கு அருகில் மேலும் ராணுவ விமான தளங்கள் மற்றும் புதிய விமான ஓடுபாதைகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு நேற்றிரவு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: