ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல்: மிதக்கும் நகரில் இத்தனை வசதியா? முழு விவரம்

இந்தியாவிலேயே தயாரான விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோதி

பட மூலாதாரம், PMO

    • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து

இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதில் மிகப் பெரியதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுமான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் நரேந்திர மோதி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வியாழக்கிழமையன்று கொச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அதிநவீன ஆட்டோமேஷன் அம்சங்களுடன் கூடிய போர்க்கப்பலின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்தார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் இன்று முதல் இயக்கப்படவுள்ளதால், செப்டம்பர் 2ஆம் தேதியை, "பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு இது முக்கிய நாள்" என்று பிரதமர் நரேந்திர மோதி விவரித்தார்.

மேலும், "இந்தியா பாதுகாப்புத் துறையை தற்சார்புடையதாக மாற்றுவதற்கான அரசின் முயற்சிக்கான சான்றுதான் ஐ.என்.எஸ் விக்ராந்த்," என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன், கடற்படை தலைமை தளபதி ஆர்.ஹரி குமார் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம், கடற்படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விக்ராந்த் கப்பலில் பிபிசி செய்தியாளர் நேரில் பார்த்தவை

"இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?" - கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

"இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன" என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார்.

விக்ராந்த் கடற்படை கப்பல்
படக்குறிப்பு, விக்ராந்த் கடற்படை கப்பல்

இந்திய கடற்படை சேவைக்காக தளவாட ஆற்றல்களை கட்டியெழுப்ப, இந்த கப்பல் வழங்கப்பட்டு 13 ஆண்டுகளாகின்றன. 2022, செப்டம்பர் 2ஆம் தேதி இந்த கப்பல் இந்திய கடற்படை சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் விக்ராந்த் என்றால் 'துணிச்சலானவர்' என பொருள்படும். இந்த கப்பலை தேசப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி செப்டம்பர் 2ஆம் தேதி கொச்சி வருகிறார்.

கட்டுமான நிலையில் இருக்கும் கப்பல், கட்டியெழுப்பப்பட்டு கப்பல் கட்டுமான துறைமுகத்தை கடந்து விட்டால் பிறகு, அதை 'கமிஷன்' செய்யப்பட புறப்படுவதாக கடற்படை அழைக்கிறது.

கடற்படை பணியில் அர்ப்பணிக்கப்படும் நொடி முதல், இந்த கப்பலின் பெயரான விக்ராந்துக்கு முன்னால் இந்திய கடற்படையை குறிக்கும் 'ஐஎன்எஸ்' என்ற அடைமொழி சேர்க்கப்படும்.

கப்பலுக்கு உள்ளே

விக்ராந்த் கப்பலுக்குள் வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உள்ளே 2,300க்கும் மேற்பட்டோர் இப்போது வேலை செய்கிறார்கள்.

கப்பலுக்கு உள்ளே நுழைந்த மறுகணமே இது ஒரு கப்பல் என்பதை நீங்கள் எளிதாக மறந்து விடக்கூடும்.

262 மீட்டர் நீளம், கிட்டத்தட்ட 60 மீட்டர் உயரம் இருக்கும் இந்த கப்பல் நடுக்கடலில் பயணம் செய்யும்போது, எவ்வளவு உயர அலைகள் வந்தாலும் உள்ளே அதன் தாக்கம் உள்ளே தெரியாது. அதுவே துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தால், கப்பலுக்குள் எந்த சலனமும் இருக்காது.

விசாலமான பாதைகளும் ஏணிகளும் கப்பலை கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் இணைக்கின்றன. அதனால் எளிதாக இதனுள் நடமாடலாம்.

திறன் சார்ந்த குளிரூட்டி வசதி, நடுக்கடலில் இருக்கும்போது வெளியே நிலவும் வெப்பத்தின் பாதிப்பை, உள்ளே இருப்பவர்களுக்கு சிறிதும் தெரியாத வகையில் நிறுவப்பட்டிருக்கிறது.

விக்ராந்த் என்ற பெயர், சில பத்தாண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு விஷயங்களில் பரீட்சயமான இந்தியர்களுக்கு பிரபலமாக இருக்கக் கூடும். காரணம், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தப் பெயரில்தான் அழைக்கப்பட்டது.

விக்ராந்த் கடற்படை கப்பல்
படக்குறிப்பு, கடற்படை சேவையில் இணைய தயார் நிலையில் விக்ராந்த்

பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து 1961இல் இந்திய கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டபோது, அந்த கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என அழைக்கப்பட்டது. 1997இல் அந்த கப்பல் அதன் சேவையை நிறைவு செய்தது.

அதைத்தொடர்ந்து, இன்றைய விக்ராந்த் கப்பல் சுமார் 1,700 வீரர், வீராங்கனைகளின் பணி வாழ்விடமாக விளங்கப் போகிறது. இதுநாள் வரை இந்த கப்பல் அதன் கட்டுமான பணிக்காக 2,000 ஊழியர்களுக்கு வேலை கொடுத்து வந்திருக்கிறது.

செப்ம்டம்பர் 2இல் கடற்படை சேவையில் இணைக்கப்படுவதையொட்டி, விக்ராந்தை இறுதிப்படுத்தும் பணியின் அங்கமாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கேபிள்களை சரிசெய்வதிலும், உட்புறங்களுக்கு மெருகூட்டுவதிலும் மும்முரமாக உள்ளனர்.

இவர்களுக்கு இடையே, கப்பல் குழுவினர் மற்றும் எங்களைப் போன்ற பார்வையாளர்கள், அதன் மும்முரமான சூழலால் நிலவும் இரைச்சலுக்கு மத்தியில் வெல்டிங் பணிகளை பார்த்தவாறு நகர்கின்றனர்.

கப்பலுக்குள் நாம் அடுத்து பார்வையிட்ட பெட்டி 'TCR' என அழைக்கப்படும் த்ராட்டில் கட்டுப்பாட்டு அறை.

கடற்படை விக்ராந்த்
படக்குறிப்பு, டிசிஆர் என்றழைக்கப்படும் த்ராட்டில் கன்ட்ரோல் ரூம்

"கப்பலின் இதயத்தில் நாம் இருக்கிறோம். இந்த இடத்திலிருந்து, எரிவாயு விசையாழி இயந்திரங்களை இயக்க முடியும். இதனால்தான் இந்த மிதக்கும் நகரம் நகர்கிறது," என்று கப்பலின் மூத்த பொறியியல் அதிகாரியான லெஃப்டினன்ட் கமாண்டர் சாய் கிருஷ்ணன் கூறுகிறார்.

கப்பலில் உள்ள நான்கு என்ஜின்களும் சேர்ந்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகின்றன. அது ஒரு நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானது என்று கப்பல் குழுவினர் என்னிடம் கூறினர்.

இதையடுத்து, 'காலி' என்று கடற்படையினரால் அழைக்கப்படும் பகுதியை அடைந்தோம்.

இங்கு காபி போடும் இயந்திரங்கள், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகள், பெரிய சமையல் பாத்திரங்களை வைக்கும் கொள்கலன்கள் என அடிப்படையில், ஒரு கேண்டீன் அறைக்கு ஒப்பானதாக அந்த இடம் உள்ளது.

விக்ராந்தில் இதுபோல மூன்று காலிகள் உள்ளன. அவற்றை ஒப்பிட்டுக் கூறுவதென்றால், "மூன்று காலிகளிலும் ஒரே நேரத்தில் 600 பேர் வரை உணவு உண்ணலாம்" என்கிறார் அங்குள்ள ஒரு அதிகாரி.

நாங்கள் நடந்து செல்லும்போது, ​​எங்களின் இடப்பக்கத்தில் தங்கும் அறைகள் இருந்தன. அவற்றுள் மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டு பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்டு இருந்தன. விக்ராந்த் சேவையில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகளுக்காகவும் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்காகவும் அவை தயாராக உள்ளன.

விக்ராந்த் கப்பல், மிகப்பெரிய மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. உள் மருத்துவமனையில் 16 படுக்கை வசதிகள் கொண்ட நிலையம் உள்ளது. இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், ஆய்வகங்கள், தீவிர சிகிச்சை பிரிவு அறைகள், சிடி ஸ்கேன் வார்டுகள் உள்ளன.

இவை அனைத்தும் ஐந்து அதிகாரிகள் நிலையிலான மருத்துவர்கள் மற்றும் 15 துணை மருத்துவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய கடற்படையிலேயே இதுதான் மிகப்பெரிய மருத்துவ வசதி கொண்ட கப்பல் என்று எங்களிடம் சொல்லப்பட்டது.

ஒரு சில பகுதிகளைப் பார்க்கும்போதுதான் 'இது ஒரு கப்பல்' என்பது நமக்கு நினைவுக்கு வருகிறது.

இது வெறும் கப்பல் மட்டுமின்றி, இதில் 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வசதியைப் பெற்றுள்ளது.

இந்த இடத்தை ஹாங்கர் என்று அழைக்கிறார்கள்.

இந்திய கடற்படை
படக்குறிப்பு, விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்தவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும் ஹாங்கர் பகுதி

திறன் வாரியாக, அதிக விமானங்களை சுமக்கவும் கையாளவும் கூடிய வசதிகள் இங்கு உள்ளன. உதாரணமாக, கடற்படையின் பழைய விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை எடுத்துக் கொண்டால் அதில் மேலும் சில விமானங்களை கூடுதலாக கையாள முடியும்.

பிரிட்டன் ராயல் கடற்படைக்கு சொந்தமான அரசி எலிசபெத் என்ற பெயரிலான போர்க்கப்பல், சுமார் 40 விமானங்களை தாங்கியிருக்கிறது.

அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் கிளாஸ் கப்பல் 60 விமானங்களை தாங்கிச் செல்லும் ஆற்றல் கொண்டுள்ளது.

விக்ராந்தின் ஹாங்கரில் இரண்டு ரஷ்ய தயாரிப்பு விமானங்களான மிக் 29K போர் விமானம் மற்றும் கேமோஃப் 31 ரக முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர், பின் முனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

விக்ராந்த் கடற்படை கப்பல்

"இதை ஒரு வாகன நிறுத்துமிடம் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த பகுதியில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் குழு தயார் நிலையில் உள்ளது. இங்கிருந்து, சிறப்பு லிஃப்ட் மூலம், விமானம் பறக்கும் தளத்திற்கு (நேரடியாக மேலே) கொண்டு வரப்பட்டு அது பறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது," என்கிறார் லெப்டினன்ட் கமாண்டர் விஜய் ஷியோரன்.

இறுதியாக நாங்கள் அந்த விமான புறப்பாடு தளத்தை அடைந்துவிட்டோம். இங்கு இருந்துதான் விமானங்கள் தரையிறங்குவதும் மேலெழும்புவதும் நடக்கும்.

பல்வேறு நிலைகளில், விக்ராந்த் கப்பலில் உள்ள பல்வேறு அமைப்புகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் பரிசோதனை, கடற்படை சேவையில் பணியமர்த்தப்பட்ட பிறகு, இந்தக் கப்பலில் இருந்து விமானங்களை தீவிர பறக்கும் நடவடிக்கைகளுக்காக பரிசோதிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் அதை செய்ய இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

இங்குள்ள அதிகாரியின் பெயர் லெப்டினன்ட் கமாண்டர் சித்தார்த் சோனி. இவர் ஃப்ளைட் டெக் அதிகாரி மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.

இந்திய கடற்படை
படக்குறிப்பு, லெப்டினன்ட் கமாண்டர் சித்தார்த் சோனி

"எங்கள் விமான தளத்தின் அளவு கிட்டத்தட்ட 12,500 சதுர மீட்டர், கிட்டத்தட்ட இரண்டரை ஹாக்கி மைதானங்களின் அளவைக் கொண்டது. ஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்களை இங்கிருந்து இயக்க முடியும். இது நமது முந்தைய விமானம் தாங்கி கப்பல்களை விட பெரியது. அடிப்படையில் உங்களிடம் அதிக பரப்பளவு இருந்தால் அதிக விமானங்களுக்கு இடமளிக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.

விக்ராந்த் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இந்திய விமானங்களை தமது ஹாங்கருக்குள் கொண்டிருக்கும். இதுவே அதன் தனித்துவம்.

45,000 டன் எடையுள்ள இந்த போர் கப்பல், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு இலக்காகவும் உள்ளது.

சீனா, அதன் சொந்த கடற்படை கப்பல்களை உருவாக்கும் அதே வேளையில், அதன் 'விமானம் தாங்கி போர்க்கப்பலில் ஹைப்பர்சோனிக்' ஏவுகணையும் உள்ளது.

விக்ராந்த் எப்படி தற்காத்துக் கொள்கிறது?

இது குறித்து கப்பலின் விமானப்பிரிவு கேப்டன் ரஜத் குமார் என்னிடம் பேசினார்.

இந்திய கடற்படை
படக்குறிப்பு, கேப்டன் ரஜத் குமார்

"கப்பல் எப்போதும் தனியாகப் பயணம் செய்யாது. அதனுடன் எப்போதும் இணை கப்பல்கள் இருக்கும். அனைத்தும் மொத்த போர் திறனை கொண்டவை. விக்ராந்தில் எதிரி ஏவுகணை அழிப்பான்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் திறன்கள் உள்ளன. வான் வழி போர் எதிர்ப்புத் திறன்கள் மட்டுமின்றி, இந்த அச்சுறுத்தல்கள் அனைத்திலிருந்தும் நிறைய பாதுகாப்பை கொண்டுள்ளது விக்ராந்த்," என்கிறார் கேப்டன் ரஜத் குமார்.

இங்கிருந்து நாங்கள் புறப்படும்போது, ​​லெஃப்டினன்ட் கமாண்டர் சைதன்யா மல்ஹோத்ராவை சந்தித்தோம். விக்ராந்துக்கு கடலில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கை அல்லது முறியடிக்கக் கூடிய செயல்பாட்டை இவரது அணியே செய்கிறது.

அவர் நம்மிடையே பேசும்போது, "உதாரணமாக, விமானம் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் திட்டமிடும்போது காற்று மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அங்கு எனது குழுவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் வானிலை அளவுருக்களைக் கவனித்து, முன்னறிவிப்புகளை தவறாமல் வெளியிடுவார்கள்," என்கிறார்.

நினைத்ததை விட இது பெரியது

மற்ற போர்க்கப்பலைப் போல இல்லாமல், ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் வழங்கும் நன்மை, பயணத்தின் தேவைக்கேற்ப ஒரு முழு விமான நிலையத்தையும் இயக்கம் ஆற்றலைக் கொண்டதாக இறுக்கும்.

விக்ராந்தின் சேர்க்கையுடன், இந்தியா இப்போது இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களை கொண்டுள்ளது. ஆனால் இந்திய கடற்படையோ இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து மேலும் ஒரு போர்க்கப்பல் தேவை என்கிறது.

இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசு, பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவுக்கு முக்கியத்துவம் அளித்த போதிலும், இன்னும் தேவையான நிதியை அந்தப் பணிக்கு வழங்கவில்லை என்பதே களத்தில் காணும் யதார்த்தம்.

சமீப காலம் வரை விக்ராந்தின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வந்த வைஸ் அட்மிரல் ஏ.கே. சாவ்லா (ஓய்வு பெற்றவர்), இப்போது செயல்படுவதா அல்லது ஒதுக்கி வைப்பதா என்பதுதான் தேர்வு என்று என்னிடம் கூறினார்.

இந்திய கடற்படை
படக்குறிப்பு, வைஸ் அட்மிரல் (ஓய்வு ஏ.கே. சாவ்லா

"சீனர்கள் 1980 களின் முற்பகுதியில், பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு, கடல்சார் சக்தியாக விளங்காதவரை உண்மையில் உலகளாவிய பகுதியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தனர். இன்று அவர்களைப் பாருங்கள், அவர்கள் உலகின் மிகப்பெரிய கடல் சக்தியாக உள்ளனர். விமானம் தாங்கி கப்பல்களை அற்புதமான வேகத்தில் உருவாக்குகிறார்கள். நீங்கள் ஒரே இரவில் போர்க் கப்பல்களை உருவாக்கி விட முடியாது, அதற்கு நேரம் எடுக்கும். எனவே விக்ராந்த் போன்ற அதிகமான கப்பல்கள் இந்தியாவிடம் இருப்பது மிகவும் முக்கியம். அவை கடற்படையைப் பாதுகாக்கவும், வெகுதூரம் பயணிக்கவும் எதிரி கப்பல்களை விமானம் அழிக்கவும் எதிரி வந்து அழிக்கும் முன்பே தாக்கும் வல்லமையைக் கொண்டிருக்க வேண்டும்.

சீனா 2012 மற்றும் 2022 க்கு இடையில், இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்கி, மூன்றாவது மற்றும் பெரிய போர் கப்பலுக்கான பணியைத் தொடங்கியுள்ளது.

தனது கடற்படை திறன்களையும் அதன் கடற்படையின் அளவையும் சீனா விரைவாகவே விரிவுபடுத்தியுள்ளது. வெறும் எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டால், சீனா அமெரிக்க கடற்படையின் பலத்தைக் கடந்து விட்டது என்றே கூற வேண்டும்.

இமாலய பணியின் பயணம்

இந்த கப்பலுக்கு வெளியே கடற்படை இசைக்குழு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறது. கப்பல் கட்டும் தளத்தின் பிரமாண்டமான கிரேன்கள் தங்கள் கனமான சரக்குகளை தூக்கும் போது சைரன்களை ஒலிக்கின்றன.

இந்தக் காட்சிகளுக்கு மத்தியில், அரசாங்கத்துக்குச் சொந்தமான கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் (CSL), ஏதோ செய்து விட்ட திருப்தியில் நிம்மதிப் பெருமூச்சை விடுவதை உணர்வது கடினம் அல்ல.

2003, ஜனவரியில் கப்பலுக்கான ஆரம்ப அரசாங்க அனுமதி வழங்கப்பட்டாலும், 2007இல் முதல் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே இந்த கட்டுமான தளத்தில் கப்பலை கட்டும் பணி தொடங்கியது.

2013ஆம் ஆண்டில், கப்பல் முதன்முறையாக வெளியில் மிதந்தபோது, ​​2016-17ஆம் ஆண்டிற்குள் கடற்படை விக்ராந்தைப் பெறும் என்று அரசாங்கம் மதிப்பிட்டது.

ஆனால், இயல்பாகவே கப்பல் கட்டுமானத்தின் 'இரண்டாம் கட்டத்தில்' தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து வந்த பல்வேறு ஆயுதங்கள், உந்துவிசை அமைப்புகள், விமான ஓடுபாதை மற்றும் வளாகத்தை நிறுவும் பணிகள் திட்டமிட்டதை விட அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்டன.

சிஎஸ்எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மது நாயர், கப்பல் கட்டுவதற்கு 13 ஆண்டுகள் ஆனது என்றாலும் இந்த காலகட்டத்தில் கப்பலின் வசதிகளை மேம்படுத்த விரும்பினோம்," என்கிறார்.

இந்திய கடற்படை
படக்குறிப்பு, மது நாயர்

"13 ஆண்டுகள் அதிகம்தான் என்று நான் கூறவில்லை. இதை விட நிச்சயமாக சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் முதல் முறையாக இதைச் செய்வதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்கிறார் மது நாயர்.

"சீனா தனது விமானம் தாங்கி கப்பல்களின் எண்ணிக்கையை எப்படி விரைவாக விரிவுபடுத்தியது என்பதை நான் விளக்குகிறேன்," என்று கூறிய அவர் மேலும் தொடர்ந்தார்.

"சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​அங்குள்ள ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை சீனா பிரிட்டன் அல்லது அமெரிக்காவை விட மிக வேகமாக விஷயங்களைச் செய்கிறது என கருதலாம்," என்கிறார் மது நாயர்.

"தற்போது, ​​விக்ராந்த் கப்பல் கட்டும் தளத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மிகப்பெரிய திறன்களைப் பெறுவதில் கப்பல் கட்டுமானத்துறை முதலீடு செய்கிறது. இந்தியாவின் அடுத்த தலைமுறை விமானம் தாங்கி கப்பலை உருவாக்கக்கூடிய புதிய கப்பல்துறையில் நாங்கள் முதலீடு செய்கிறோம், அந்த கப்பல் கட்டுமானத்துறை, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராகிவிடும். அடுத்த போர் கப்பலை உருவாக்குவதற்கான ஒப்புதலில் நாங்கள் தேர்வாவோம் என்று நம்புகிறேன். அவ்வாறு நடந்தால், பணியை ஏற்க நாங்கள் தயாராக இருப்போம்," என்று மது நாயர் உறுதியளிக்கிறார்.

விக்ராந்த் கட்டுமானத்துக்கு செலவு ரூ.20,000 கோடி

எவ்வாறாயினும், கப்பலின் கருவிகளில் 76 சதவிகிதம் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை. சுமார் 500 இந்திய நிறுவனங்கள் மற்றும் கடற்படை, சிஎஸ்எல் போன்றவை இந்திய பாதுகாப்புத் துறையில் நடக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.

கடந்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் வேலைகள் இங்கே உருவாக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம் கூறுகிறது.

ஆசையைத் தூண்டும் தரவுகள் ஒருபுறம் இருக்க, அஞ்சனா கேஆர் என்ற சிஎஸ்எல் நிறுவன வடிவமைப்புப்பிரிவின் பொது மேலாளர் போன்ற சிலருக்கு, இந்த கப்பல் கடற்படையில் சேரும் தருணம், ஒரு உணர்ச்சிமிக்க பயணத்தின் உச்சமாக இருக்கப்போகிறது.

விக்ராந்த்
படக்குறிப்பு, அஞ்சனா

"நான் 2009 இல் இங்குள்ள வடிவமைப்புப் பிரிவில் சேர்ந்தேன். பின்னர் பொருட்கள் துறையில் பணியாற்றினேன். கப்பலுக்கான பல்வேறு உபகரணங்களை வாங்குவதில் ஈடுபட்டேன். இப்போது மீண்டும் வடிவமைப்பிப் பிரிவுக்கு வந்து இதன் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். இந்த காலகட்டம் சவாலாக இருந்தது. சில சமயங்களில், நாங்கள் ஒரு முட்டுச்சந்தத்தை அடைந்துவிட்டதாக உணர்வோம். ஆனால் ஒருவருக்கொருவர் கைவிடாமல் கடற்படையுடன் இணைந்து பணியாற்றியதால் நாங்கள் தடைகளைத் தாண்டிவிட்டோம்," என்கிறார் அஞ்சனா.

விக்ராந்த் 2013இல் முதன்முதலில் மிதந்தபோது அல்லது கடந்த ஆண்டு தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றபோது எப்படி இருந்தது என்று ​​​​அஞ்சனா அதன் ஒவ்வொரு அசைவையும் நினைவுகூர்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு பெற்றோரை போலவே இந்த கப்பலை அவர் கருதுகிறார்.

முகம் மலரும் பரந்த புன்னகையுடன் அந்த உணர்வை பகிரும் அஞ்சனா, "எனக்கு அவள் ஒரு மகள் போல. இங்கே பல ஆண்டுகளாக இருக்கிறாள். நாங்கள் அவளை வளர்த்துள்ளோம். முதல் கட்டமாக வடிவமைத்தது முதல் இப்போது அலங்கரித்து இருக்கும் காட்சியை, கல்யாணம் செய்து கொடுப்பது போல உணர்கிறோம். இப்போது அவளை புகுந்த வீடான கடற்படையிடம் ஒப்படைக்கப் போகிறோம். இனி அவர்கள் அவளை நன்றாகக் கவனிக்க வேண்டும்," என்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: