சந்திரசேகர் ஹர்போலா: சியாச்சினில் இறந்த ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

1984ஆம் ஆண்டு பனிச்சரிவு தாக்கியபோது, ரோந்து பணியில் இருந்த ராணுவப் பிரிவில் சந்திரசேகர் ஹர்போலாவும் ஒருவர்

பட மூலாதாரம், @THEARVINDPANDEY

படக்குறிப்பு, 1984ஆம் ஆண்டு பனிச்சரிவு தாக்கியபோது, ரோந்து பணியில் இருந்த ராணுவப் பிரிவில் சந்திரசேகர் ஹர்போலாவும் ஒருவர்
    • எழுதியவர், ஆசிஃப் அலி
    • பதவி, பிபிசி இந்தி

"அம்மா, அப்பா எப்போ வீட்டுக்கு வருவார்?" சாந்தி தேவியின் இரண்டு மகள்களும் பல வருடங்களாக தினமும் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டனர்.

அப்பா வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்டதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்றும் அவர் தமது மகளுக்கு எப்போதும் சொல்வார்.

ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அவர்களின் இந்த உரையாடல் அப்படியே இருந்தது.

இவர்களது தந்தை சந்திரசேகர் ஹர்போலா ஓர் இந்திய ராணுவ வீரர். 1984 ஆம் ஆண்டு சியாச்சின் பனிப்பாறையில் ரோந்து பணியின் போது காணாமல் போனார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உலகின் மிக உயரமான போர்க்களம் என்று அறியப்படும் பகுதியில் நடந்த பனிச்சரிவில் 20 பேர் கொண்ட ராணுவப் பிரிவு சிக்கியது.

ஹர்போலா உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் 38 ஆண்டுகள் காத்திருந்தார் சாந்தி தேவி.

பட மூலாதாரம், BBC/ASIF ALI

படக்குறிப்பு, ஹர்போலா உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் 38 ஆண்டுகள் காத்திருந்தார் சாந்தி தேவி

அங்குள்ள நிலப்பரப்பு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. ஆனால் 1984 ஆம் ஆண்டு பனிப்பாறையின் மீது நடந்த ஒரு சிறிய போருக்கு பிறகு, இரு நாடுகளும் தங்கள் இடத்தை காலி செய்ய மறுத்து விட்டன. இரு நாட்டு வீரர்களும் பனிச்சரிவுகளில் இறப்பது வழக்கமாகிவிட்டது.

ஹர்போலாவும் அவரது சக வீரர்களும் இதே போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டனர். இந்த பனிச்சரிவுக்குப் பிறகு, 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் ஹர்போலா உட்பட ஐந்து பேரை காணவில்லை.

அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது, அவரது மகள்கள் கவிதாவுக்கு எட்டு வயது, பபிதாவுக்கு நான்கு வயது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு, அவர்கள் இறுதியாக தங்கள் தந்தை குறித்த செய்தியை அறிந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் அது இல்லை.

ஹர்போலாவுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

பட மூலாதாரம், BBC/ASIF ALI

படக்குறிப்பு, ஹர்போலாவுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

கடந்த வாரம் பனிப்பாறையில் அவரது உடலை ஒரு குழு கண்டுபிடித்ததாக ராணுவம் அவர்களிடம் கூறியது. இது அவரது குடும்பத்திற்கு ஒரு முடிவை அளித்தது. ஆனால் அவர்கள் நொறுங்கியும் போனார்கள்.

அவர்கள் மூவரும் ஹர்போலா உயிருடன் இருப்பதாக மனத்தில் ஓர் ஓரத்தில் நம்பினார்கள். பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டிருக்கலாம்; என்றாவது ஒரு நாள் திரும்பி வருவார் என்று நினைத்தார்கள்.

ஆனால் இந்த வாரம் ஹர்போலாவின் உடல் இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் உள்ள அவர்களின் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அவர்களின் காத்திருப்பு சோகத்தில் முடிந்தது. அங்கு அவர் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சாந்தி தேவியைப் பொறுத்தவரை, கடந்த 38 வருடங்களாக, ஹர்போலா என்றாவது ஒரு நாள் திரும்பி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதிலும், தமது மகள்களை தன்னால் முடிந்தவரை நன்றாக வளர்ப்பதிலும் கவனமாக இருந்தார்.

அவர் காணாமல் போன பிறகு, சாந்தி தேவி செவிலியராகப் பயிற்சி பெற்று, பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார்.

சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயரமான போர்க்களம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சியாச்சின் பனிப்பாறை உலகின் மிக உயரமான போர்க்களம்

மகள்களின் படிப்பில் கவனம் செலுத்தியதால் அவரது வாழ்க்கை பரப்பரப்பாக இருந்தது. அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை.

"என் குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை ஒரு நாள் திரும்பி வருவார் என்று நான் உறுதியளித்தேன்," என்று சாந்தி தேவி தனது கணவரின் படத்தை பார்த்து பிபிசியிடம் கூறினார்.

பிரதான சாலையில் இருந்து கிராமத்தை இணைக்கும் பாதையின் விளிம்பிற்கு அடிக்கடி செல்வார் சாந்தி தேவி. ஹர்போலா விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதோ அல்லது விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்பியபோதோ இதே பாதையில்தான் செல்வார்.

அவர் கடைசியாக 1984ஆம் ஆண்டு கிராமத்தை விட்டு வெளியேறியபோது, எப்போதும் போல, விரைவில் வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தில் முடிந்தன. ஆனால் அது சாந்தி தேவியின் நம்பிக்கையை அசைக்கவில்லை.

"அவர் கைதியாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். போர்க் கைதியாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்டிருக்கக் கூடும். இப்படிப்பட்ட பல எண்ணங்கள் என் மனதில் வரும்," என்கிறார் சாந்தி தேவி.

இப்போது அந்த நம்பிக்கை நொறுங்கிவிட்டதை நம்ப முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். தாயும் மகள்களும் தங்கள் அருகில் வசிப்பவர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் பேசும்போது, அடிக்கடி உடைந்து போனார்கள்.

அவரது உடல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

ஒரு ராணுவப் பிரிவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் ஒரு பதுங்கு குழியைக் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது சடலம் ஒன்று கிடைத்தது.

ஒரு உலோகத் துண்டில் பொறிக்கப்பட்ட ஹர்போலாவின் ராணுவ அடையாள எண் இன்னும் அப்படியே இருந்தது. அவர்கள் ராணுவ தலைமையகத்திற்கு இந்த தகவலைத் தெரிவித்தனர். அவர்களின் பதிவுகளை முழுமையாகச் சரிபார்த்த பிறகு, காணாமல் போன வீரர் சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.

ஹர்போலாவுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது குடும்பத்தினர்

பட மூலாதாரம், BBC/ASIF ALI

படக்குறிப்பு, ஹர்போலாவுக்கு அஞ்சலி செலுத்தும் அவரது குடும்பத்தினர்

பின்னர் ராணுவம் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டது.

"ஆகஸ்ட் 13ம் தேதி இரவு எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அவரை வேலை எடுக்கும் சமயத்தில், அவருக்குக் கிடைத்த அடையாள அட்டை (identity disc) கொண்டு குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். இந்த அட்டை மூலம் அவர்கள் எங்கள் மாமாவை அடையாளம் கண்டுகொண்டனர். இந்தச் செய்தி எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது," என்றார் ஹரிஷ் சந்திர ஹர்போலா, ஹர்போலாவின் சகோதரின் மகன்

அவரது குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், ஆனால் ஹர்போலா தனது நாட்டிற்கு சேவை செய்யும் போது தனது உயிரை தியாகம் செய்ததற்காக பெருமைப்படுவதாக அவர் கூறினார்.

காணாமல் போன தமது வீரர்களைத் தேடுவதை ராணுவம் ஒருபோதும் நிறுத்தவில்லை என்று ஹர்போலாவின் தகனத்தின் போது உடனிருந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

"நாங்கள் காணாமல் போன வீரர்களைத் தேடிக்கொண்டே இருந்தோம். இந்த கோடைக்காலத்தில், சியாச்சின் பனிப்பாறை பனி உருகத் தொடங்கியதும், காணாமல் போன வீரர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியது.

நாங்கள் ஹர்போலாவைக் கண்டுபிடித்தோம். மற்றவர்களையும் கண்டுபிடிப்போம்," என்று அவர் கூறினார்.

இந்த ராணுவப் பிரிவு மற்றொரு உடலைக் கண்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மனதை உலுக்கும் காட்சிகள்

தற்போது 46 வயதாகும் கவிதாவும், 42 வயதாகும் பபிதாவும் தங்களது தாயுடன் ஹர்போலாவின் உடலை ஏற்றிச் சென்ற டிரக் வரும்போது தாயுடன் காத்திருந்தனர்.அவருக்கு அஞ்சலி செலுத்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

சந்திரசேகர் ஹர்போலா அழிவற்றவராக இருப்பார் என்ற கோஷங்களால் அப்பகுதி எதிரொலித்தது. அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.

அங்கிருந்த பலருக்கும் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதை நம்ப முடியவில்லை. 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் வீட்டிற்கு கொண்டு வரப்படுவது எப்போது நடக்கும் ஒன்றல்ல. அவரது குடும்பத்திற்கு ஒரு விடை கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன என்ற வலி நீண்ட காலம் இருக்கும்.

காணொளிக் குறிப்பு, இந்திய கடற்படை பெண்கள் மட்டுமே மேற்கொண்ட கடல் கண்காணிப்பு பணி - ஒரு வரலாற்று தருணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: