அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தில் குறுகியகால, ஒப்பந்த முறை பணி நியமன திட்டமாக அறிவிக்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் அரசு இந்த திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு திட்டம் என தெரிவித்துள்ளது. இந்த அக்னிபத் திட்டம் என்றால் என்ன? இளைஞர்கள் போராடுவது ஏன்? அரசு என்ன சொல்கிறது? விரிவாக பார்ப்போம்.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னிபத் திட்டம் குறித்து அறிவித்தார். இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்த அக்னிபத் திட்டம். அதாவது நான்கு ஆண்டுகளுக்கு மட்டும். பணிக்காலம் முடிந்ததும், அவர்களுக்கு சேவை நிதி தொகுப்பு வழங்கப்படும். 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை பெற முடியும். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடுகள் செய்யப்பட்டு 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் ஏன் போராடுகிறார்கள்?
அக்னிபத் திட்டத்துக்கு பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டின் வேலூரில் ராணுவ பணியில் சேர ஆர்வம் மிகுந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில்களுக்கு தீ வைத்தனர். பல்வேறு இடங்களில் ரயில்வே அலுவலகங்கள் சூரையாடப்பட்டன.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தங்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த தற்காலிக திட்டத்தால் ராணுவத்தில் (நிரந்தர பணியில்) சேர வேண்டும் என்ற தங்களின் கனவு சிதைந்துவிடும் என்றும் இளைஞர்கள் கவலை தெரிவித்தனர்.
ஏற்கெனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முப்படைகளுக்கான ஆள்சேர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்னிபத் குறித்து இந்திய அரசு சொல்வது என்ன?
'அக்னிபத்' திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.
"அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவத்தை, இந்திய மக்களைப் போலவே இளமையாக ஆக்கிட முயற்சி செய்யப்படுகிறது" என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், @DEFENCEMININDIA
இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும், சேவையின் போது பெற்ற திறன்கள் மற்றும் அனுபவங்கள் அவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் வேலைகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் போராட்டக்காரகளை அமைதிப்படுத்த வயது வரம்பை மூன்று வருட காலம் கூடுதலாக நீட்டிப்பதாக தெரிவித்த மத்திய அரசு, அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப் படை மற்றும் அசாம் ரைஃபிள் ஆள்சேர்ப்பில் 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
அக்னிபத் திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
"இரு முனைகளில் இந்தியா அச்சுறுத்தல்களை சந்திக்கும் இந்த வேளையில் அக்னிபத் திட்டத்தை கொண்டு வருவது நமது படையினரின் திறனை குறைப்பதாக உள்ளது. நமது படையின், மாண்பு, பாரம்பரியம், கட்டுக்கோப்பு ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்," என ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
பிகாரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளக் கட்சி தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்கும் இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.
"அக்னிபத் திட்டத்தின் முடிவால் பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி, விரக்தி மற்றும் இருண்ட எதிர்காலம் (வேலையின்மை) பற்றிய அச்சம் தெளிவாகத் தெரிகிறது. மத்திய அரசு உடனடியாக இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த முடிவு நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது," என்று அவர் தெரிவித்திருந்தார்.
அக்னிபத் குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் அச்சம் என்ன?
ராணுவத்தில் பயிற்சி பெற்ற 21 வயது வேலையில்லாத இளைஞர், தவறான பாதையில் சென்று தனது பயிற்சியை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்திற்கு பிரச்னையை உருவாக்கலாம் என்று அக்னிபத் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் ஆயுதப்படையின் திறனை இந்த திட்டம் குறைத்துவிடும் என்றும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிடும் என்றும் சிலர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
"ராணுவப் பயிற்சி மேற்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உண்மையிலேயே நீங்கள் படையில் இருந்து வெளியேற்ற விரும்புகிறீர்களா? ஏற்கனவே வன்முறை அதிகரித்துள்ள அதே சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் மீண்டும் வருவார்கள். இந்த முன்னாள் ராணுவ வீரர்கள், போலீஸ் மற்றும் காவலராக மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆனால் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சி எடுத்துள்ள வேலையில்லாத இளைஞர்களின் 'போராளிகள் குழு' உருவாகிவிடுமோ என்பதே எனது அச்சம்" என கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
அக்னிபத் ஆதரவு தரப்பின் வாதம் என்ன?
இந்த திட்டத்தை ஆதரிக்கும் தரப்பினர் இது ஆயுதப் படையின் திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும் இளைஞர்களால் படை உத்வேகம் பெறும் என்றும் தெரிவிக்கின்றனர்.
உத்தராகண்ட் ஆளுநரும் ஓய்வு பெற்ற ராணுவ தளபதியுமான லெஃப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங், அக்னிபத் திட்டத்தை இளைஞர்களுக்கான சிறந்த வாய்ப்பு என்று தெரிவித்திருந்தார்.
சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் அக்னிபத் வீரர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சில தொழிலதிபர்களும் அக்னிபத் திட்டத்திற்கான தங்களின் ஆதரவை தெரிவித்து அக்னிவீரர்களை பணியமர்த்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் மகேந்திரா, அத்தகைய பயிற்சி பெற்றவர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என்று தெரிவித்தார்.
ஆர்பிஜி குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, "அக்னிவீரர்களை வேலைக்கு எடுக்கும் வாய்ப்பை வரவேற்கிறேன். பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் இதற்கு முன்வர வேண்டும்," என்று டிவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்தார்.
முப்படைகளின் விளக்கம்
ஏற்கனவே முப்படை தளபதிகள் அக்னிபத் திட்டத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், ஜூன் 24ஆம் தேதி முதல் விமானப்படை புதிய நியமனங்களை தொடங்கும் என்று விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் செளத்ரி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதேவேளை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அக்னி வீரர்களுக்கான பயிற்சி தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு மத்தியில் அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் இந்தத் திட்டம் பாதுகாப்புத்துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டில் கடும் போராட்டங்கள் நிலவி வருவதால், இரு நாட்களாக முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முப்படைகளின் உயர் அதிகாரிகள் 'அக்னிபத் திட்டம் திரும்பப் பெற மாட்டாது' என்று தெரிவித்தனர்.
பிற நாடுகளில் இந்த திட்டம் உள்ளதா?
அக்னிபத் கட்டாய ராணுவ சேவை திட்டம் இல்லை என்றாலும் குறுகிய கால ராணுவ பணி என்ற அடிப்படையில் பிற நாடுகளில் உள்ள கட்டாய ராணுவ சேவையுடன் அக்னிபத் திட்டம் ஒப்பிடப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவ சேவை திட்டத்தை சுட்டிக் காட்டி பலர் அக்னிபத் குறித்து பேசி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டில் ராணுவத்தில் சேவை செய்வது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாகும். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் ஆண்கள் மூன்று ஆண்டுகளும் பெண்கள் சுமார் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றுவது கட்டாயம்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













