தெலங்கானா அரசியல்: பாஜக மீது டிஆர்எஸ் புகார்: டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் கட்சித் தாவ ஆசை காட்டியதாக 3 பேர் கைது

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்
தெலங்கானா மாநிலத்தின் ஆளும்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை கட்சிமாறும்படி கவர்ந்து இழுக்க முயன்றதாக மூன்று பேரை கைது செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ்.
இப்படி எம்.எல்.ஏ.க்களை கவர்ந்திழுக்கும் வேலையின் பின்னால் பாஜக இருப்பதாக டி.ஆர்.எஸ். குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை பாஜக கண்டித்துள்ளது.
அட்சம்பேட்டை எம்.எல்.ஏ. குவ்வல பாலராஜு, கோலாபூர் எம்.எல்.ஏ. பீரம் ஹர்ஷவர்தன் ரெட்டி, பின்னபாக தொகுதி எம்.எல்.ஏ. ரேககாந்த ராவ், தண்டூர் எம்.எல்.ஏ. பைலட் ரோஹித் ரெட்டி ஆகியோரை டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து தாவும் வகையில், கவர்ந்திழுக்க மூன்று பேர் முயன்றதாக தங்களுக்குத் தகவல் கிடைத்தது என்கிறது போலீஸ்.
ஆளும் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை கவர்ந்திழுக்க முயற்சி நடப்பதாக தகவல் கிடைத்தவுடன், ஹைதராபாத் மாநகரில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் சோதனைகள் நடத்தப்பட்டதாக சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்தார்.
டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களே தமக்கு இந்தத் தகவலை அளித்ததாக புதன்கிழமை (அக்டோபர் 26) இரவு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
"பணம், தொடர்புகள், பதவிகள் தருவதாக கூறி ஆசை காட்டி தங்களை டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து தாவும்படி அந்த மூன்றுபேரும் கூறினார்கள். அந்தத் தகவலின் அடிப்படையில், ரெங்கா ரெட்டி மாவட்டம், மொய்னாபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரில் ஒருவரான ராமச்சந்திர பாரதி என்கிற சதீஷ் ஷர்மா ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார். அவரை, டெல்லி, ஹைதராபாத்திலும் பார்த்துள்ளனர்," என்று ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்தார்.
திருப்பதியை சேர்ந்த சிம்ஹயாஜி என்ற சாமியாரும் ராமச்சந்திர பாரதியுடன் வந்திருந்தார் என்று போலீஸ் ஆணையர் கூறினார்.


நந்தகுமார் என்ற ஒருவர் இந்த இருவரையும் அழைத்துவந்து டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.க்களை கவர்ந்து இழுப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், UGC
"இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புலன்விசாரணை செய்து, என்ன விதமான ஆசைவார்த்தைகள் கூறப்பட்டன என்ற விவரங்களை வெளிப்படுத்துவோம்," என்றார் ஸ்டீபன் ரவீந்திரா.
இடைத்தேர்தல்
நவம்பர் 3-ம் தேதி முனுகோடே சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தேர்தலில் டி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நடக்கிறது.

பட மூலாதாரம், UGC
கே.சந்திரசேகரராவ் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எந்த முயற்சியையும் தங்களால் முறியடிக்க முடியும் என்று அரசு கொறடா தசியம் வினய் பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முனுகோடே தொகுதியில் தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் நாடகம் ஆடுவதாக இந்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி குற்றம்சாட்டினார். டிவி9 தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் பேட்டி அளித்த அவர், பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














