கா்நாடக அரசியல்: காங்கிரஸ் அரசு வீழ என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எஸ்.வி. ரமணி
- பதவி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர், காங்கிரஸ் ஊடகப் பிரிவு
கர்நாடகத்தில் நடந்திருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கே ஒரு மதச்சார்புள்ள அரசு அங்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் - ஜனதா தளம் கட்சிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
மதச்சார்பற்ற சக்திகள் வலுவாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இந்த இரு கட்சிகளும் இணைந்து ஒரு அரசை அமைத்தன. பெரும்பான்மையை நிரூபித்துத்தான் இந்த அரசு அமைக்கப்பட்டது.
அப்படி பெரும்பான்மை நிரூபித்து உருவாக்கப்பட்ட அரசை, இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கலைத்திருக்கிறார்கள். பணம், அமலாக்கத் துறை, மகாராஷ்டிர அரசு, வருமான வரித்துறை, ஹவாலா நடவடிக்கை என பல நடவடிக்கைகளின் மூலம் இந்த அரசு கலைக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரசின் எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டுப் போனார்கள் என்பது உண்மைதான். ஏன் விட்டுச்சென்றார்கள் என்று பார்ப்பதற்கு முன்பாக அரசியல் நெறிமுறைப்படி இது சரியா என்ற கேள்வியிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பலர் பணத்திற்கும் அடிமையாகியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், பணம் மட்டுமே இதைச் சாதித்துவிடவில்லை. சில பேருக்கு அமைச்சர் பதவி தருவேன் என ஆசை காட்டப்பட்டது. அமலாக்கத் துறையை வைத்து சிலபேர் அச்சுறுத்தப்பட்டனர்.
காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசால், சிலருக்குத்தான் அமைச்சர் பதவியைக் கொடுக்க முடிந்தது. அந்த அதிருப்தியில் இருந்த சிலருக்கு தாங்கள் பதவியளிப்பதாக ஆசை காட்டினார்கள். ஆனால், இதெல்லாம் பா.ஜ.கவுக்குப் புதிதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே கோவாவில், அருணாச்சலப் பிரதேசத்தில், மேகாலயாவில், மணிப்பூரில், உத்தராகண்டில் இதைச் செய்திருக்கிறார்கள். அதையே இங்கும் செய்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆறு மாதங்களாகவே பா.ஜ.க. இந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது தெரிந்தவுடன், என்ன பிரச்சனைகள் வரலாம், யார் யாரெல்லாம் செல்லக்கூடியவர்கள் என்பதைக் கண்டுபிடித்து காங்கிரஸ் சரிசெய்திருக்கலாம். வாக்குறுதிகளும் கொடுத்திருக்கலாம். அதைச் செய்ய காங்கிரஸ் தவறவிட்டிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான ஆட்களுக்கு காங்கிரசில் இடம் கொடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. காங்கிரஸில் ஒருவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அவருடைய மகளுக்கும் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் இவருக்கு வாய்ப்புக் கொடுக்காமல் மறுத்திருக்க முடியுமா? வெளியேறியவர்களில் பலர் இப்படி நீண்ட நாட்களாக காங்கிரஸில் இருப்பவர்கள். ஆகவே அவர்களை எப்படி துவக்கத்திலேயே சந்தேகிக்க முடியும்?
பா.ஜ.கவுக்கு இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்விக்கு பதில் இதுதான். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அசாத்தியமான பலம் இருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித் துறை அனைத்தையும் வளைத்துவிட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் அக்கட்சியின் பண பலம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதிகாரம் கையில் இருப்பதால், அந்த அதிகாரத்தின் கீழிருக்கும் பல அமைப்புகள் அவர்கள் கைகளில் சென்றிருக்கின்றன.
இந்த சக்திகளையெல்லாம் வைத்து இதனைச் செய்கிறார்கள். அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்திருக்கிறது.
தற்போது கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினாலும், அவர்களிடம் இப்போதும் பெரும்பான்மை கிடையாது. 105 வாக்குகள்தான் அவர்களுக்கு ஆதரவாக விழுந்திருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்க 113 இடங்கள் தேவை.

பட மூலாதாரம், Getty Images
வாக்களிக்காதவர்கள், எப்படி இனி வாக்களிப்பார்கள் என நமக்குத் தெரியாது. இருந்தாலும் பா.ஜ.கவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தால் என்ன நடக்கும்? ஏற்கனவே செய்த குதிரை பேரத்தை மீண்டும் செய்து, ஆட்சியைத் தாக்கவைப்பார்கள்.
ஆளுநர் அவர்கள் வசம் இருப்பதால், இந்த 105ல் 5 பேர் ராஜினாமா செய்தால்கூட, இவர்கள் ஆட்சி தொடரும். 90 பேரை வைத்துக்கொண்டுகூட பா.ஜ.க. ஆட்சியைத் தொடரும்.
கொறடா உத்தரவு பிறப்பிக்கலாமா, கூடாதா என்ற பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. அதில் ஒரு தெளிவு வரும்வரை காத்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை?
சபாநாயகர் முடிவெடுக்க அதிகாரம் உண்டு எனக் கூறிய உச்ச நீதிமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறது. இது அரசியல் சாஸன ரீதியாக சரியா?
கட்சித் தாவல் தடைச் சட்டம் மிகத் தெளிவாக இருக்கிறது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டுமென சட்டம் கூறுகிறது. ஆனால், அப்படி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் வரலாம்; வராவிட்டால் பரவாயில்லையென எப்படிச் சொல்ல முடியும்?
சபாநாயகருக்கு உயரிய அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பறித்துவிட்டால் என்ன செய்வது? அதனால்தான், கொறடா உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை அவகாசம் கொடுங்கள் என காங்கிரஸ் கேட்டது. ஆனால், அதற்குள் ஆளுநர், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கடிதம் அனுப்புகிறார். அந்தச் சூழலில் காங்கிரஸ் என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், ANI
கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வந்து வாக்களிக்காவிட்டால் அரசு கவிழ்ந்திருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். கொறடா உத்தரவு இடப்பட்டிருந்தால், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் காங்கிரசிற்கு வந்திருப்பார்கள் என்பதுதான் பா.ஜ.கவின் பயம். அதனால்தான் ஆளுநரை வைத்து, அழுத்தம் கொடுத்தார்கள்.
இப்போது 105 பேரை வைத்து அரசமைத்துவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் இதுவரை ஏற்கப்படவில்லை. சபாநாயகர் அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வரும். அந்தச் சூழலில் பா.ஜ.க. குறைந்தது 8-9 இடங்களையாவது வெல்ல வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட தமிழகத்தில் ஏற்பட்ட நிலைதான்.
ஆனால், கர்நாடகத்தில் நடந்ததையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அந்த இருபது தொகுதிகளில் பெரும்பான்மை இடங்கள் அவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே மீண்டும் இதே ஆட்சி வருவதற்குத்தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அப்படியே இப்போது பா.ஜ.க. ஆட்சியமைத்தாலும், அது நீண்ட நாட்கள் நீடிக்காது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
சட்டமன்றம் கலைக்கப்படுவது வெகுதூரத்தில் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களைப் பிடித்தும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அக்கட்சிக்கு அளிக்கப்படாமல் காங்கிரசும் மஜதவும் இணைந்து ஆட்சி அமைத்துவிட்டார்கள் என்ற கோபத்தின் காரணமாகக்கூட நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசிற்கு தோல்வி ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், இப்போது கர்நாடக அரசியலில் பா.ஜ.க. செய்யும் வேலைகளைப் பார்ப்பவர்கள், அடுத்த தேர்தலில் நிச்சயம் காங்கிரசிற்குத்தான் வாக்களிப்பார்கள்.
(கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல.)
(பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு எஸ்.வி.ரமணி அளித்த நேர்காணலின் எழுத்து வடிவமே இது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












