கெட்டுப்போன உணவு விஷமாகுமா? திருப்பூரில் குழந்தைகள் மர்ம சாவுக்கு பிறகு எழும் கேள்வி

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திருப்பூர் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் இறந்ததற்கு கெட்டுப்போன உணவு சாப்பிட்டது காரணமா என தமிழக அரசின் மூன்று குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், கெட்டுப் போன உணவை உட்கொள்வதால் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும், எதிர்ப்பு திறனுக்கு தகுந்தவாறு பாதிப்பின் அளவுகள் வேறுபடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமைக்கப்பட்ட உணவை அதிகபட்சமாக நான்கு மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும் என்றும் நேரம் அதிகரிக்கும் போது அந்த உணவின் ஊட்டச்சத்து குறைவதோடு, அதில் கிருமிகள் வளரும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அரசு உணவியல் நிபுணர் வி.பவானி, சமைத்த உணவை முறையாக கையாளுவது எப்படி, உணவை சேமிப்பது உள்ளிட்டவற்றை விளக்கினார்.
கலப்படம் காரணமாக உணவு விஷமாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


உணவு விஷமாவது எப்படி?
உணவை சூடாக சாப்பிட வேண்டும். சமைத்த நான்கு மணிநேரம் வரைதான் அந்த உணவில் சத்துகள் நிறைந்திருக்கும். உணவை மீண்டும் மீண்டும் சூடாக்கி உண்டால், அந்த உணவில் உள்ள சத்துகள் முற்றிலுமாக காணாமல் போகும். அதனால், சமைத்த உணவை உடனே சாப்பிடுவது நல்லது. இல்லையெனில், முறையாக சேமிப்பது நல்லது.
உதாரணமாக, மதிய உணவை வேலை செய்யம் இடங்களுக்கு எடுத்து செல்வோர், அதை சாப்பிடவில்லை எனில், அதனை மாலை நேரம் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து சூடு செய்து சாப்பிடக்கூடாது. உணவு கெடும் நிலையை நெருங்கிய நேரத்தில் சாப்பிட்டால் அதனால் பாதிப்புகள்தான் அதிகம்.
காலை சமைத்து வீட்டில் ஃபிரிட்ஜில் வைக்கும் பட்சத்தில், மாலை சாப்பிடும் அளவு உணவை தனியாக ஒரு டப்பாவில் வைக்க வேண்டும். அதனை மாலை சூடாகி சாப்பிடலாம். ஆனால் அந்த டப்பாவில் இருந்து சாப்பாட்டை ஈரமான கரண்டியில் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதை மீண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. 'ஈரத்தன்மை' பாக்டீரியாகளை பெருக்கிவிடும்.
சமைத்த உணவை ஃபிரிட்ஜில் முதல் தட்டில்தான் வைக்க வேண்டும். கீழ் பாகத்தில் வைத்தால், உணவின் தன்மை மாறும்.
குறிப்பாக அசைவ உணவை சமைத்த உடனே சாப்பிடுவதுதான் சரி. அதனை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அசைவ உணவை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். அதை பாதி வேகவைத்து அல்லது பாதி அளவு வறுத்து சாப்பிடுவது, அல்லது அதனை ஃபிரிட்ஜில் வைப்பது கேடாக மாறும்.

பட மூலாதாரம், Getty Images
பாக்கெட் பாலாக இருந்தால் இரண்டு நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து அருந்தக் கூடாது. முட்டை இரண்டு வாரங்கள் வரை மட்டுமே வைக்கலாம். பச்சையாக முட்டை மற்றும் பாலை அருந்தினால், அதில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால்,அலர்ஜி ஏற்படும்.
பழங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பழத்திற்கும் நேரம் வேறுபாடும் என்றாலும், முடிந்தவரை அவ்வப்போது புதிதாக வாங்கி உண்பதுதான் சரியானது. அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மேல் வைத்து சாப்பிட்டால் அதில் உயிர்சத்துகள் குறைந்து அந்த பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள் கிடைக்காது. சக்கையைச் சாப்பிடுவதற்குச் சமம்.
காய்கறிகளை பொறுத்தவரை, அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் மட்டுமே வைக்கலாம். அதற்கு மேல் வைத்து உண்பதால் நன்மை இல்லை. அந்த காய்கறியில் சத்துகள் இருக்காது.
காளான் பாக்கெட் வாங்கும்போது, அதில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு போன்ற காய்கறிகளில் பூஞ்சைகள் வளர்ந்து விடும். அது வெள்ளை நிறத்தில் காணப்படும். காளானில் அது தெரியாது என்பதால், வாங்கிய நாளில் இருந்து கெட்டுப்போவதற்கு முந்தைய தேதிக்குள் சாப்பிடுவது நல்லது.
கெட்டு போன உணவை உட்கொண்டால் என்ன நேரும்?
கெட்டுப் போன உணவை ஒருவர் சாப்பிட்டால் சிறிய உபாதைகள் உடனே தோன்றும் என்றும் ஒரு சிலருக்கு மரணமும் நேரலாம் என்கிறார் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஆர்.கணேஷ்.

பட மூலாதாரம், Getty Images
கெட்டுப் போன உணவை உட்கொண்டால் முதலில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்படும். இவை முதல் முன்னெச்சரிக்கை சமிக்கைகள். உடலில் நீர்ச்சத்து குறைவாகும்.
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பு உடலில் அதிகரித்தால், உடல் பலவீனமாகி, பல உறுப்புக்கள் பாதிப்படையும் அபாயமும் உள்ளது. அதாவது, பாதிக்கப்பட்டவரின் உடலில் கிருமிகள் நச்சுத்தன்மையை
அதிகரிப்பதால், எதிர்ப்பாற்றல் மிகவும் குறைவாக அந்த நபருக்கு இருந்தால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் ஏற்படும். முதலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் என பல உறுப்புகளும் செயலற்று போகும்.
பாதிப்பை ஏற்படுத்தும் கிருமியின் வீரியம் அதிகமாக இருந்து அந்த நபரின் எதிர்ப்பாற்றல் திறன் குறைவாக இருந்தால் அவர் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது.
தொடர்ந்து ஹோட்டல்களில் உணவைச் சாப்பிடுபவர்களுக்கு கலப்படம் காரணாமாக அலர்ஜி, வயிற்றுப்போக்கு ஏற்படும். குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டு உணவு இல்லாமல், ஹோட்டல் சாப்பாடு மட்டுமே சாப்பிடும் நபர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாது.
மேலை நாடுகளில் உள்ளது போல ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை நம் நாட்டில் உருவாக்கியுள்ளோம். குறைந்தபட்சம் ஹோட்டலில் வாங்கும் உனவை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கலப்படமான குளிர்ந்த தண்ணீரில் சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கும். முடிந்தவரை தண்ணீரை காய்ச்சி குடித்தால் பலவிதமான பாக்டீரியா தாக்கத்தை தவிர்க்கலாம். டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம். நம் நாட்டில் சுகாதாரமற்ற இடத்தில் உள்ள தண்ணீரால் பரவும் வியாதிகள்தான் அதிகம். கலப்படமான தண்ணீரில் சமைப்பது, அதை குடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













