16 மணி நேர பணி நேரம், அழுத்தத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் - தீர்வு என்ன?

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் பணியாற்றும் பேருந்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு 16 மணி நேர வேலை மற்றும் பணிச்சுமையால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு கோட்டங்களில் 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றில் 19,300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் அரசு பேருந்து போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகத்தின் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் அந்த போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரத்துக்கு குறைந்தது இரண்டு சுழற்சி முறைப்பணியில் ஈடுபடும் கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். ஆங்காங்கே நடக்கும் அரசு பேருந்து போக்குவரத்து கழக பேருந்துகளின் சாலை விபத்துகளுக்கும் இது காரணமாகலாம் என்றும் ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு போன்ற அசம்பாவிதம் ஏற்பட இந்த கடினமான பணி முறை காரணம் என்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.


"ஆண்டுதோறும் 4,500 பேர் பணி ஓய்வு"
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நந்தகோபால், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக புதிதாக பணி நியமனம் செய்யப்படாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் அதிக பணிச் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். உத்தேசமாக ஓராண்டில் குறைந்தது 4,500க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்," என்கிறார்.
"பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் இடங்கள் மீண்டும் புதிதாக நிரப்பப்படுவதில்லை. இதன் காரணமாக, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்ச்சியாக இரண்டு சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். ஒரு சுழற்சி என்பது எட்டு மணி நேரம். அந்த வகையில் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரம் பணி செய்த பிறகு, மறுநாள் மீண்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு வரவேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது," என்கிறார் நந்தகோபால்.
தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஆண்டு விடுப்பாக 71 நாட்கள் உள்ளன. கூடுதல் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கூட ஓய்வின்றி ஊழியர்கள் பணியாற்றும் நிலை உள்ளது," என்கிறார், நந்தகோபால்.
"16 மணி நேரம் ஓய்வில்லாமல் பணியாற்றிய பிறகு, மறுநாள் மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும். ஒருவேளை பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு விடுப்பு தர மறுத்து 'ஆப்சென்ட்' போடப்படுகிறது. குறிப்பாக, வார ஓய்வு என்பது கானல் நீராக இருக்கிறது. எனவே, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி தொழிலாளர்கள் மனநிறைவுடன் பணியாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார் நந்தகோபால்.
"பணியின் போதே மாரடைப்பு"

50 வயதிற்கு மேல் ஆகும் ஓட்டுநர்கள் ஓய்வின்றி பணிபுரிந்து வருவதால், உடல்நலம் பாதிக்கப்பட்டு பணியின் போதே மாரடைப்பு ஏற்படுவது போன்ற அசம்பாவிதம் நிகழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்களும் தற்போது அதிகரிப்பதாக விருதுநகர் போக்குவரத்துக் கழகத்தின் விருதுநகர் மண்டல ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வெள்ளதுரை.
1980களில் பணியில் சேர்ந்த பலரும் தற்போது ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார்கள். பல இடங்களில் 58 வயதை கடந்த ஊழியர்கள் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணிபுரியும் சூழல் நிலவுகிறது" என்கிறார் வெள்ளதுரை.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி இருக்கிறார்கள். எனவே உடனடியாக போக்குவரத்துக் கழகத்தில் தகுதி வாய்ந்த இளைஞர்களை பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் வெள்ளதுரை.
மேலும், அவர் கூறுகையில், "விருதுநகர் மண்டலத்தில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பணி பற்றாக்குறை இருக்கிறது. இதனால் பணி முடிந்த பிறகும் மீண்டும் பணியை தொடர ஓட்டுனர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஓய்வு இல்லாமல் நடத்துனர்கள் கூட ஓரளவு பணி சுமையை சமாளித்து விடுவார்கள். ஆனால், ஓட்டுநர்களால் ஓய்வில்லாமல் நிச்சயம் சமாளிக்க முடியாது" என்கிறார் வெள்ளதுரை.


யாருக்கு என்னென்ன பிரச்னை?
இந்த விவகாரத்தில் போக்குநரத்து கழக ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் சில பிரச்னைகளை எதிர்கொள்வதாகக் கூறும் வெள்ளதுரை அவற்றை பட்டியலிடவும் செய்தார்.
1. தனக்கென்று ஒதுக்கப்பட்ட பேருந்தை ஓட்டுநர் ஓட்டினால் தான் அன்றைக்கான ஊதியம் கிடைக்கும். இதனால் ஓட்டுநர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது.
2. இதன் காரணமாகவே சாலை விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இதே சமயத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டிய பேருந்துகள் வராமல் காலதாமதம் ஆகிறது. இதனால் பல கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
3. பொது சேவையை பெரிதும் நம்பி இருந்த பொதுமக்கள் தற்போது மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.
போராட்டம் நடத்த ஆயத்தமாகும் ஊழியர்கள்

தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. அதில் ஒரு பேருந்து ஓட்டுநருக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டது. அரசு தரப்பில் குறைந்தபட்ச கூலியான 18,000 ரூபாய் தான் வழங்கப்படும் என கூறியதால் அதன் மீதான முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போது அண்டை மாநிலங்களைப் போல் தனியார் முதலாளிகளிடம் குழுவாக அரசு பேருந்துகளை ஒப்பந்தத்தில் விடுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக பேசிய வேளாங்கண்ணி ராஜ், "கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் தமிழகத்தில் பேருந்துகளை பயன்படுத்துகிறார்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 30 கோடி ரூபாய் மேல் வருமானம் கிடைக்கிறது. பொது சேவையான இந்த பொது போக்குவரத்துக் கழகத்தை தொய்வடைய விடக் கூடாது. உடனடியாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்" என்கிறார்.
அமைச்சர் பதில் என்ன?

பட மூலாதாரம், SIVASANKAR FB
இந்த பிரச்னைகளுக்கு ஆணி வேரே காலி பணியிடங்கள்தான் என்பதால் அவை எப்போது நிரப்பப்படும் என்ற கேள்வியுடன் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் பேசினோம்.
"போக்குவரத்துக் கழகத்தில் காலி பணியிடங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்தன. அதனால் ஏற்பட்ட கடும் பணிச் சுமையை கருத்தில் கொண்டு தற்போதைய அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது," என்கிறார் அமைச்சர் சிவசங்கர்.
"தற்போது நிதித்துறை ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு காலி பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும்" என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













