மத்திய பிரதேச பழங்குடிப் பெண்கள் பைக் மெக்கானிக் வேலை செய்வது ஏன்?

பட மூலாதாரம், காயத்ரி காஸ்டே
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
குண்டா மஸ்கோலே, மத்திய பிரதேசத்தின் கண்ட்வா மாவட்டத்தின் கால்வா தொகுதியின் தொலைதூர கிராமத்தில் வசிக்கிறார். கால்வாவின் வனப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பழங்குடியினர் வாழ்கின்றனர்.
மஸ்கோலேயின் கிராமத்தின் பெயர் மாமாடோ. பழங்குடியின சமுதாயப் பெரியவர்களிடம் அவர்களின் பெயர் குறித்துக் கேட்டபோது, இந்தப் பகுதியில் ஒரே மாதிரியான பெயர்களை வைக்கும் மரபு இருப்பதாகச் சொன்னார்கள்.
இது வெறும் பெயர் மட்டுமல்ல. மாஸ்கோலே போன்ற பிற பழங்குடிப் பெண்கள் மற்றும் அவர்களது சமூகத்தினர் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்க வேண்டிய போராட்டங்களுக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.
மத்திய பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகள் இவை. வேலை தேடி இடம்பெயர்வதுதான் இந்தப்பகுதி மக்களின் தலைவிதி. இந்த இடப்பெயர்வுடன் தொடர்புடைய பல கதைகள் உள்ளன. வேலை செய்யும் இடத்தில் அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளை அவை விவரிக்கின்றன.

மத்திய பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து வேலை தேடி மக்கள் இடம்பெயர்கின்றனர்.
பழங்குடியின பெண்கள்பைக்குகளை பழுதுபார்க்கும் தொழிலை கற்கின்றனர்.
உள்ளூர் சமூக சேவகர்களின் உதவியுடன் இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பயிற்சி பெறுகின்றனர்.
இந்தப்பெண்கள் வாகன பழுதுபார்க்கும் வேலைச்செய்ய புதிய இடம் வழங்க பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இங்குள்ள பெரும்பாலான மக்களிடம் தங்கள் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான நிலம் இல்லை. அதனால்தான் குடும்பத்தில் வயது வந்த ஒவ்வொருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். சுற்றியுள்ள மாவட்டங்களில் வேலை கிடைத்தால் அதைச்செய்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் மாநகரங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் செல்கிறார்கள்.

'இங்கே யாரும் செய்யாத ஒரு வேலையை செய்ய நினைத்தேன்'
வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளமுடியாமல் குண்டா மஸ்கோலே முழுவதுமாக சோர்வடைந்தபோது அவர் எல்லாவற்றையும் தன் தலைவிதியிடம் விட்டுவிட்டார். அவரது மனநிலையும் சரியாக இருக்கவில்லை.
ஆனால் மஸ்கோலே தனது விரக்தியை கைவிட்டு, தன்னைப் போன்ற பழங்குடியினப் பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய ஒரு சம்பவம் நடந்தது.
வீட்டிற்குள் இருந்தபடி சமையல் செய்வதே பெண்களின் வேலை என்று கருதும் சமூகத்தை அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
"கொரோனாவின் போது திடீரென பொதுமுடக்கம் அமலானபோது, கால்வாவின் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர், மற்ற நகரங்களுக்கு வேலைக்குச் சென்றிருந்தனர். அவர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர். வீடு திரும்புவதற்கான அவர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது," என்று சமூக சேவகர் சீமா பிரகாஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நேரத்தில்தான் வருமானம் ஈட்ட உள்ளூர் மட்டத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று பழங்குடிப் பெண்கள் நினைக்கத் தொடங்கினர்.
"இங்கே வயல்களில் கூட கூலி வேலை கிடைப்பதில்லை. கடுமையாக உழைத்த பிறகு கிடைக்கும் பணம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இந்த பகுதியில் குறிப்பாக காடுகள் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போக்குவரத்திற்கான ஒரே வழி மோட்டார் சைக்கிள். ஆனால் ஐம்பது கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இரு சக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்கும் பஞ்சர் ஒட்டுவதற்கும் எந்த வசதியும் இல்லை. எனவே யாரும் செய்யாத வேலையைச் செய்யத் தொடங்கலாம் என்று எல்லோரும் சிந்திக்க ஆரம்பித்தனர்," என்று சீமா பிரகாஷ் குறிப்பிட்டார்.
சீமா பிரகாஷின் அமைப்பு மூலமாக இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பயிற்சி பெற்ற தன்னைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் இருப்பதாக மஸ்கோலே கூறுகிறார்.


இந்த வேலையைக் கற்றுக்கொண்ட பிறகு, இந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் அவரவர் பகுதிகளில் இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடைகளைத் திறந்துள்ளனர் என்று மஸ்கோலே தெரிவித்தார்.
மண்டூ கசீரை நாங்கள் அவரது கிராமமான காலம் குர்தில் சந்தித்தோம். அங்கு அவர் சொந்தமாக சிறிய கேரேஜை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் அப்பகுதி மக்கள் அவரது குடும்பத்தினரை சாலையில் இடைமறித்து, 'உங்கள் வீட்டுப்பெண்ணை ஏன் இந்த வேலை செய்ய வைத்துள்ளீர்கள்' என்று கேட்பார்கள்.
நாள் முழுக்க கூலிவேலை செய்தால் இருநூறு ரூபாய் கிடைக்கும். ஆனால் அதுவும் தினமும் கிடைக்காது, சில நாட்களில் மட்டுமே வேலை கிடைக்கும் என்று மண்டூ கூறுகிறார். "பிறகு நான் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் வேலையைக் கற்றுக் கொண்டேன். கால்வா டவுனில் பாபு பாயின் கேரேஜில் அவரிடமிருந்தும் வேலை கற்றுக்கொண்டேன். கிராமத்திற்கு திரும்பி வந்து இந்த வேலையை நானே செய்ய ஆரம்பித்ததும் எனக்கு பணம் வர ஆரம்பித்தது. அது மகிழ்ச்சியை தந்தது. இப்போது ஒரு நாளைக்கு 400-600 ரூபாய் கிடைக்கிறது. இப்போது எனக்கு பிடித்ததை கடையில் இருந்து வாங்கமுடிகிறது," என்கிறார் அவர்.

இப்போது தனது சமூகத்தைச் சேர்ந்த யாரும் வேலைக்காக இடம்பெயர மாட்டார்கள் என்று சாவ்லி கேடா கிராமத்தில் வசிக்கும் காயத்ரி கூறுகிறார்.
முன்பு கிண்டல் செய்தவர்கள் இப்போது மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்க வருகிறார்கள்.
"இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் வேலையைக் கற்றுக் கொள்ள என் சகோதரி செல்லும் போது சுற்றி உள்ளவர்கள் என் தந்தையை கேலி செய்தார்கள்," என்று காயத்ரி காஸ்டேவின் சகோதரி சாவித்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"என் அப்பா மனமுடைந்து போவார். ஆண்களின் வேலையை இவள் கற்றுக்கொள்கிறாள். இதனால் அவர்கள் கேலி செய்கிறார்கள் என்று அம்மாவும் சொல்வார். ஆனால் நான் காயத்ரியை ஆதரித்தேன். வேலையைக் கற்றுக்கொண்ட பிறகு காயத்ரி கிராமத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும்போது நமக்கு பணம் வரத்தொடங்கும் என்று நான் வீட்டில் சொன்னேன். மற்றவர்களைப்பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும். நமக்கு உதவி செய்ய அவர்கள் வரப்போவதில்லை," என்று சாவித்ரி குறிப்பிட்டார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலையை இந்தப் பெண்கள் செய்யும்போது அது சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்ததானே செய்யும். ஆனாலும் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலையைக் கற்றுக் கொண்டனர்.

இதே தொலைதூர பகுதியில் உள்ள மெஹ்லு கிராமத்தில் ஷிவானி உய்கே வசிக்கிறார். தன் குடிசையில் கேரேஜைத் திறந்தபோது, அங்குள்ள இளைஞர்கள் கேலி செய்ததாக அவர் சொல்கிறார்.
"ஆனால் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகும்போது பழுதுபார்க்க என்னிடம் வரத் தொடங்கினார்கள். கிராமத்தில் இருந்து வெகுதொலைவு வரை பெட்ரோல் பம்பும் இல்லை, பழுதுபார்க்கும் கடையும் இல்லை. எனவே எங்களுக்கும் இந்த வேலையை கற்றுக்கொடுங்கள் என்று எங்கள் ஊர் இளைஞர்கள் என்னிடம் சொல்கிறார்கள்," என்றார் அவர்.
இவர் வேலை செய்யும் விதத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகின்றனர். வேலை செய்யும் போது இந்தப் பெண்களுக்கு காயம் ஏற்படாமல் இருக்கவேண்டுமே என்றும் சிலர் சொல்வார்கள்.
இப்போது இந்தப் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் பழுதுபார்க்கும் கருவிகளை மிகவும் லாவகமாக கையாள்கின்றனர்.

இந்தப் பகுதி இடப்பெயர்வு மற்றும் சுரண்டலின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்குள்ள பழங்குடியின பெண்கள் அதை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. கடந்த சில மாதங்களில் அவர்கள் கற்றுக்கொண்ட கலை, அவர்களின் முகத்தில் மீண்டும் புன்னகையை வரவழைத்துள்ளது. இந்தப் பெண்களுடன் தொடர்புடைய அமைப்பின் மிகப்பெரிய வெற்றியாகும் இது.
ஆனால் தங்கள் மகள் சொந்தக்காலில் நின்றுவிட்டதை மண்டூ கசீரின் குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வரும் நாட்களில் மற்றொரு சவால் அவர்கள் முன் வரப் போகிறது. அதுதான் மண்டூ கசீரின் திருமணம்.
"நான் என் வேலையை தொடர்ந்து செய்வேன். திருமணம் செய்து கொள்ள விரும்பினால் செய்துகொள், இல்லையென்றால் வேண்டாம் என்று பையனிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவேன்," என்கிறார் மண்டூ.

கால்வாவின் தொலைதூரப்பகுதிகளைச் சேர்ந்த இந்தப்பெண்களின் கடின உழைப்பை உள்ளூர் பஞ்சாயத்தும் அங்கீகரித்துள்ளது. இந்தப் பெண்கள் புதிய கேரேஜ் திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்யவேண்டும் என்று தற்போது பஞ்சாயத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
"இந்தப் பெண்கள் இவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது அவர்கள் கற்றுக்கொண்டு சொந்தக் காலில் நிற்கிறார்கள். நாங்களும் அவர்களின் வேலையில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம்," என்று கால்வா பஞ்சாயத்து துணைத்தலைவர் ஷுபம் திவாரி கூறினார்.
கண்ட்வா மாவட்டத்தின் தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்கள் சமூகத்தினருக்கு காட்டிய பாதை அனைவரின் கண்களையும் திறந்துள்ளது. ஒரு வேளை இனி யாரும் வேலை தேடி வேறு மாநிலங்களுக்குச்செல்ல வேண்டிய அவசியமிருக்காது என்றே தோன்றுகிறது.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












