காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images/Twitter
- எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர், ஜெய்பூரில் இருந்து
'ராஜஸ்தான் காங்கிரஸ்' மீண்டும் தலைமை மாற்றத்துக்காக போராடி வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை மாலையில் டெல்லி வந்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், வியாழக்கிழமை காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கு கெலாட்டின் போட்டியாளராகக் கருதப்படும் சச்சின் பைலட்டும் தற்போது டெல்லியில் இருக்கிறார்.
சோனியா காந்தியை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பதவியேற்பதற்கான போட்டியில் நான் இல்லை," என்று தெரிவித்தார்.
"இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் எங்களையெல்லாம் உலுக்கி விட்டது. நான் முதல்வராகத் தொடர வேண்டும் என்று விரும்புவதாக ஒரு செய்தி நாடு முழுவதும் பரவியது. அதனால் நான் வருத்தமாக இருக்கிறேன். அது எனக்கு மட்டும்தான் தெரியும். அதனால்தான் எல்லாம் நடக்கிறது. சோனியா காந்தியை சந்தித்தபோது, 'ஒருவரி முன்மொழிவை' கூட நிறைவேற்ற முடியாமல் போனதற்காக அவரிடம் நான் மன்னிப்பை கேட்டுக் கொண்டேன்," என்கிறார் அசோக் கெலாட்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பு மனு விவகாரத்தில் என்ன முடிவெடுத்தீர்கள் என்று மீண்டும் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், "இப்போதைய சூழலில் நான் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அதுவே எனது தீர்மானம்" என்று கூறினார்.
இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக இனி நீடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அசோக் கெலாட், "நான் முதல்வராக நீடிப்பதா இல்லையா என்பதை சோனியா காந்திதான் முடிவு செய்வார்," என்று பதிலளித்தார்.
உதய்பூர் சிந்தன் ஷிவிரில் (சிந்தனை அமர்வு கூட்டம்) ஒரு நபருக்கு, ஒரு பதவி என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சிதான் நிறைவேற்றியது. அதே கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினார். ஆனால், அதை அவரது போட்டியாளராகவும் முதல்வர் பதவிக்கு தேர்வாகும் தலைவரில் முன்னோடியாகவும் கருதப்பட்ட சச்சின் பைலட் கடுமையாக எதிர்த்தார்.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, அசோக் கெலாட்டின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்பதற்காக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கன் ஆகியோர் டெல்லியில் இருந்து கட்சியின் மேலிட பார்வையாளர்களாக ஜெய்பூருக்கு வந்திருந்தனர். ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராகவும் அஜய் மாக்கன் இருக்கிறார்.
அந்த கூட்டத்தில் புதிய தலைமை குறித்து விவாதிக்கப்பட இருந்தது. அதேவேளை, கெலாட்டின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் சாந்தி தாரிவாலின் வீட்டிற்கு அக்கட்சி எம்எல்ஏக்கள் பலரும் செல்லத் தொடங்கினர். கெலாட் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக சாந்தி தாரிவால் உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மாக்கனுக்கு அழுத்தம் தர விரும்பினோம்: தாரிவால்

90க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தனது வீட்டிற்கு வந்துள்ளதாக சாந்தி தாரிவால் பிபிசியிடம் தெரிவித்தார்.
சாந்தி தாரிவாலின் வீட்டில் கூடிய பின்னர், இந்த எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சிபி ஜோஷியின் இல்லத்திற்கு வந்து ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். அஜய் மாக்கன் சச்சின் பைலட்டை மாநில முதல்வராக தேர்வு செய்யும் முடிவை எம்எல்ஏக்கள் மீது திணிக்க விரும்புவதாகவும், அதற்கு எம்எல்ஏககள் உடன்படவில்லை என்றும் சாந்தி தாரிவால் கூறுகிறார்.
"காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் மட்டுமே தலைவர் தேர்வு செய்யப்படுவார், அவரை தேர்வு செய்வது அஜய் மாக்கன் அல்ல. எம்.எல்.ஏ.க்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருவரின் விருப்பத்துக்காக தங்களின் தலைவரை அவர்கள் தேர்வு செய்ய மாட்டார்கள்," என்று தாரிவால் தெரிவித்தார்.
அத்தகைய ஒரு சூழல் அஜய் மாக்கன் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு மிகவும் சங்கடமானதாக இருந்தது. கட்டாயத்தின் காரணமாக இருவரும் டெல்லிக்கு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சாந்தி தாரிவால், ராஜஸ்தான் சட்டமன்றத்தின் காங்கிரஸ் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் தர்மேந்திர ரத்தோர் ஆகியோருக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், 10 நாட்களுக்குள் தங்களுடைய பதிலைத் தெரிவிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலிட தலைவர்களின் அறிக்கையில் அசோக் கெலாட் மீது எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. அவருக்கு அதில் தொடர்பில்லை என்று மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அசோக் கெலாட் உண்மையில் இந்த முன்னேற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்தாரா, அதே நேரத்தில் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீஸை பெற்ற மூன்று தலைவர்களும் அசோக் கெலாட்டின் தீவிர விசுவாசிகள் ஆக அறியப்படுபவர்கள்.
அந்த வகையில் கெலாட்டின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்காது. இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அசோக் கெலாட்டுக்கு எல்லாம் தெரிந்திருந்ததால் இப்படியொரு நிலைமை வராமல் அவரால் தடுத்திருக்க முடியும். மாறாக பிரச்னை பெரிதாக அவர் அனுமதித்தார்.
மோதலை விரும்பாத மேலிடம்

உண்மையில், அசோக் கெலாட்டை நேரடியாக எதிர்கொள்ள காங்கிரஸ் மத்திய தலைமை விரும்பவில்லை.
வட மாநிலங்களில் பிரபலமான முன்னணி நாளிதழான தைனிக் பாஸ்கரின் தேசிய ஆசிரியர் எல்.பி. பந்த் இது குறித்து நம்மிடையை விவரித்தார்.
"அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார போட்டி தொடர்பான சண்டை ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது, கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் அவருக்காக போராடுகிறார்கள். ஆனால், வெளிப்படையாக இந்த மோதல் நடக்கவில்லை. கெலாட்டின் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏக்கள் சம்மதம் இல்லாமல் அவர்களால் காங்கிரஸ் மேலிடத்துக்கு சவால் விடுக்க முடியாது," என்கிறார் எல்.பி. பந்த்.
"சச்சின் பைலட் முதல்வராக வருவதை அசோக் கெலாட் விரும்பவில்லை. அதனால்தான் எம்.எல்.ஏ.க்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான 'உத்தி' கெலாட் போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிக்கு மிகவும் இயல்பானதாகவும் எளிதாகவும் இருந்தது.
ராஜஸ்தான் காங்கிரஸில் சக்தி வாய்ந்த தலைவராக சச்சின் பைலட் வளர்ந்து விட்டார். இந்தக் கூற்றை கெலாட் போன்ற பெரிய தலைவரால் கூட நிராகரிக்க முடியவில்லை.
இந்த விவகாரத்தில் கெலாட் மீது காங்கிரஸ் மேலிடம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இது குறித்து எல்.பி.பந்த் கூறுகையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு முழு பலத்துடன் செயல்பட்டு வரும் ஒரே மாநிலம் ராஜஸ்தான். அது மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசுக்கு முன்பாக 'ஒரு மாதிரி' அரசாங்கத்தை நிகழ்த்திக் காட்டியவராக கெலாட் அறியப்படுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்த ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், ராஜஸ்தான் காங்கிரசில் சர்ச்சையை தீவிரப்படுத்தாமல் அதைக் கட்டுப்படுத்த முடியும் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது. ஒருவேளை கெலாட் மீது கட்சி மேலிடம் குற்றம்சாட்டியிருந்தால், அது காங்கிரஸுக்கு வரவிருக்கும் நாட்களை கடினமானதாக ஆக்கியிருக்கும்," என்கிறார்.
"தமது நெருங்கிய நண்பர்கள் மூவருக்கும் அவர்களுடைய செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், அது கெலாட்டுக்கு சாதகமாக எடுத்த முடிவாக கொள்ள முடியாது," என்கிறார் பந்த்.
சம்பந்தப்பட்ட மூவருக்கும் குறிப்பிட்ட நாளுக்குள் பதில் தராவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை இருக்கும் என்பதை கட்சி மேலிடம் அந்த நோட்டீஸில் சமிக்ஞை ஆக கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாளாகும். கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்திருந்தாலும், மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறியதற்காக அவர் விரைவாகவே கட்சித் தலைமையின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். எனவே அடுத்த 48 மணி நேரம் அசோக் கெலாட்டுக்கு மிகவும் முக்கியமானது.

பட மூலாதாரம், Getty Images
பலவீனமடையும் கெலாட்டின் பிம்பம்

கடந்த ஐந்து நாட்களில் ராஜஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்து, இங்குள்ள ஆய்வாளர்கள் கூறுகையில், அசோக் கெலாட்டின் பிம்பம் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களிடையே பலவீனமடைந்துள்ளது. அசோக் கெலாட் இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே காந்தி குடும்பத்திற்காக அர்ப்பணிப்புள்ள தொண்டராக இருந்து வருபவர். ஆனால், சமீப காலமாக நடந்த சம்பவங்கள் அவரது அந்த சமூக பிம்பத்தை கெடுத்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர்.
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பேராசிரியராக இருந்த ராஜீவ் குப்தா, "அசோக் கெலாட் இப்போது வளர்ந்து வரும் நட்சத்திரம் அல்ல. அவர் 1998, 2008 ஆகிய இரண்டு காலகட்டங்களில் இருந்த அளவுக்கு தற்போது பிரபலமாக இல்லை. நிச்சயமாக சச்சின் பைலட் அவருக்கு முன்னால் ஒன்றுமில்லை தான். ஆனால் அசோக் கெலாட்டுக்கு அரசியலில் இதற்கு மேல் பெரிய வளர்ச்சி இருக்காது. அசோக் கெலாட் தனது திறமை மற்றும் கடின உழைப்பால் காந்தி குடும்பத்தின் நம்பிக்கையை வென்றார், ஆனால் சமீபத்திய முன்னேற்றங்களால் அவரது நிலை நிச்சயமாக பலவீனமடைந்துள்ளது," என்கிறார்.
மேலும் அவர், "சமீபத்திய நிகழ்வுகள் சச்சின் பைலட்டுக்கு பலன் அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். சச்சின் பைலட் இந்த முறை பொறுமையை வெளிப்படுத்தினார். முழு விஷயத்திலும் மௌனம் காத்ததன் மூலம், அவர் மீதான மேலிடம் கொண்டிருக்கும் நன்மதிப்பு கூடியிருக்கிறது. சில எம்.எல்.ஏ.க்களுடன் 2020இல் அவர் மானேசருக்குச் சென்ற விதம் அவரது அரசியலில் ஒரு கறையாக இருந்தது. ஆனால் இம்முறை விவேகமாக செயல்பட்டுள்ளார்," என்கிறார்.
சரி, இப்போது காங்கிரஸ் மேலிடத்தால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பெற்றுள்ள மூன்று கெலாட் விசுவாசிகள் யார் என்பதையும் அவர்களின் பின்புலத்தையும் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
சாந்தி தாரிவால்

முதல்வர் அசோக் கெலாட்டின் நெருங்கிய ஆதரவாளர்களில் சாந்தி தாரிவால் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 2008 முதல் 2013 வரை அசோக் கெலாட் முதலமைச்சராக இருந்தபோது, அம்மாநிலத்தின் உள்துறையை சாந்தி தாரிவால் கவனித்து வந்தார்.
சாந்தி தாரிவால் வடக்கு கோட்டா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோட்டா மக்களவை எம்பியாகவும் இருந்துள்ளார். 2018ல் அசோக் கெலாட் மீண்டும் முதலமைச்சரானதும், ஒரே நேரத்தில் பல இலாகாக்களை சாந்தி தாரிவாலிடம் ஒப்படைத்தார் கெலாட். தற்போது, சாந்தி தாரிவால், ராஜஸ்தான் அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள், சட்டம், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகளின் அமைச்சராக இருக்கிறார்.
1998இல் அசோக் கெலாட் முதல் முறையாக ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றபோது, சாந்தி தாரிவாலும் முதல் முறையாக எம்எல்ஏ ஆக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்தார். சச்சின் பைலட்டுக்கு எதிராக கெலாட் சார்பாக பேசியவர்களில், சாந்தி தாரிவால் முதன்மையானவர். சச்சின் பைலட்டை ஏற்க மாட்டேன் என்று சாந்தி தாரிவால் வெளிப்படையாக கூறி வருபவர்.

பட மூலாதாரம், Twitter/Dharmendra Rathore
தர்மேந்திர ரத்தோர்

அசோக் கெலாட் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர். சமீபத்திய ஆண்டுகளில், தர்மேந்திர ரத்தோர் அசோக் கெலாட் சந்திக்கும் பிரச்னைகளை சரி செய்பவராகவும் அறியப்படுபவர். கெலாட்டின் இரண்டாவது பதவிக் காலத்தில் ராஜஸ்தான் விதைக் கழகத்தின் தலைவராக இருந்தார் ரத்தோர்.
அசோக் கெலாட்டின் மகன் வைபவை தேர்தல் அரசியலுக்குக் கொண்டு வரும் பொறுப்பு ரத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது வெற்றியடையவில்லை.
2019 மக்களவை தேர்தலில் ஜோத்பூரில் இருந்து கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் 2 லட்சத்து 74 ஆயிரத்து 440 வாக்குகள் வித்தியாசத்தில் வைபவ் தோற்கடிக்கப்பட்டார்.
கஜேந்திர சிங் ஷெகாவத் தற்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அமைச்சரவையில் ஜல் சக்தி துறை அமைச்சராக உள்ளார். அசோக் கெலாட் தனது மகனின் பிரசாரத்தில் ஜோத்பூருக்கு ஆறு முறை சென்று வீடு, வீடாக பிரசாரம் செய்தார், ஆனால் அவரது மகனுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஜோத்பூர் மக்களவை தொகுதியில் மொத்தம் எட்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன, அங்கிருந்து காங்கிரசுக்கு 6 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் வைபவ் கெலாட் எந்த சட்டமன்ற தொகுதியிலும் மக்கள் செல்வாக்கைப் பெறவில்லை.
தேர்தலில் வைபவ் வெற்றி பெற்றிருந்தால், கெலாட் முகாமில் தர்மேந்திர ரத்தோரின் அந்தஸ்து மேலும் உயர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 2020ல், கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் கிளர்ச்சி செய்தபோதும், அதை முறியடித்ததில் தர்மேந்திர ரத்தோருக்கு முக்கிய பங்கு இருந்தது.
இந்த நிலையில், தர்மேந்திர ரத்தோர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனை ரத்தோரின் வளர்ந்து வரும் அந்தஸ்துடன் தொடர்புடையதாக பேசப்பட்டது. மேலும், இந்த சோதனைக்கு சச்சின் பைலட் தான் காரணம் என்று ரத்தோர் சந்தேகம் எழுப்பினார்.
மத்திய நிறுவனங்களுக்கு சச்சின் பைலட் தவறான தகவலை அளித்திருக்கலாம் என்று தர்மேந்திர ரத்தோர் பிபிசியிடம் தெரிவித்தார். சச்சின் பைலட்டை 'துரோகி' என்றும் தர்மேந்திர ரத்தோர் அழைக்கிறார்.
ராஜஸ்தானின் முதலமைச்சராக அசோக் கெலாட் நீடிப்பார் என்றும், சச்சின் பைலட் ஏற்கப்பட மாட்டார் என்றும் தர்மேந்திர ரத்தோர் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறுகின்றனர். தர்மேந்திர ரத்தோர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர், ராஜபுத்திரர்களை காங்கிரசுக்கு ஆதரவாக அணிதிரட்டும் பொறுப்பை கெலாட் அவருக்கு வழங்கியிருக்கிறார்.

பட மூலாதாரம், Twitter/Mahesh Joshi
மகேஷ் ஜோஷி
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக மகேஷ் ஜோஷி உள்ளார். இவர் ஜெய்பூரில் உள்ள ஹவா மஹால் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. 2009இல், ஜோஷி ஜெய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்திற்கு முன்பு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களை சாந்தி தாரிவாலின் வீட்டில் திரட்டியதாக ஜோஷி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மேலிடத்திடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸைப் பெற்ற அவர், எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
ஜோஷி நிதி ரீதியாக கெலாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறார். அசோக் கெலாட் அரசாங்கத்தில் நடக்கும் அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் அதிகாரிகள் நியமனங்களில் மகேஷ் ஜோஷிக்கு முக்கிய பங்கு இருப்பதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
எந்த ஒரு அதிகாரியையும் இடமாற்றம் செய்ய மகேஷ் ஜோஷியின் முன்னுமதி தேவை என்று பெயரை வெளியிட விரும்பாத மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.அதிகாரத்தில் இருப்பவர்களை கையாள்வதில் அவருக்கு அனுபவம் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெய்பூரில் அசோக் கெலாட் நம்பும் ஒரே ஆதாரமாக மகேஷ் ஜோஷி இருக்கிறார். ஏனெனில், இந்த நகரம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் கோட்டையாக கருதப்படுகிறது. இது தவிர, ராஜஸ்தான் காங்கிரஸில் மகேஷ் ஜோஷி ஒரு பிராமண முகமாகவும் பார்க்கப்படுகிறார். அது அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சிக்கு பயனைத் தருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













