ரஷ்யா - யுக்ரேன் போர்: இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் எதிர்காலம் என்னவாகும்?

எதிர்காலம் குறித்த விரக்தியில் யுக்ரேனி்ல் இருந்து திருமபிய இந்திய மருத்துவ மாணவர்கள்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ரஷ்யா - யுக்ரேன் போர் காரணமாக யுக்ரேனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர ஏற்பாடுகள் செய்து தர இயலாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் யுக்ரேனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் தங்களது மருத்துவ படிப்பை எப்படி தொடர போகிறோம் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

ரஷ்யா - யுக்ரேன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக யுக்ரேனில் படித்த மருத்துவ மாணவர்கள் சுமார் 20,000 பேர் இந்தியா திரும்பி உள்ளனர். இவர்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியுறவுத் துறைக்கான மக்களவை குழு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

'படிப்பை தொடர ஏற்பாடு செய்து தர இயலாது'

இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு கடந்த 5ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

ஜெய்சங்கர்

இந்நிலையில் வழக்கு மீண்டும் கடந்த 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ''யுக்ரேனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது.

யுக்ரேனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர தளர்வுகள் செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் தரத்தை பாதிக்கும்'', என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் படித்த இந்திய மாணவர்கள் அவர்களின் படிப்பை இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் தொடரும் முறை 'தேசிய மருத்துவ சட்டத்தில்' வழிவகை செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு மன அழுத்தம்

மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் குறித்து, யுக்ரேனில் மருத்துவம் படித்து வரும் மாணவி வர்ஷா பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் யுக்ரேனில் மருத்துவம் படித்து வருகிறேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் என்னுடைய மருத்துவ படிப்பு முடிந்து நான் மருத்துவராக மாற இருந்த நிலையில் யுக்ரேனில் ஏற்பட்ட போர் காரணமாக நான் மருத்துவம் படித்து வந்த பல்கலைக் கழகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தேன்.

யுக்ரேனில் நடைபெற்று வந்த போரால் என்னுடைய மருத்துவ கனவு பாதித்துள்ளது. என்ன செய்வதென்று புரியாமல் குழப்பமான மனநிலையில் நான் மட்டும் அல்ல என்னுடன் கல்வி பயிலும் அனைத்து மருத்துவ மாணவர்களும் உள்ளனர்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவ மாணவர்களும் தங்கள் எதிர்காலம் பற்றிய தெளிவற்ற நிலை நீடிப்பது குறித்து வருத்தப்பட்டனர்.

"நாங்கள் எப்போது மருத்துவம் படித்து முடிக்கப் போகிறோம். எங்கு படிக்கப் போகிறோம் என்பது குறித்து எந்த விதமான தெளிவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறேன்.

'Academic Mobility Program' எனும் திட்டத்தின்கீழ் யுக்ரேனில் இருக்கக்கூடிய எங்கள் பல்கலைக்கழகம் இந்தியா அல்லது உலகின் ஏதாவது ஒரு நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அதன் அடிப்படையில் அந்த கல்லூரியில் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள்.

எதிர்காலம் குறித்த விரக்தியில் யுக்ரேனி்ல் இருந்து திருமபிய இந்திய மருத்துவ மாணவர்கள்
படக்குறிப்பு, யுக்ரேனில் இருந்து மருத்துவ படிப்பை விட்டு திரும்பிய மகளை வரவேற்ற பெற்றோர்

யுக்ரேனில் போர் முடிந்த பின் மீண்டும் அந்த மாணவர்கள் யுக்ரேன் பல்கலை கழகத்தில் படிப்பை தொடரும் வசதி உள்ளது. இவ்வாறு இந்தியாவில் மருத்துவ மாணவர்கள் கல்வி பயில தேசிய மருத்துவ கல்வி ஆணையம் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால், தற்போது குறிப்பட்ட சில நாடுகளில் 'Academic Mobility Program' அடிப்படையில் மருத்துவ படிப்பை தொடர என தேசிய மருத்துவ கல்வி ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதில் மாணவர்கள் கல்வி தொடர நினைத்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பெயர் இடம்பெறவில்லை.

யுக்ரேன் பல்கலைக்கழகத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் (டி.சி) பெற்று கொண்டு ரஷ்யா போன்ற நாடுகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம் என முடிவு செய்திருந்த நிலையில் அங்கு செப்டம்பர் இறுதியுடன் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் முடிவடைய உள்ளன. இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு சேர்ந்து படிக்கும் வாய்ப்பை இழந்து விட்டோம்.

இந்த மாத இறுதிக்குள் இந்திய அரசு சார்பில் எங்களுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர முடியாது என கூறியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்வதென தெரியாமல் இருக்கிறோம்," என்றார் மருத்துவ மாணவி வர்ஷா.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெளியாவதால் மாணவர்கள் குழப்பம்

எதிர்காலம் குறித்த விரக்தியில் யுக்ரேனி்ல் இருந்து திருமபிய இந்திய மருத்துவ மாணவர்கள்

இது குறித்து மருத்துவ மாணவர் திவாகர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "யுக்ரேனில் மருத்துவம் படித்து வருகிறேன். யுக்ரேனில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து மாணவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்லும்போது யுக்ரேன் அரசு மூன்று வாய்ப்புகளை அறிவித்தது.

உலகின் மற்ற நாடுகளில் இயங்கி வரும் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியுடன் யுக்ரேன் பல்கலைக்கழகம் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு அந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்தியாவில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக இந்த படிப்பை தொடர்வது. யுக்ரேன் நாட்டிற்கு வர விருப்பம் உள்ள மாணவர்கள் நேரடியாக வந்து தங்கி படிக்கலாம் என்ற மூன்று வாய்ப்புகளை யுக்ரேன் அரசு அறிவித்தது.

இந்த மூன்று வாய்ப்புகளையும் ஜூன் மாதத்தில் யுக்ரேன் அரசு அறிவித்தது. ஆனால் இதனை தேசிய மருத்துவ கல்வி ஆணையம் நிராகரித்தது. இது தொடர்பாக யுக்ரேன் அரசு இந்திய அரசிடம் தூதரக அதிகாரிகள் மூலம் கேட்டதற்கும், இந்திய அரசு முறையான பதில் அளிக்கவில்லை. யுக்ரேனில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் படிப்பைத் தொடர எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

தேசிய மருத்துவ ஆணையத்தின் மெத்தன போக்கால்தான் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் எந்தவிதமான பதிலையும் இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை.

ஒரு சில வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கான தனியார் ஏஜெண்டுகள் யுக்ரேனில் படிக்கும் மருத்துவ மாணவர்களை வேறு நாடுகளில் மருத்துவம் பயில ஏற்பாடு செய்து தருவதாக பணம் கேட்கின்றனர். எங்களால் பெரிய தொகையை செலுத்தி மீண்டும் வேறு நாட்டில் சென்று பயில முடியாது என்பதால் அது குறித்து யோசித்து வருகிறோம்."

எதிர்காலம் குறித்த விரக்தியில் யுக்ரேனி்ல் இருந்து திருமபிய இந்திய மருத்துவ மாணவர்கள்

"இந்தியா, கஜகஸ்தான், நேபாளம், அர்மீனியா உள்ளிட்ட சில நாடுகளில் கல்வியை தொடர முடிவு செய்து இருந்த நிலையில் தேசிய மருத்துவ கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியா, நேபாளம், அர்மீனியா உள்ளிட்ட நாடுகளில் படிப்பை தொடர முடியாது என அறிவித்துள்ளது. இது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பதால் எனக்கு ஒன்றரை ஆண்டுகளில் படிப்பு முடிந்து விடும். ஆனால் இரண்டாம் ஆண்டு பயிலும் பல மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை நினைத்து வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

உடனடியாக இந்திய அரசு, யுக்ரேனில் படித்த மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கல்வி பயில ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையென்றால் வெளிநாடு சென்று படிப்பதற்கான முறையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என மருத்துவ மாணவர் திவாகர் கோரிக்கை வைத்தார்.

குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?

மருத்துவ மாணவியின் தாயான தேன்மொழி பிபிசி தமிழிடம் பேசுகையில், "மிகவும் கஷ்டப்பட்டுதான் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எங்கள் குழந்தைகள் படிப்பை தொடரலாம் என நினைத்திருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் அளித்த தகவல் யுக்ரேனில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளது.

போரால் யுக்ரேனுக்கு அனுப்பி எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. எனவே, ஆன்லைன் வகுப்பு மூலம் மற்ற நாடுகளில் படிப்பை தொடரவும் அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனைகளில் பயிற்சி எடுக்கவும் இந்திய அரசு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

ஏதாவது ஒரு வழியில் எங்களது குழந்தைகளின் படிப்பை தொடர்வதற்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும். அப்படி உதவி செய்ய முன்வந்தால் மட்டுமே எங்களது குழந்தைகளின் மருத்துவ கனவு நனவாகும் இல்லையெனில் எங்கள்' குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். பெற்றோர் அனைவரும் குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார் மாணவியின் தாயார் தேன்மொழி.

காணொளிக் குறிப்பு, உங்கள் பர்ஸை பதம் பாாக்கும் தமிழக மின் கட்டண உயர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :