யுக்ரேனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் பிரச்சனைக்கு ஜெய்சங்கர் சொன்ன தீர்வு என்ன?

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பட மூலாதாரம், SANSAD TV

யுக்ரேன் - ரஷ்யா மோதல், பொருளாதார தாக்கம், மாணவர்களின் கல்வி உள்ளிட்டவற்றில் இந்தியாவின் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், "யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடிக்கு எதிராக முதலாவதாகவும் வலுவானதாகவும் வினையாற்றிய நாடு இந்தியா. ரத்தம் சிந்துவது மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் மூலம் எந்தவித தீர்வையும் எட்ட முடியாது என, நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.'' என்றார்.

இந்தியாவின் முடிவு

தொடர் அவர் பேசுகையில், ''இந்த விவகாரத்தில் இந்தியா ஒரு சார்பை தேர்ந்தெடுத்தால், அது அமைதியின் சார்பாகத்தான் இருக்கும். இதுதான் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும். யுக்ரேனின் புச்சா பகுதியில் நடந்தவற்றை (மக்கள் கொலைகள்) பல எம்.பிக்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

புச்சாவில் நடந்துவருபவை குறித்த தகவல்கள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அங்கு நடைபெற்ற கொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுதொடர்பான சுதந்திரமான விசாரணை கோருவதை ஆதரிக்கிறோம்.'' என்றார்.

இந்திய பொருளாதாரத்தில் தாக்கம்

மேலும், ''யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடியால் உரங்களின் விலை உயர்ந்துள்ளது, இதனால் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்ந்துவரும் நிலையில், நாட்டின் சாதாரண மக்கள் கூடுதல் மற்றும் தவிர்க்க முடியாத சுமைகளுக்கு ஆளாகக்கூடாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். யுக்ரேன் நெருக்கடி உலக பொருளாதாரம் மற்றும் நம் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.

போர் நிறுத்தம் வேண்டும்

யுக்ரேன் -ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து ஆய்வுசெய்து வருகிறோம். போர் நிறுத்தத்தை உடனடியாக கொண்டு வர தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும். யுக்ரேன் - ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த ஆதரிப்போம். இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தையை நடத்துவதையும் ஆதரிப்போம். இது தொடர்பாக, இந்திய பிரதமர் இருநாட்டு அதிபர்களுடனும் பேசியுள்ளார்.'' என்கிற தகவலையும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மருத்துவ மாணவர்களின் நிலை

தொடர்ந்து யுக்ரேனில் படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து கூறுகையில், ''யுக்ரேனில் மருத்துவம் படித்துவந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க தளர்வுகளை அளிக்க யுக்ரேன் அரசு முடிவு செய்துள்ளது. மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், நான்காம் ஆண்டுக்கு செல்வதற்கான KROK 1 தேர்வை ஒத்திவைத்துள்ளது.

அடிப்படை தகுதியை நிறைவு செய்ததன் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டுக்கு தேர்ச்சி பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிறநாடுகளில் படிக்க முயற்சி

மேலும் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ள மாணவர்கள் கல்வியைதைத் தொடரும் வகையில், ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, கசகஸ்தான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த நாடுகளில் யுக்ரேனில் உள்ள அதே பாடத்திட்டம் இந்த நாடுகளில் உள்ளது.'' இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

யுக்ரேனில் ஊர் மன்றத் தலைவர், அவருடைய கணவர் மற்றும் அவர்களின் மகனை ரஷ்யப்படைகள் கொன்றுள்ளதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமும், சாதாரண பொதுமக்கள் உடை அணிந்திருந்த 5 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், யுக்ரேனில் நடைபெறும் கொடூரங்களின் சாட்சியங்களுள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களின் நிகழ்விடங்களுக்கும் பிபிசியின் யோகிதா லிமாயே சென்றார்.

குடும்பத்துடன் கொல்லப்பட்ட ஊர் மன்றத் தலைவர்

யுக்ரேன் தலைநகர் கீயவின் புறநகரில் உள்ள புச்சா பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள், தற்போது இறுதியாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

முன்பு குழந்தைகள் சமூக மையமாக திகழ்ந்த கட்டடம் ஒன்றின் அடித்தளத்தில், ஐந்து சடலங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. சடலமாக கண்டெடுக்கப்பட்ட 5 ஆண்களும் சாதாரண பொதுமக்கள் உடைகளில் இருந்தனர், அவர்களின் கைகள் முதுகுக்குப் பின்னே கட்டப்பட்டிருந்தன.

அதில் சிலர் தலையில் சுடப்பட்டிருந்தனர், மற்றும் சிலர் மார்பில் சுடப்பட்டிருந்தனர். அவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், அவர்கள் அனைவரும் ரஷ்யப்படையினரால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் எனவும், அப்படையினரால் அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும், யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணொளிக் குறிப்பு, நெய்வேலி அனல்மின் நிலைய இரண்டாவது சுரங்க விரிவாக்க பணி: கரிவெட்டி கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? - பிபிசி தமிழின் கள நிலவரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: