இந்தியாவில் 'சாலை விபத்துகளின் தலைநகரம்' ஆகிறதா தமிழ்நாடு? - கவலையூட்டும் புள்ளிவிவரங்கள்

விபத்து

பட மூலாதாரம், Naturecreator / Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சாலை பாதுகாப்பில் அரசும் பொதுமக்களும் அதிகவனம் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கையில், சாலை விபத்துகள் குறித்த சில கவலைதரத்தக்க புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த சில எண்களை முதலில் காணலாம்:

Presentational grey line
  • 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
  • 2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
  • அதேசமயம், சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.
  • இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது.
  • அதேபோன்று மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டில் 14,415 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 5,360 உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.
  • 18,560 விபத்து நிகழ்வுகளுடன் மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளில் 11,419 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்த எண்கள் அனைத்தும் இந்தியாவில் விபத்துகளின் தலைநகரமாக தமிழ்நாடு ஆகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Presentational grey line
Presentational grey line

என்ன காரணம்?

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து 'பிபிசி தமிழிடம்' பேசினார், பல ஆண்டுகளாக சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் 'தோழமை' அமைப்பின் ராதாகிருஷ்ணன்.

"வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமங்கள் முழுமையாக பரிசோதனை செய்து கிடைக்கிறதா என்றால், சென்னை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலும் முறையாக நடப்பதில்லை.

இன்னொருபுறம் தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு பலரும் பொது போக்குவரத்தை தவிர்த்து சொந்த வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இ-வணிகம் இப்போது மிக எளிதாக கிடைக்கும் வேலையாக இருக்கிறது. அதற்கு நிச்சயம் இருசக்கர வாகனம் தேவை, இதனால் இருசக்கர வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது" என்றார், ராதாகிருஷ்ணன்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் விபத்துகள் அதிகமாக பதிவாவதும் இத்தகைய அதிகமான எண்ணிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற வாதமும் உள்ளது.

விபத்துகள்

பட மூலாதாரம், NCRB

தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து கடந்த மார்ச் மாதம் ஆட்டோமொபைல் ஆராய்ச்சி நிறுவனமான ஜேட்டோ டைனமிக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் கார்கள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்களின் எண்ணிக்கை ஏப். 2021-பிப். 2022 இடைப்பட்ட காலத்தில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

"விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் இடைப்பட்ட நேரத்தில் ரத்தப்போக்கால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றும் நோக்கத்தில், 'நம்மை காக்கும் 48 மணிநேரம்' என்ற திட்டத்தை அரசு ஆரம்பித்தது. ஆனால், இதனை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கடைபிடிப்பதில்லை, அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. விபத்துக்குள்ளானவர்களை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அவர்களை அனுமதிக்கத் தயங்குகின்றனர்" என தெரிவித்தார் ராதாகிருஷ்ணன்.

மேலும் அவர் பேசுகையில், "பொதுப் போக்குவரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இன்றைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.

விபத்துகள்

'தோழமை' அமைப்பு சார்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் சுமார் 970 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவர்கள் பலரும் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருகின்றனர் என தெரிவித்தார் ராதாகிருஷ்ணன். பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் அவர்கள் வீடுகளிலேயே எளிதாக கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

"செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுகின்றனர்"

விபத்துக்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் தெரிவிக்க விரும்பாத போக்குவரத்து காவல் ஆய்வாளர், "நெடுஞ்சாலைகளில் சாலைகளின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை. சாலை விளக்குகளை முறையாக கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். சிக்னல் இருப்பது தெரியாமல் சாலைகளில் நிகழும் விபத்துகள் அதிகமாக இருக்கின்றன.

பல விபத்துகள் லாரிகளை முந்திச்செல்ல வேண்டும் என நினைப்பதால் நிகழ்கின்றன. லாரி வருவதற்குள் சென்றுவிடலாம் என்ற அஜாக்கிரதையால் பல விபத்துகள் நிகழ்கின்றன. லாரி ஓட்டுனர்கள் பிரேக்கை அழுத்தினால், வாகனம் நிற்பதற்கே சில நொடிகளாகும். அதற்குள் விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன.

சாலைகளை அமைக்கும்போது சில பணிகள் தாமதமாவதால் வழிகளை மாற்றிவிடுவதாலும் குறிப்பிட்ட பகுதிகளில் விபத்துகள் நிகழ்கின்றன.

நடைமேடைக்கும் சாலையோர கடைகளுக்கும் இடையேயான குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில், சாலையோரத்தில் கடைகளை அமைக்காமல் சாலையின் நடுவிலேயே பல கடைகளை அமைப்பதாலும் விபத்துகள் நிகழ்கின்றன.

அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சாலை விதிமீறல் புகார்களை முறையாக பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

எனினும், அபராதம் விதிப்பதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்" என தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, சேசிஸ், பாடி தனித்தனியே வாங்கி உருவாக்கிய பேட்டரி ஜீப்: மஹிந்தரா சேர்மனை அசத்திய தமிழ் இளைஞர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: