உயிர் பலி வாங்கும் கொடைக்கானல் காப்புக்காடுகள் - அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காடுகளில் பயணம் செய்யும்போது, ஆங்காங்கே புகை பிடிக்கவும் மது அருந்தவும் தடை உள்ளதாகவும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை உள்ளதாகவும் எச்சரிக்கும் பலகைகளை பரவலாக காணலாம். இதேபோல, விலங்குகள் நடமாடும் பகுதி, விலங்குகளை தொந்தரவு செய்யாதீர்கள் போன்ற வாசகங்கள் இடம்பெற்ற பலகைகள் வனத்துறையால் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அத்தகைய எச்சரிக்கை பலகைகளோ விழிப்புணர்வு தகவல்களோ, காப்பு காட்டுக்குள் செல்லும் போது காணப்படுவதில்லை.
அந்த காட்டுப் பகுதிக்குள் எவ்வித விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகளையும் காண முடியாத நிலையே உள்ளது. இந்த காட்டுக்குள் இளைஞர்கள் பலர் அத்துமீறி செல்வது தொடர்கதையாகி விட்டது. முன்னறிவிப்பின்றியும் முன்னனுமதியின்றியும் செல்லும் சிலர் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையையும் எதிர்கொள்கின்றனர்.
காட்டுக்குள் செல்லும் இளைஞர்கள் விலங்குகள் அருகே வாகனத்தை நிறுத்தி படம் எடுப்பதும் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளின் முன் செல்ஃபி எடுப்பதும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இதை கட்டுப்படுத்தும் வகையில், வனத்துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களில் தொடர் ரோந்துப்பணியை முடுக்கி விட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்த காட்டுப்பகுதியில் இளைஞர்கள் சிலர், மது அருந்திவிட்டு ஆபத்தை உணராமல் அருவியில் டைவ் அடித்து, கடினமான பாறையில் தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வுகளும் உள்ளன. கடந்த காலங்களில் இங்குள்ள பல அருவிகளில் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
வெகு சமீபமாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணலூர் ஊராட்சியில் உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மிகவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் இடத்தில் இருந்து 100 அடிக்கு அப்பால் சுமார் 1,200 அடி பள்ளத்தாக்கு உள்ளது.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அந்த இடத்துக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்கின்றனர்.
மீட்பு பணியில் தொய்வு
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அஜய் பாண்டி, தனது நண்பர் கல்யாண சுந்தரம் உடன் புல்லா வெளி நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அப்போது போட்டோ எடுக்கும்போது கால் தவறி அருவியில் விழுந்த அஜய் பாண்டி அருவி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். அச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர், அஜய் பண்டியை தேடும் முயற்சியில் மூன்றாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு மழை பொழிவதால் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது.
இந்த நேரத்தில் வனத்துறை சோதனைச் சாவடி வழியாக நீர்வீழ்ச்சிக்கு வரும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுற்றுலா துறையை பொருத்தவரையில் அனைத்து அரசுத்துறைகளின் கூட்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை பொருத்தவரையில் சுற்றுலாத்துறையில் கூட்டு செயல்பாடுகள் இல்லாததால், சுற்றுலாத்துறையை மேம்படு்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் இயற்கை ஆர்வலர் மைக்கேல்.
ஒருங்கிணைப்பு அவசியம்
"தமிழ்நாட்டில் அதிகளவில் இயற்கை வளங்களுடன் கூடிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் வனத்துறை மட்டுமின்றி, சுற்றுலா துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுலா பகுதிகளை கண்காணித்து பாதுகாப்பு வசதிளை திட்டமிட வேண்டும். சுற்றுலாவாசிகளை அனுமதிப்பதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வசதிகள், பராமரிப்பு பணிகள் போன்றவற்றை அரசுத்துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்," என்றும் மைக்கேல் யோசனை கூறுகிறார்.

இந்த அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு. அதனால், மாவட்ட ஆட்சியர் அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து வாரந்தோறும் பெரியளவிலான கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

முதல்வரின் தனி பார்வை வேண்டும்
"தமிழ்நாட்டில் சுற்றுலா சேவை மேம்பட வேண்டுமானால், முதல்வரின் தனிப்பார்வை அவசியமாகிறது. அத்துடன் உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வனப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வாய்ப்பையும் உருவாக்கலாம்," என்கிறார் மைக்கேல்.
இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர்வாசியான மகேந்திரன் கூறும்போது, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க போதுமான கருவிகளோ மீட்புப் படையோ தயார் நிலையில் இல்லை என்று கூறுகிறார்.
"கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. மலைப்பகுதிக்கு சுற்றுலாவாக வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மலை மற்றும் அருவிகளின் ஆபத்தை அறிந்துகொண்டு வருவதில்லை. மாறாக, ஆபத்து அதிகம் நிறைந்துள்ள பகுதியில் செல்பி மோகத்தில் ஆபத்தை உணராமல் புதுவிதமான அனுபவத்தால் செல்பி எடுத்து விபத்தில் சிக்குகின்றனர்." என்கிறார் மகேந்திரன்.

மேலும் அவர், "மலைக்கு கீழே இருந்து வரும் தீயணைப்பு படை வீரர்களுக்கு இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற பயிற்சிகள் இல்லாததால், மீட்பு படையினரால் சரியான முறையில் செயல்பட முடியவில்லை. கொடைக்கானல் பகுதி, சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ளது. அதனால், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. அரசு, சுற்றுலா தல பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் தடுப்புகளை அமைக்காமல் உள்ளது. இதனால்தான் ஆபத்தான சுற்றுலா தல பகுதிகளில் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதனால், கொடைக்கானல் போன்ற சுற்றுலா தல பகுதிகளில் தேவையான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசு முன் வரவேண்டும்," என்கிறார்.
வனத்துறையின் எச்சரிக்கையும் மீறி ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகளால் தான் அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார் கொடைக்கானல் வனத்துறை அதிகாரி திலீப். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது;
"கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் சுற்றுலா வாசிகளின் பார்வைக்காக காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மூடப்படும். இந்த விதிகளை மீறி செயல்படும் சுற்றுலா வாசிகளால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மிகவும் ஆபத்தான இடங்களில் வனத்துறையின் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ஆனால் அதை அலட்சியப்படுத்தி அதை மீறி செல்லும் நபர்களால் தான் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல அரசுத்துறைகள் இணைந்து தான் செயல்பட்டு வருகின்றன. அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. பெரும்பாலும் வனத்துறையில் பணியாற்றுபவர்கள் அதே பகுதியைச் சார்ந்த நபர்கள் தான். ஆபத்தான இடங்களில் இனி கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
வனத்துறை தான் பொறுப்பு
வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் உயிர் பலிகள் ஏற்பட்டால் அதற்கு பொறுப்புடைமையாக வனத்துறை ஆக்கப்பட வேண்டும் என்கிறார் மகேந்திரன்.
சுற்றுலா பயணிகள் காட்டுக்குள் நுழைய கட்டணம் மட்டும் வசூலிக்கும் வனத்துறை, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தாமல் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இது குறித்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் தரப்பை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டபோது, செய்தியில் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து அம்சங்களும் அமைச்சரின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












