கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடருமா? மாநகராட்சியின் திடீர் நிலைப்பாடு

கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
கோவை மாவட்ட ஆட்சியர் ஜீ.சமீரன் கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏதுவான வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பேசு பொருளானது. தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த அரசு முடிவு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அதில், `முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, விலை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களையும் வளைத்துப் போட்டு வருகின்றன. தாங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலத்தின் மதிப்பை உயர்த்த அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரங்களையும் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். ரூ.162 கோடி அளவுக்கு டெண்டர் விடப்பட்டு ரூ.100 கோடி வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.
தன் குடும்ப நலனுக்காக மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் வகையில் கோவை புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் திட்டத்தை, `கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன்` அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலன் காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்` என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக கோவை வந்திருந்தார். ஆகஸ்ட் 24ஆம் தேதி கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, `கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் தான் வெள்ளலூர் பேருந்து நிலையம் செயல்படுத்தப்படும். அரசு திட்டத்தை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள்` என்று கூறினார்.
அந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளலூர் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதுவும் பேசவில்லை.
அன்றைய தினம் கோவையிலேயே இருந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
`சட்டமன்றத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையம் பற்றிய் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் கே.என்.நேரு அந்தத் திட்டம் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதற்குள் என்ன மாறியது என தெரியவில்லை. வெள்ளலூரிலிருந்து பேருந்து நிலையத்தை மாற்ற முயன்றால் அதிமுக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும்` என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினரும் அதிமுகவினரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சியில் 47வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், `மத்திய அரசின் ரைட்ஸ் (RITES) என்கிற அமைப்பு வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. அந்த அறிக்கை வந்த பிறகே மாநகராட்சி மாமன்றத்தின் முடிவு தமிழக அரசுக்கு அனுப்பப்படும். தற்போது வரை வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை` என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றம் தொடர்பான செய்திகள் வந்தபோதே நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் தான் மாமன்ற கூட்டத்திலும் கேள்வி எழுப்பினோம்.
இந்த விஷயத்தில் பதிலளித்த மாநகராட்சி ஆணையர் நாங்கள் தெரிவித்த தகவலை ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ரைட்ஸ் அமைப்பு தற்போது ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு முடிந்ததும் முழுமையான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மாமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று மட்டுமே ஆணையர் கூறுகிறார்," என்றார் பிரபாகரன்.
ரூ.160 கோடி மதிப்புள்ள புதிய பேருந்து திட்டத்தின் 40% பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த முதல் சில மாதங்கள் வரை மட்டுமே வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் கட்டுமான பணிகள முழுமையாக நிறுத்தப்பட்டன. தமிழக அரசும் கோவை மாநகராட்சியும் இணைந்து 50% செலவை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. மாநகராட்சி தற்போது வரை தன்னுடைய நேரடி பட்ஜெட்டிலிருந்து ரூ.38 கோடி வரை செலவு செய்துள்ளது. இதற்குப் பின் மாற்றுவது சரியாக இருக்காது என்கிறார் பிரபாகரன்.

எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், வெறும் ஆய்வு அறிக்கையை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல் வெள்ளலூர் மக்கள் கோவை பொதுமக்களின் கருத்தை கேட்டும் முடிவெடுக்க வேண்டும். வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. கோவையில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய அரசு நிலம் இல்லை. வேறு இடத்தில் நிலம் வாங்கினாலும் அதற்கு பல கோடி ரூபாய் செலவாகும். எனவே தான் இந்தத் திட்டத்தை கைவிடக்கூடாது என அதிமுக வலியுறுத்துகிறது," என்று பிரபாகரன் தெரிவித்தார்.
ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முடக்கவில்லை என்கிறார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக், "அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக முடக்கவில்லை. கோவையில் முடங்கியிருந்த அவிநாசி சாலை மேம்பால பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதே அதற்கு சான்று. ஆனால் 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது முந்தைய திமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கியிருந்தனர்.
வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் அதிமுக ஆட்சியில் முறையான திட்டமிடலின்றி செயல்படுத்தப்பட்டது. மக்களுக்கு பயனுள்ளதாக அதை எப்படி செயல்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்து மாநகராட்சி மன்றம் முடிவெடுக்கும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். அதன்படி தான் பணிகள் முறையாக நடந்து வருகின்றன` என்று ந.கார்த்திக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பிபிசி தமிழிடம் பேசுகையில், `இந்த ஆய்வு பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டன. இருபதுக்கும் மேற்பட்ட அம்சங்கள் தொடர்பாக நாங்கள் செய்து வருகிறோம். தற்போது வரை இரண்டு கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில விஷயங்களை ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஆய்வு முழுமையடைந்த பிறகே அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்` என்கிறார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












