கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் முடங்குகிறதா? என்ன நடக்கிறது?

வெள்ளலூர் பேருந்து நிலையம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் திமுக - அதிமுக இடையே விவாதப் பொருளாகியுள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

வெள்ளலூரில் பேருந்து நிலையம் எப்படி வந்தது?

இந்திய அரசு, பாரத் மாலா திட்டத்தின் கீழ் 'பஸ் போர்ட்' என்கிற ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை வகுத்திருந்தது. அதற்காக தமிழ்நாட்டில் கோவை, சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

வெள்ளலூர் பேருந்து நிலையம்
படக்குறிப்பு, வெள்ளலூர் பேருந்து நிலையம்

இதில் கோவை மாவட்டத்தில் வெள்ளலூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அப்போதைய அதிமுக அரசு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், வெள்ளலூரில் தமிழக அரசு தேர்வு செய்த இடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் தமிழக அரசே கோவை மாநகராட்சியுடன் இணைந்து மத்திய அரசின் நிதியில்லாமல் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுத்தது.

இதற்கான திட்டப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றால் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் முடங்கின. அதன் பின்னர் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் வெள்ளலூரில் பேருந்து நிலையத்துக்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின.

இபிஎஸ் சொல்லும் 'கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன்'புகார்

எடப்பாடி பழனிசாமி

இதற்கு தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையா எதிர்வினையாற்றியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்து, விளை நிலங்கள் உட்பட அனைத்து நிலங்களையும் வளைத்துப் போட்டு வருகிறது. தாங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கும் நிலத்தின் மதிப்பை உயர்த்த, அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்துகின்றனர்," என்று கூறியுள்ளார்.

கோவை நகருக்குள் இருந்த நான்கைந்து பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து வெள்ளலூரில் ஏறத்தாழ சுமார் 65 ஏக்கரில் பிரமாண்ட பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.168 கோடியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில் தன் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு சுமார் ரூ. 1,00 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்ற நிலையில், அத்திட்டம் கைவிடப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அவிநாசி - திருச்சி புறவழிச் சாலை அருகே ஸ்டாலின் குடும்ப நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும், அதற்காகவே அந்த இடத்திற்குப் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க இந்த 'விடியா அரசு' திட்டமிட்டிருப்பதாகவும் மக்கள் பேசிக் கொள்வதாக செய்திகள் வருகின்றன.

தன் குடும்ப நலனுக்காக மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் வகையில் கோவை புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் திட்டத்தை, `கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன்` அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால், மக்கள் நலன் காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்` என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
படக்குறிப்பு, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில் வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 24) கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். அப்போது அவர், "கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக இந்த மேடையின் வாயிலாக கூற வேண்டுமென்றால், திமுக 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. எனவே வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக முடிவுகள் கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் அடிப்படையிலும் மக்களின் தேவையின் அடிப்படையிலும் தான் செயல்படுத்தப்படும். அரசின் நலத் திட்டங்களை சிலர் அரசியலாக்கப்பார்க்கிறார்கள்," என்றார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஆரம்பம் முதலே எதிர்ப்பு - சமூக ஆர்வலர் கதிர்மதியோன்

இது தொடர்பாக சமூக ஆர்வலரும் கோவை கன்ச்யூமர் காஸ் அமைப்பின் செயலாளருமான கதிர்மதியோனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"இந்த பேருந்து நிலையத்திற்கு பாரத் மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தான் நிதி வழங்க வேண்டியிருந்தது. ஆனால் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை.

வெள்ளலூரை நிராகரிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை இரண்டு காரணங்களை முன்வைத்தது. முதலாவது வெள்ளலூர் பேருந்து நிலையத்தை ஒட்டியே அமைந்துள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு வரும். இரண்டாவது வெள்ளலூரிலிருந்து கோவை மாநகரின் மற்ற பகுதிகளை இணைப்பு வசதிகள் அமைப்பது கடினம்.

மேலும் ஒரு விஷயம் கோவையிலிருந்து 55 கிலோமீட்டருக்கு குறைவாக செல்லும் பேருந்துகள் காந்திபுரம் வந்து செல்ல வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தான் வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை முந்தைய ஆட்சியில் தொடங்கினார்கள். அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைவது கடினம். ஆனால் பல கோடி ரூபாய் செலவு செய்து விட்டார்கள். மேலும் செலவு செய்து பயன்படாமல் போய்விடக்கூடாது. இது வரை செலவு செய்த பணமும் வீணாகிவிடக்கூடாது.

மாற்று இடத்தில் பேருந்து நிலையம் அமைத்தாலும் வெள்ளலூரில் உள்ள இடத்தை சென்னையில் கோயம்பேட்டில் இருப்பதைப் போன்று ஒருங்கிணைந்த சந்தையாக மாற்றலாம். கோவையில் அது போன்ற ஒருங்கிணைந்த சந்தை வசதி இல்லை." என்றார்.

வெள்ளலூர் பேருந்து நிலைய மாற்றம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், `வெள்ளலூர் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம். அது தவிர இந்த விவகாரத்தில் தற்போதைக்கு வேறு எதுவும் சொல்ல இயலாது` என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: