IND VS PAK: இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ப்ரதீப் மேகசின்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் போது வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது தங்களுக்குள் விளையாடுவது அரிதாகிவிட்டது.
இரண்டு ஆண்டுகளில், அதுவும் ஐசிசி போட்டிகளில், மிகச் சிலவற்றிலேயே நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆகையால் இந்த ஆட்டத்த்ன் த்ரில் வேறு லெவலில் இருக்கும். இது கிரிக்கெட் போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுவது தான் இதற்குக் காரணம்.
இரு நாடுகளுக்கிடையேயான இந்தப் போட்டி, கிரிக்கெட் மைதானத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று. இது தவிர இந்தியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நட்புறவும் உள்ளது. அவர்களின் மொழியும் பேச்சுவழக்கும் ஒன்று போல உள்ளது. அவர்கள் ஒரே மாதிரியான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள், எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தானின் போட்டிகளில் இருப்பது போல ஒரு விறுவிறுப்பை வேறு எந்த இரு நாடுகளுக்குமிடையேயும் பார்க்க முடியாது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும், பல நினைவுகளைப் பொக்கிஷமாக வைத்திருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றதில் மூன்று முறை எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்புகள் 1997, 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கிடைத்தன.


2004 மற்றும் 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றபோது அங்கு மனமார்ந்த வரவேற்பு அளிக்கப்பட்டதை மறக்க முடியவில்லை. 2006-ம் ஆண்டு இந்திய அணிக்கும், போட்டியைக் காண அங்கு சென்ற இந்திய பார்வையாளர்களுக்கும் பொதுமக்கள் வரவேற்பு அளித்த விதம், அவர்கள் மீது அவர்கள் காட்டிய அன்பும், பாசமும் விவரிக்க முடியாதவை.
1997-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சென்றபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது அது மதம் சார்ந்த நாடு என்பதுதான். ஆனால், நாம் நம் நாட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். இவையெல்லாம் ஒரு மனிதனால் மறக்க முடியாத நினைவுகள்.
இருநாட்டு அணிகளும் அரசியலின் காரணமாக ஒருவருக்கொருவர் விளையாட முடியாது என்று நினைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட தொடர்பைப் பார்க்கும் போது இந்த பரஸ்பர பகை அரசியல், உண்மை அதிகமில்லாத மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று தோன்றுகிறது.

பட மூலாதாரம், ICC
கார்கில் யுத்தத்திற்கிடையில் இரு நாடுகளுக்கிடையில் கிரிக்கெட்
1999 கார்கில் போர் சமயத்தில் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இங்கிலாந்தில் நடந்த ஒரு போட்டி சுவாரஸ்மானது. அப்போது இரு நாடுகளுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்ததால், ஒருவேளை இந்தப் போட்டியை ரத்து செய்ய நேரிடலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் இங்கிலாந்தில் அதிக அளவில் வாழ்கின்றனர். இதனால், கலவரம் ஏற்படும் அச்சமும் நிலவியது. எங்களுடன் இருந்த ஓட்டுநர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள். இரு நாட்டு கொடியை காரில் வைத்துக்கொண்டு ஸ்டேடியத்திற்கு செல்வோம் என்று கூறி அவர்கள் தாங்களே இரு நாட்டுக் கொடிகளையும் கொண்டு வந்தார்கள். இரு நாட்டு எல்லையில் போர் மூண்டிருந்த சூழலில் இது நடந்தது.
எனக்கு இரண்டாவது சம்பவம் நினைவிருக்கிறது
1997-ம் ஆண்டு கராச்சி விமான நிலையத்தை அடைந்ததும், பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியே வந்தபோதும், பல வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியோ அல்லது பத்திரிகையாளர்களோ பாகிஸ்தானுக்குச் செல்வதால் மனதில் ஒருவித பீதியும் பயமும் இருந்தது
ஆனால் நாங்கள் ஹோட்டலுக்கு வெளியே செல்ல டாக்ஸியில் அமர்ந்தபோது, அவரது பஞ்சாபி டிரைவர் பஞ்சாபியில் பேச ஆரம்பித்தார். நானும் பஞ்சாபி தான், அதனால் நானும் பஞ்சாபியில் பேச ஆரம்பித்தேன். அதன் பிறகு அந்த நாட்களில் மிகவும் பிரபலமான "யே மேரா இந்தியா ஐ லவ் மை இந்தியா" பாடலைப் போட்டார். அது அலிஷா சினோயின் பாடல். இதற்குப் பிறகு எங்கள் இதயத்தில் இருந்த பயம் முற்றிலும் மறைந்தது. நாங்கள் எங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானிய வீரர்கள் குறித்த சுவாரஸ்ய செய்திகள்
பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான கதைகளும் எனக்கு நினைவுக்கு வருகின்றன, ஏனென்றால் மொழி ஒன்று போலத் தான் இருதரப்புக்கும். இதனால், வீரர்களுக்கிடையிலான தொடர்பும், பற்றுதலும் அற்புதமானது.
பாகிஸ்தானின் மேலாளர் சலீம் அல்தாஃபுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவர் வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார். 2005-ல் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தபோது அவர் மேலாளராக இருந்தபோது நான் சண்டிகரில் சந்தித்தேன். அவர் டென்னிஸ் விளையாட விரும்பினார். இதை ஹோட்டலில் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். நான் பார்க்கிறேன் என்று சொன்னேன். இதையடுத்து, லான் டென்னிஸ் சங்கத்துடன் பேசி, அங்கு டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.
அந்த நாட்களில் நானும் டென்னிஸ் விளையாடுவேன், அதனால் நாங்கள் நண்பர்கள் ஆனோம். அதன் பிறகு பெங்களூர், கொல்கத்தா சென்றோம். நான் அந்தத் தொடரை கவர் செய்தேன். பிறகு நானும் என் டென்னிஸ் ராக்கெட்டை என்னுடன் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். பெங்களூரில் டென்னிஸ் விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு டென்னிஸ் விளையாடத் தொடங்கினோம்.


கொல்கத்தாவிலும் அவர் இதேயே தான் செய்தார். கொல்கத்தாவில், போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியே வருவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அவர் காருடன் எனக்காக வெளியில் காத்திருந்தார். அந்த இடம் பெவிலியனுக்கு வெளியே இருந்தது, அதற்கு எதிரே மைதானத்திற்கு செல்லும் வழி இருந்தது. நாங்கள் ஹோட்டலை சீக்கிரம் அடைந்து டென்னிஸ் விளையாடச் செல்லலாம் என்பதற்காக இப்படிச் செய்து வந்தார்.
அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் போட்டிக்கு முன்பு என்னுடன் காலை உணவு உட்கொண்டிருந்த சலீம் அல்தாப், சற்று தாமதமாகத் தான் தன்னால் வரமுடியும் என்று தனது அணிக்குச் சொன்னார். இதற்கிடையில், பேருந்தில் குழுவினர் புறப்பட்டுவிட்டனர். அல்தாஃப் காரில் வருவதாகச் சொன்னதையடுத்து அவர்கள் அச்சம் கொண்டனர். பாதுகாப்பு குறித்த அச்சம் அது.
அகமதாபாத்தில் பாகிஸ்தானின் மேலாளர் போட்டியைப் பார்க்க விரும்புகிறார். பாதுகாப்புச் சிக்கல் உள்ளது. சரி என்ன செய்வது? நாங்கள் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்தோம், ஹோட்டல்காரர்கள் உங்களுடன் ஒரு போலீஸ்காரரை அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். அப்போது ஒரு போலீஸ்காரர் எங்களை ஸ்டேடியத்திற்கு அழைத்துச் சென்றார், வழியில் ஏதேனும் விசாரணை நடந்தால், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் என்று கூறியதால், நாங்கள் வழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
சேத்தன் ஷர்மாவின் பந்தில் மியான்தத் சிக்ஸர்
இது தவிர, சேத்தன் ஷர்மா பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து ஜாவேத் மியான்தத் போட்டியில் வென்ற மற்றொரு கதை உள்ளது. அது இரண்டு சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதலில், அந்தப் போட்டித் தொடர் முடிந்து சேத்தன் ஷர்மா இந்தியா திரும்பியபோது, டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் துன்புறுத்தப்பட்டார். ஏனென்றால் அந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டிய இந்தியா இவர் பந்தில் கொடுத்த ஒரு சிக்ஸரால் தோல்வியடைந்தது. இவர் வில்லனாகப் பார்க்கப்பட்டார்.
ஆனால் இன்று சேத்தன் ஷர்மாவிடம் பேசினால், அந்த சிக்ஸர் மூலம் தான் புகழ் பெற்றதாகக் கூறுகிறார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கும் போதெல்லாம், சிக்ஸர் கொடுத்த சேத்தன் ஷர்மா என்று தொலைக்காட்சிக்காரர்கள் கண்டிப்பாக அவரை அழைப்பார்கள். மொத்தத்தில் அந்த சிக்ஸரினால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அது பலன் தான் தந்தது. இப்போது அவர் தேர்வுக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
இப்போது இரு நாடுகளும் தங்களுக்குள் போட்டியாளர்கள், போட்டியில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த வீரரின் தகுதி மற்றும் அவரது அன்பு மட்டுமே நினைவில் உள்ளது.
2004ல் எனது குடும்பத்துடன் லாகூர் சென்ற போது பாகிஸ்தான் தொடர்பான இன்னொரு நினைவு. ஒரு நாள் மாலையில் சந்தைக்குப் போனோம். அப்போது இரண்டு மூன்று ஆங்கிலம் பேசும் பெண்கள் எங்களிடம் வந்தனர். என் மனைவி நெற்றியில் பொட்டு இருந்ததால் இந்தியாவில் இருந்து வந்ததை அவர்கள் அடையாளம் கண்டு இருக்கலாம்.
அப்போது பல இந்தியர்கள் போட்டியை காண பாகிஸ்தானுக்குச் சென்றனர். இது உங்கள் நாடு, நீங்கள் எந்தப் பிரச்சனையும் உணர வேண்டாம் என்று எங்களிடம் கூறினார். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று அன்புடன் கூறினார். முதல் நாளிலேயே இப்படி நடத்தப்பட்டது எங்களுக்கு மிகுந்த திருப்தியையும் ஆறுதலையும் அளித்தது.
இது தவிர 2006 சுற்றுப்பயணத்தின் போது மொகஞ்சதாரோ சென்றோம். அங்கே எங்களுக்கு முன்னால் நடந்து வந்த ஒரு சிறு பையனிடம் பேச ஆரம்பித்தோம். நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், "ஷாருக்கானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தை அவரிடம் கொடுப்பீர்களா?" என்று கேட்டான்.

பட மூலாதாரம், Getty Images
நான் தருவதாகச் சொன்னதும் அவன் வீட்டுக்கு ஒடினான். அவனுக்காக அரை மணி நேரம் காத்திருந்தேன். உருது மொழியில் எழுதிய கடிதத்துடன் திரும்பி வந்து அதை என்னிடம் கொடுத்தான்.
இதுதவிர, 2004ல், லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தபோது, இரு நாட்டு பார்வையாளர்களும் தனித்தனியாக அமரவைக்கப்படமாட்டார்கள் என்று ஒரு நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பார்வையாளர்கள் பெறும் விசாவின் கீழ், அவர்கள் தனித்தனியாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். இது பார்வையாளர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் செய்யப்படுகிறது.
ஆனால் தனித்தனியாக அமரவைக்கப்படாதது மாஸ்டர் ஸ்ட்ரோக் வகை, ஏனென்றால் அதன் பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருதரப்பினரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதை உணர்ந்தோம். அந்த லாகூர் டெஸ்ட் போட்டியில், நான் பார்வையாளர்களில் அமர்ந்திருந்த போது, நான் ஒரு இந்தியன் என்று மக்கள் அறிந்ததும், அவர்கள் என் ஆட்டோகிராப் கூட வாங்கினார்கள் என்றால் நம்புகிறீர்களா? அவர்கள் ஒரு இந்தியரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்தனர். இவை அனைத்தும் அற்புதமான காட்சிகள். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின் போது சென்னையில் அந்த அணி வென்றபோது, மைதானத்தில் பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செய்த விதம், அந்தக் காட்சியும் மறக்கமுடியாதது. இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை. ஒன்று நாம் இருவரும் பரஸ்பரம் அடுத்த நாட்டுக்குச் செல்வதில்லை. இரண்டாவதாக தூரம் அதிகரித்து வருகிறது.
லாகூரில் மேட்ச் பார்க்கும்போது பாகிஸ்தானியர் சொன்னது போல் இந்தியர்களுக்கு தலையில் கொம்புகள் இருப்பதாக பாகிஸ்தானியர்கள் நினைக்கிறார்கள். லாகூர் போட்டியின் போது நான் சந்தித்த ஒருவர், "நீங்களும் எங்களைப் போன்றவர்கள். நான் இந்தியர்களைப் பற்றிக் கேள்விப்பட்டது அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்றும் தலையில் கொம்பு உள்ளது என்றும் தான். ஆனால் இப்போது உங்களுடன் பழகிய பிறகே தெரிகிறது, நீங்களும் எங்களைப் போலத் தான் என்று" என்று கூறினார்.
நாம் இருதரப்பும் ஒரே போலத் தான். ஆனால் OTT தளத்தில் நாம் நமக்குள் எதிரிகள் என்றும் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கட்டமைக்கப்படுகிறது. இந்த விஷயங்கள் மாறினால், அது நல்லது - விளையாட்டுக்கு மட்டுமன்று நாட்டுக்கும் கூட.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













