ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு?

ஃபிஃபாவின் சஸ்பெண்ட் நடவடிக்கையால் இந்திய பெண்கள் கால்பந்து வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP

படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • எழுதியவர், ஜானவி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

"உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வருத்தப்படுத்துகிறது."

அகில இந்திய கால்பந்தாட்ட அமைப்பு மீதான ஃபிபாவின் தடை நடவடிக்கை குறித்து கேட்டபோது, மும்பையில் 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனையான சாய் இப்படித்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

U-17 எனப்படும் பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலக கோப்பையை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றதிலிருந்து சாயைப் போன்ற இளம் கால்பந்து வீராங்கனைகளில் பலர் மகிழ்ச்சியாகவும் ஆவலுடனும் காத்திருந்தனர்.

ஆனால் உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா தற்போது இந்திய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) இடைநீக்கம் செய்துள்ளது. இது இந்திய வீராங்கனைகளின் உற்சாகத்தை குலைத்ததுடன் 2022 அக்டோபரில் நடைபெறவிருக்கும் போட்டியில் அணியின் பங்கேற்பையும் கேள்விக்குரியதாக்கி விட்டது.

'மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற செல்வாக்கு' காரணமாக ஃபிபா இந்தியாவை இடைநீக்கம் செய்துள்ளது, ஆனால் இந்தத் தடையின் விளைவுகள் வீரர்களுக்கு கடுமையானதாக இருக்கலாம்," என்கிறார் சாய்.

"இது ஒரு உலக கோப்பை என்பதால், விளையாட்டுக்கு அதிக ஊக்கம் கிடைத்திருக்கும். அனைவரின் பார்வையும் இந்தியா மற்றும் இந்திய வீரர்கள் மீது இருந்திருக்கும். இந்த துறையில் விளையாட விரும்பும் மற்ற பெண்களுக்கும் அது ஊக்கம் கொடுத்திருக்கும், பலர் கால்பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள், தாங்களும் உலக கோப்பையில் விளையாடலாம் என்ற எண்ணத்தை விளையாட்டை பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கும். ஆனால் இது எதுவும் இப்போது நடக்கப் போவதில்லை," என்கிறார் சாய்.

இந்த தடங்கல்களுக்கு மத்தியிலும் சாயைப் போன்ற வீராங்கனைகள், தொடர்ந்து கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கை, கால்பந்து அணி மீதான நன்மதிப்பை குலைத்து விடும் என்ற கவலையை இந்த வீராங்கனைகள் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த தர்மசங்கடம் ஏன் வந்தது? இந்தியா இன்னும் இந்தப் போட்டியை நடத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?

FIFA ஏன் AIFFஐ இடைநீக்கம் செய்தது?

FIFA சட்டங்களின்படி, சுயாட்சிக் கொள்கை அவசியம். அதாவது, கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள அணி மீது அரசியல் அல்லது சட்டரீதியான தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட முதல் நாடு இந்தியா அல்ல.

பெனின், குவைத், நைஜீரியா, இராக் போன்ற நாடுகள் மீதும் கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இதே விதியின் கீழ் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டது. ஜிம்பாப்வே மற்றும் கென்யா மீதான தடை அமலில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் அந்தத் தடை நீக்கப்பட்டது.

இந்தியாவில், அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டணிப்பில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கோலோச்சி வருபவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான பிரஃபுல் படேல். இவர்தான் ஃபிபா கவுன்சிலில் இந்திய பிரதிநிதி ஆக இருந்தவர்.

நான்கு ஆண்டுகள் கொண்ட AIFF தலைவர் பதவிக்காலத்தை தொடர்ச்சியாக மூன்று முறை வகித்தவர் பிரஃபுல் படேல். ஆனால், இந்திய தேசிய விளையாட்டு கோட்பாட்டின்படி மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறவில்லை.

இந்திய கால்பந்து அணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிரஃபுல் படேல்

பிரஃபுல் படேலின் பதவிக்காலம் 2020இல் முடிவடைந்தது. ஆனால், அதன் பிறகு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.

இதற்கிடையில், AIFFஇல் அங்கமாக உள்ள டெல்லி கால்பந்து சங்கம், பிரஃபுல் படேல் தலைமையிலான குழு சட்டவிரோதமாக ஏஐஎஃப்எஃப் நிர்வாகத்தில் தொடர்வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்திய உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு மே மாதம் AIFFஐ கலைத்து, கால்பந்து விளையாட்டை நிர்வகிக்க மூன்று பேர் கொண்ட நிர்வாகிகள் குழுவை நியமித்தது.இந்த குழு AIFF அரசியலமைப்பை திருத்துவதற்கும் தேர்தல்களை நடத்துவதற்கும் பணிக்கப்பட்டது.

இதன்படி, FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC), தமது பொதுச் செயலாளரான வின்ட்சர் ஜான் தலைமையிலான குழுவை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்திய கால்பந்தாட்டத்தின் பல்வேறு பங்குதாரர்களுடன் அக்குழு கலந்துரையாடியது.

இறுதியில், இந்திய கூட்டமைப்பு மீது ஃபிஃபா தடை விதித்தது.

"AIFF நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதற்கு உரிய நிர்வாகிகள் குழு அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தத் தடை தளர்த்தப்படும்" என்று FIFA திங்கள்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்தது.

இடைநீக்கம் இந்திய கால்பந்தை எவ்வாறு பாதிக்கும்?

இந்தியாவில் 23.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கால்பந்து விளையாட்டை பார்க்கிறார்கள், மீடியா கன்சல்டிங் நிறுவனமான ஓர்மேக்ஸ் கணக்கெடுப்பின்படி, இந்த விளையாட்டில் இந்தியர்கள் மீதான காதல் சமீபத்திய காலங்களில் அதிகரித்து வருகிறது.

ஆனால் ஃபிஃபாவின் இடைநீக்கம் இந்த விஷயத்தில் ஒரு பின்னடைவாக இருக்கலாம். காரணம், இந்த தடை நடவடிக்கையால் இந்தியா எந்த சர்வதேச போட்டிகளையும் நடத்த முடியாது. அந்த போட்டிகளிலும் இந்திய அணியால் பங்கேற்க முடியாது, இந்திய கால்பந்து கிளப்புகள் எந்த வெளிநாட்டு வீரரையும் ஒப்பந்தம் செய்ய முடியாது. அதே சமயம், உள்நாட்டுப் போட்டிகளுக்கு இடைநீக்கம் பொருந்தாது.

அந்த வகையில் இந்தியாவில் மகளிர் கால்பந்து அணி மீது இந்த நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2020ஆம் ஆண்டு U-17 மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தவிருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்தப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்தப் போட்டியை இந்த ஆண்டு அக்டோபர் 11 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது.

போட்டியை நடத்தும் நாடு என்ற காரணத்தால் இந்தியாவுக்கு இந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது இடைநீக்க நடவடிக்கை காரணமாக, இளம் இந்திய மகளிருக்கு கால்பந்தாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.

'நம்பிக்கை இன்னும் இருக்கிறது'

இந்திய கால்பந்து அணி
படக்குறிப்பு, மும்பையில் உள்ள கூப்பரேஜ் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் விளையாடும் கால்பந்து வீராங்கனைகள்

பெங்களூரைச் சேர்ந்த கால்பந்து ரசிகையான அமிஷா கான், எனக்கு நம்பிக்கை இன்னும் இருக்கிறது," என்கிறார்.

"இந்தியாவில் மகளிர் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் இல்லை, ஆனால் சமீப காலங்களில் விஷயங்கள் மாறிவிட்டன. பாலா தேவி போன்ற வீராங்கனைகளைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக இருந்தோம். இந்தியாவில் நிறைய பேர் கால்பந்தை விரும்புகிறார்கள். எனவே FIFA இதை பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன், இந்தத் தடை தொடராது என்று நம்புகிறேன்,," என்கிறார் அமிஷா.

மும்பைக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் மும்ப்ராவில் இளம் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் ஒரு அமைப்பான 'பார்ச்சம்'-ன் இணை நிறுவனர் சபா கான் - தங்கள் வீரர்கள் எவ்வளவு மனமுடைந்து போயிருக்கிறார்கள் என்பதை விளக்குகிறார்.

"சமீபத்தில் அவர்கள் போட்டிக்கான முதல் டிக்கெட்டுகளை எங்களுக்கு வழங்கினர். இந்த போட்டி இந்தியாவில் உள்ள பெண்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இது ஒரு உலக கோப்பை விளையாட்டு, கால்பந்தில் பெண்களுக்கு அளிக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் முக்கியம்," என்கிறார் அவர்.

கால்பந்தாட்ட அணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாய்ச்சுங் பூட்டியா

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்து நட்சத்திரமுமான பாய்ச்சுங் பூட்டியா சமீபத்தில் ஊடகங்களிடம் பேசும்போது "இது மிகவும் துரதிருஷ்டவசமானது. , இந்திய கால்பந்து கூட்டமைப்பைத் தடை செய்வதற்கான ஃபிஃபாவின் முடிவு கடுமையானது," என்று கூறுகிறார்.

"அதே நேரத்தில் நமது அமைப்பை சரிசெய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக நான் உணர்கிறேன். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) அதன் 85 ஆண்டுகால வரலாற்றில் FIFAவால் தடைசெய்யப்படுவது இதுவே முதல் முறை. அந்த அமைப்புக்கு உரிய தேர்தல் நடத்தப்பட்டவுடன் இடைநீக்கம் விரைவில் நீக்கப்படும் என நம்புகிறேன்," என்று பாய்ச்சுங் தெரிவித்தார்.

இதற்கிடையே, FIFA அமைப்பு, "இந்தியாவில் உள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் நாங்கள் ஆக்கபூர்வ தொடர்பில் உள்ளோம். இந்த விஷயத்தில் சாதகமான முடிவை அடைய முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறியுள்ளது.

காணொளிக் குறிப்பு, கால்பந்து கிராமம்: எங்க ஊருக்கு இது தேசிய விளையாட்டு மாதிரி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: