எட்டு வழிச்சாலை திட்டத்தை திமுக எப்போதும் எதிர்க்கவில்லையா? விமர்சனங்கள் வலுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சர்ச்சைக்குரிய சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எட்டு வழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் திட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டாலும், அந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அறிவிப்பு வந்தால், அதற்கு எதிராக குரல்கள் ஒலிக்கத் தயாராக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் சென்னை நகரத்திற்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க சென்னை புறநகர் பரந்தூர் பகுதியில் ஆய்வு நடத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, பரந்தூரில் உள்ள விவசாயிகளின் கருத்துகளைப் பெற்ற பிறகுதான் திட்டம் செயல்படுத்துவது குறித்துப் பேசப்படும் என்று தெரிவித்தார். அதேநேரம், சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அதே திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலு, எட்டு வழிச்சாலை திட்டத்தில் வரம்புகள் மீறி விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் திமுக எதிர்ப்பு தெரிவித்தது என்றும் சாலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு திமுக என்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பேசினார். அதோடு, எட்டுவழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தைப் பற்றிய விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.


எட்டு வழிச்சாலை திட்டம்
முந்தைய அதிமுக ஆட்சியின்போது 2018-இல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ், சுமார் ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் என்றும் 277 கிமீ சாலை அமைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆறு மாவட்டங்களில் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், மேல்முறையீடு செய்தபோது, தமிழக அரசு சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த ஆதரவான தீர்ப்பு வந்தது.
பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டபோது, விவசாயிகள் ஊடகங்களில் கதறி அழுது தங்களது விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதில் சிலர் கைதாகினர். அப்போது, அதிமுக அரசின் செயல்பாடுகளை திமுக கண்டித்துப் பேசியது. தற்போது, அந்தத் திட்டத்தை ஆறுவழிச்சாலை திட்டமாகச் செயல்படுத்த முன்வந்துள்ளதுதான் சர்ச்சையாகியுள்ளது.


திமுகவின் தேர்தல் அறிக்கை என்னசொல்கிறது?
திமுகவின் 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி பட்டியலில், விவசாய நிலங்களை விவசாயிகளின் ஒப்புதலின்றி கையகப்படுத்தி வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குறுதி எண் 43இல், ''விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை- சேலம் விரைவுப் பாதை திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும், முழுமையான முறையில் விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.

சென்னை -சேலம் விரைவுப் பாதைக்கு எதிரான வழக்கு
எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசத்திடம் பேசினோம். எட்டுவழிச்சாலை திட்டத்தில் பல நீர்நிலைகள், வயல்கள் மற்றும் பல இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் சாலைகள் அமைக்கப்படும் என்பதால் வழக்கு தொடர்ந்ததாகக் கூறுகிறார்.
''2020இல் நான் சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் பகுதிகளின் தகவல்களைக் கொண்டு வழக்கு போட்டேன். மீண்டும் நாம் உருவாக்க முடியாத இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த சாலை திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். நீதிபதி சிவஞானம் அளித்த தீர்ப்பில், சுற்றுச்சூழல் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்ட பின்னர்தான் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். தற்போது அந்தத் திட்டம் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதிக்காத வகையில்தான் சாலைகள் அமைக்கப்படும் என்றால் நான் அந்த திட்டத்தை எதிர்க்க வாய்ப்பில்லை,'' என்கிறார்.
மேலும், ''வளர்ச்சி திட்டங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தேவைதான். அவற்றைக் கொண்டு வரும்போது, பொதுமக்களின் ஒப்புதலுடன், அவர்களை விரட்டியடிக்காமல், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் சாலைகள் அமைந்தால் நன்மைதான். விவசாயிகளின் நிலங்கள் அவர்களிடம் இருந்து அராஜகமான முறையில் கையகப்படுத்தப்படுவதற்கு என்றும் எதிர்ப்பு உள்ளது,'' என்கிறார்.

விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
சேலத்தைச் சேர்ந்த விவசாயி மாரியம்மாள் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தற்போதும் அந்த எதிர்ப்பை மனதில் உறுதியாக வைத்திருக்கிறார். ''இங்குள்ள விவசாய பூமி எங்கள் குடும்ப சொத்து. இந்த நிலத்தை நாங்கள் இழக்க முடியாது. பலமுறை நஷ்டம் ஏற்பட்டபோதும் கூட இந்த நிலத்தில் தொடர்ந்து நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எட்டுவழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாறினாலும் எங்கள் நிலத்தை நாங்கள் தருவதற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். இந்தத் திட்டம் எங்களுடைய நிலம் வழியாக வருவதை ஏற்க மாட்டோம். ஒருவேளை மாற்றுப் பாதைகள் அமைத்து, விவசாய நிலங்கள் பாதிக்கப்படவில்லை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். எங்கள் சொந்த மண்ணை நாங்கள் இழக்கத் தயாராக இல்லை,'' என்கிறார் விவசாயி மாரியம்மாள்.
அதேநேரம், திமுகவின் தோழமை கட்சியான சிபிஎம் கட்சியில் சென்னை - சேலம் விரைவுச்சாலைக்கு எதிர்ப்பு இருப்பதை அறியமுடிகிறது. எட்டு வழிச்சாலை திட்டம் ஆறு வழிச்சாலையாக மாறினாலும் அங்குள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்கிறார் திமுகவின் தோழமை கட்சியான சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

''சென்னை - சேலம் விரைவுச்சாலை திட்டத்தை திமுக கொண்டு வருமா என்பது சந்தேகம்தான். முதலில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள திமுக, இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வாய்ப்பில்லை. இதுவரை அதிகாரபூர்வமாக அந்தத் திட்டம் பற்றிய எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை என்பதால், அது ஓர் ஊடக விவாதம் என்ற நிலையில்தான் உள்ளது,'' என்கிறார் பாலகிருஷ்ணன். மேலும், அந்த சாலை திட்டம் ஒன்றிய அரசின் திட்டம்தான் என்றும் அதை உடனடியாகச் செயல்படுத்தும் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
''எட்டுவழிச்சாலை திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து ஆறுவழிச்சாலையாக மாற்றினால்கூட, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருக்கும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது என்பதால், அதை முன்னெடுக்காது என்பது எங்களின் ஊகம். ஆனால் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், விவசாயிகளின் எதிர்ப்பு பலமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது,'' என்கிறார் அவர்.
ஆனால், முதலில் சென்னை - சேலம் விரைவுச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது அதே திட்டத்தைக் கொண்டு வருகிறது என்றும் முன்னர் எதிர்ப்பு தெரிவித்ததாக திமுக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ''எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













