பெண்கள், பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பாஜக தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

பட மூலாதாரம், Getty Images
(இன்றைய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (21/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
பிராமணர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தததாக கூறி மத்திய பிரதேச மாநில பாஜகவை சேர்ந்த நிர்வாகி பிரீதம் லோதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "மத்திய பிரதேசத்திலுள்ள சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரீதம் லோதி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இவர் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான உமா பாரதியின் உறவினர்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரீதம் லோதி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், 'கோயில்களில் பூஜை செய்யும் பிராமணர்கள் மக்களை பைத்தியமாகவும் முட்டாள்களாகவும் மாற்றி வருகின்றனர். மக்களிடம் இருந்து பணத்தையும் உணவு தானியங்களையும் கொள்ளையடிக்கின்றனர்' என்றார். மேலும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிராமண அமைப்புகள் பிரீதம் லோதிக்கு கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. அவரைக் கட்சியிலிருந்து பாஜக தலைமை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பிரீதம் லோதி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் எழுதினார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த பாஜக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 48% உள்ளனர். அதில் லோதி சமூகத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். கிராமப் பகுதிகளில் அவர்களுடைய வாக்கு வங்கி பலமாக உள்ள நிலையில், பாஜகவில் இருந்து லோதி நீக்கப்பட்டது, அந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும் எனக் கருதப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம்: எய்ம்ஸ் மருத்துவர் குழு அறிக்கை என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில் இறுதி அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் ஏழு பேர் அடங்கிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை தீவிரமாகப் பரிசீலித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களில் ஒன்று, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்கப் பாதிப்பு இருந்துள்ளது. 1998ஆம் முதல் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அவருடைய குடும்ப மருத்துவரான சிவக்குமார் செப்டம்பர் 19, 2016 அன்று முதலமைச்சரின் உடல்நிலையைப் பரிசோதித்துள்ளார்.
மேலும், "செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் அவருக்கு மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48 சதவீதமும் நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 88 என்ற அளவிலும் ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாகவும் இருந்துள்ளது.
முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
டிசம்பர் 4ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்து எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அவர் 24 மணிநேரமும் எக்மோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இருந்தபோதிலும், டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு அவருடைய மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்தது.
முடிவில், ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது," என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 31 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமையன்று இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெய்த கடுமையான மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 22 பேர் இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் உத்தராகண்ட், ஒடிஷாவில் தலா 4 பேரும் ஜார்கண்டில் ஒருவரும் அடங்குவர்.
இதற்கிடையில், இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிகழும் சம்பவங்கள் பற்றி வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். காயடமைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிரேன்," என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














