டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா?

மாத்திரை

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை".

ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ - 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும் நிறுவனம் வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் வருமான வரித்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையின் அடிப்படையில் வெளியானவையாகும். இந்த வழக்கு விசாரணையின்போதும் வருமான வரித்துறையின் இந்த அறிக்கையின் விவரங்கள் மேற்கோள் காட்டப்பட்டன.

'மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் டோலோ 650 மாத்திரைகளை தயாரித்துவருகிறது. பிபிசியிடம் பேசிய அந்நிறுவனத்தின் துணை செயல் தலைவர் (வணிகம்) ஜெய்ராஜ் கோவிந்த் ராஜூ, இந்த புகார்களை கடுமையாக மறுத்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சாதனைகளை முறியடிக்கும் வகையில் அதிக அளவில் விற்பனையானதன் மூலம் இம்மாத்திரை வெளிச்சத்திற்கு வந்தது.

மாத்திரை

பட மூலாதாரம், GETTY IMAGES/TANJA IVANOVA

வழக்கு என்ன?

இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு டோலோ - 650 மாத்திரை குறித்தது அல்ல.

இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில், மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான ஒரே மாதிரியான சட்டப்பூர்வ விதிமுறைகளை வகுக்க வழிவகை செய்யுமாறு கோரப்பட்டது. இது தொடர்பாக அரசாங்கம் சட்டம் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இது தொடர்பாக இந்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை சந்தைப்படுத்துவதற்கு நிறைய செலவு செய்கின்றன, இதன்மூலம், மருத்துவர்கள் இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சஞ்சய் பரிக் கூறுகையில், "தங்கள் மருந்துகளை பரிந்துரைப்பதற்காக நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பல இலவச பரிசு பொருட்களை வழங்குகின்றன. ஆனால், அந்நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கு இலவச பரிசுப்பொருட்கள் வழங்குவது அவர்களுக்கு லஞ்சம் வழங்குவது போன்றதாகும். எனவே, இதுதொடர்பாக இரு தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால்தான் மருந்துகளின் விலைகள், சந்தைப்படுத்துதலை முறைப்படுத்துவதில் பொதுவான விதிமுறைகளை வகுக்க வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை 2008-2009 முதல் வலியுறுத்தி வருகிறோம்" என அவர் தெரிவித்தார்.

மாத்திரை

பட மூலாதாரம், GETTY IMAGES/TRILOKS

டோலோ 650 பெயர் குறிப்பிடப்பட்டது ஏன்?

பொதுவான விதிகளை வகுப்பதற்கான தேவை குறித்து பேசிய மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார்.

அப்போது டோலோ 650 பெயரை வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

ஊடக செய்திகளை மேற்கோள்காட்டி வாதிட்ட அவர், மருத்துவர்களுக்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களை வழங்கியதாக டோலோ 650 தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஜூலை 13 தேதியிட்ட வருமான வரித்துறையின் செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

அந்த செய்தி அறிக்கையில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்படாமல், பெங்களூருவில் உள்ள பெரிய மருந்து நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்களுக்கு 1,000 கோடி ரூபாய் வரையில் இலவச பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனை நடத்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை மைக்ரோ லேப்ஸ் என பிடிஐ செய்தி முகமை குறிப்பிட்டிருந்தது.

மாத்திரை

பட மூலாதாரம், GETTY IMAGES/CLOVERA

டோலோ 650 தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்கிறது?

இந்த விவகாரத்தில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தரப்பை அறிய பிபிசி முயன்றது.

அந்நிறுவனத்தின் துணை செயல் தலைவர் (வணிகம் மற்றும் தொடர்பு) கோவிந்த் ராஜூ கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் டோலோ 650 மாத்திரை குறிப்பிடப்படவில்லை. இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.

கொரோனா தொற்று காலகட்டத்தில் டோலோ 650 மாத்திரை விற்பனை மூலம் 350 கோடி ரூபாய் எங்களுக்கு வருமானம் வந்தது. ஆனால், அதனை சந்தைப்படுத்துவதில் ஓராண்டுக்கு 1,000 கோடி ரூபாய் செலவு செய்தோம் என கூறுவது அபத்தமாக இருக்கிறது. 350 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் ஓராண்டில் 1,000 கோடி ரூபாய் எப்படி செலவழித்திருக்க முடியும் என நீங்களே சிந்தித்துப் பாருங்கள்" என தெரிவித்தார்.

மேலும், "ஒழுங்குமுறை விதிகளின்படியே இந்தியாவில் டோலோ 650 மருந்தின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின் கீழ் நாங்கள் வரவில்லை என்பது தவறான தகவல். அரசு பரிந்துரைத்ததற்கும் அதிகமாக விலையை நாங்கள் உயர்த்தவில்லை. பல ஆண்டுகளாக ஒரு மாத்திரையின் விலை ரூ.2 என்ற அளவிலேயே இருக்கிறது. இதே விலையில்தான் இம்மாத்திரை இப்போதும் விற்கப்படுகிறது," என தெரிவித்தார்,.

மேலும் அவர் கூறுகையில். "கொரோனா காலகட்டத்தின்போது மருந்து உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் கடும் விலையேற்றத்தை சந்தித்தன. அந்த சமயத்திலும் இம்மாத்திரை பொதுமக்களுக்கு கிடைப்பதையும் பற்றாக்குறையின்றி விற்கப்படுவதையும் விலையேறாமல் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்தோம். இந்த மாத்திரை பிரபலமானது என்பதாலேயே விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சைக்கென ஐ.சி.எம்.ஆர். பட்டியலிட்ட மாத்திரைகளின் விலைகள் அச்சமயத்தில் உயர்ந்தன என்பது உண்மை. அனைத்து மருந்துகளின் விலையும் உயர்ந்தன.

தங்கள் நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை ஒப்புக்கொண்ட கோவிந்த் ராஜூ, பல ஆண்டுகளுக்கான தங்கள் நிறுவன ஆவணங்களை வருமான வரித்துறை சோதனையிட்டதாக தெரிவித்தார். சந்தைப் படுத்துதலில் 1,000 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படுவது ஓராண்டுக்கானது அல்ல, பல ஆண்டுகளுக்கான மொத்த செலவு என அவர் தெரிவித்தார்.

ஆனால், அந்த கணக்கு, எத்தனை ஆண்டுகளுக்கானது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

மாத்திரை

பட மூலாதாரம், MODERNA

மருந்துகளுக்கான சந்தைப்படுத்துதல் விதிமுறைகள் என்ன?

இந்தியாவில் மருந்துகளுக்கான சந்தைப்படுத்துதலுக்கு மருந்து நிறுவனங்கள் தாமாக விதிமுறைகளை (Voluntary Code) வகுக்கலாம்.

கடந்த 2014 டிசம்பர் 12ல் அடுத்த 6 மாதங்களுக்கு மருந்து நிறுவனங்கள் தாமாக விதிகளை வகுக்க இந்திய அரசு அறிவுறுத்தியது, பின்னர் இந்த விதிகளை மறுபரிசீலனை செய்து சட்ட வடிவத்தை அளிக்குமாறும் இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனை சட்டபூர்வமாக்க இந்திய அரசு வரைவு ஒன்றை தயாரித்துள்ளதாக கூறியுள்ள மனுதாரர் வழக்குரைஞர், அதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டதாகவும் ஆனால் அவை சட்டமாக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இம்மாதம் மக்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அரசு, தாமாக விதிகளை வகுப்பது தொடரும் என தெரிவித்தது.,

இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் ஒரு புதிய பிணைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆனால், அதற்கான பரிந்துரை அல்லது முன்மொழிவு எந்தவொரு சிவில் சமூகம் அல்லது காப்புரிமைக் குழுவிலிருந்து அரசாங்கத்தை எட்டவில்லை.

இந்திய அரசு மேலும் தன் பதிலில் மருந்துகளுக்கான சந்தைப்படுத்துதல் தொடர்பாக மேலும் இரண்டு சட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், பிணைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் இந்திய அரசு 10 நாட்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, உயிராபத்தை விளைவிக்கும் முரட்டு எறும்புகள் - திண்டுக்கலில் பெருகியது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :