பிகாரில் உண்மையில் போலி போலீஸ் ஸ்டேஷன் இயங்கியதா?

பட மூலாதாரம், Vishnu Narayan/BBC
- எழுதியவர், விஷ்ணு நாராயண்
- பதவி, பிபிசி இந்திக்காக
பிகாரில் போலி காவலர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், அது தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள், பிரச்னையை தவறாக வழிநடத்தும் வகையில் திரிக்கப்பட்டிருந்தன. உண்மையில் இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
அரசால் நடத்தப்படும் திட்டங்களில் முறைகேடுகள் நடந்ததாக கடந்த காலங்களில் செய்திகள் வந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் பெயரில் வீடுகள் ஒதுக்கீடு, பணம் எடுப்பது போன்ற பிரச்னை அல்லது அரசு திட்டப் பலன்களின் நேரடி பரிமாற்றம் போன்ற மத்திய திட்டங்களில் முறைகேடு நடந்தது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது பிகார் மாநிலத்தின் பாங்கா மாவட்டத்தில் மத்திய, மாநில அரசின் திட்ட ஒதுக்கீடு என்ற பெயரில் போலி போலீஸ்காரர்களை வைத்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் இதற்காக நகரின் மையப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக ஓர் அலுவலகம் இயங்கி வந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படியொரு விஷயம் எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருந்திருக்கிறது?

பட மூலாதாரம், Vishnu Narayan/BBC
முழு விஷயம் என்ன?
மாநிலத்தின் பங்கா மாவட்டத்தில் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி உள்ளூர் மக்கள் ஏமாற்றப்படுவதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
பங்கா காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட பகுதியில் 'ஸ்கார்ட் போலீஸ் பாட்னா' என்ற பெயரில் ஒரு கும்பல் போலி காவல் நிலையத்தை நடத்தி வந்தது.
முழு விஷயத்தையும் புரிந்து கொள்ள, பங்கா காவல் நிலைய ஆய்வாளர் ஷம்பு யாதவிடம் பேசினோம்.
இதுகுறித்து ஷம்பு யாதவ் கூறும்போது, "புதன்கிழமை (ஆகஸ்ட் 17) காலையில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார். ஆனால் உடையில் ஏதோ கோளாறு இருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தேன். அந்த பெண் உடனே ஓடத் தொடங்கினார். பிறகு அவரைப் பிடித்தோம். விசாரணையில், ஒரு ஆண் வாட்ச்மேனுடன் அந்த பெண் அனுராக் விருந்தினர் மாளிகையின் அறைகளில் இருந்தது தெரிய வந்தது.
"அனுராக் விருந்தினர் மாளிகையின் இரண்டு அறைகளில் இந்த குழுவினர் போலி அலுவலகம் நடத்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த அலுவலகம் எட்டு மாதங்களாக இங்கு இயங்கி வந்தது. அலுவலகத்தில் இருந்தவர்கள் உள்ளூர் மக்களிடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம், குடிநீர் குழாய் திட்டம், பொது விநியோக திட்டம் போன்ற திட்டங்களின் பலன்களை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி பணம் வாங்கியுள்ளதாக தெரிய வந்தது."
"அந்த அலுவலகத்திற்கு வந்து போகும் உள்ளூர் மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் போலியான முறையில் இரண்டு வாட்ச்மேன்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். பிகார் மாநில உணவு வழங்கல் துறை மற்றும் பல அரசு கோப்புகள் பல ஜோடிக்கப்பட்ட பதிவேடுகள் அந்த அலுவலகத்தில் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்," என்கிறார் ஆய்வாளர் ஷம்பு யாதவ்.
மேலும் அவர், "இந்த வழக்கில் இதுவரை 5 பேரை கைது செய்துள்ளோம். இதுவரை நடந்த விசாரணையில், மாவட்டத்தின் புல்லிடுமர் கிராமம் மற்றும் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் போலா யாதவ் என்பவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டார் என தெரிய வந்துள்ளது. அந்த நபர் போலி அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு தினக்கூலியாக ரூ.500 கொடுத்து வந்துள்ளார்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Vishnu Narayan/BBC
ஏமாற்றுதல் மற்றும் பணம் பறித்தல்
அதேநேரம், காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்த கும்பல் மக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்களா என்று கேட்டபோது, "ஆம், நாங்கள் சம்பவ இடத்தில் கைது செய்த இரண்டு வாட்ச்மேன்கள், அப்படித்தான் செய்ததாகச் சொல்கிறார்கள். அங்கிருந்தவர்களிடம் இருந்து ரூ. 90 ஆயிரம் மற்றும் ரூ. 55 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என்றார்.
"அத்துடன் அந்த நபர்களில் ஒருவர்வசம் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது. மாவட்ட கட்டளைத் தளபதி அலுவலகம் என்ற பெயரில் போலீஸ் வேலைக்கு சேர விரும்பும் உள்ளூர் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மக்களை இலகுவாக ஏமாற்றக்கூடிய போலியான அலுவலக சூழலை இவர்கள் இங்கு உருவாக்கியுள்ளனர். மேலதிக விசாரணையில் மற்ற விஷயங்கள் தெரியவரும்" என்றார் அந்த அதிகாரி.
இதையடுத்து இந்த விஷயங்களை மேலும் விரிவாக புரிந்து கொள்ள, பாங்கா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவாவிடம் பேசினோம்.
இவர்தான் போலி பெண் போலீஸ்காரர் சாலையைக் கடப்பதை முதலில் பார்த்தவர்.
"அந்தப் பெண் போலீஸைப் பார்த்தபோது, நான் கொஞ்சம் விசித்திரமாக உணர்ந்தேன், ஏனென்றால் அவர் கைத்துப்பாக்கி வைத்திருந்தார். வழக்கமாக பெண் காவலர்களிடம் அத்தகைய சூழலில் கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுவது கிடையாது. மேலம், அது ஒரு நாட்டுத் துப்பாக்கி. அலுவலகத்துக்கு வெளியே பணியமர்த்தப்பட்ட அந்த பெண்ணுக்கு தினக்கூலியாக ரூ. 500 கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில், இந்த கும்பலின் தலைவன் போலா யாதவ் என்பதும், காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தப் பெண்ணிடம் கூட 55 ஆயிரம் பறித்திருப்பதும் தெரிய வந்தது," என்கிறார் தினேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா.

பட மூலாதாரம், Vishnu Narayan/BBC
உள்ளூர் பத்திரிகையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தைனிக் பாஸ்கர் நாளிதழின் உள்ளூர் நிருபர் பிரின்ஸ் ராஜிடமும் நாம் பேசினோம்.
"நகரில் உள்ள அனுராக் விருந்தினர் மாளிகையின் அறைகளில் இருந்து போலி அலுவலகம் இயங்கியதாக அறிந்தோம். இரண்டு பேர் செல்வது வழக்கம். அங்கு பணியாற்றிய இருவர் தினமும் கிராமங்களுக்கு அதிகாரி மற்றும் போலீஸார் போல சென்றனர். மத்திய, மாநில திட்டங்களின் பலன்களை பெற்று தருவதாக கூறி உள்ளூர் மக்களை அவர்கள் ஏமாற்றினர். அவர்கள் வேலை செய்த அலுவலகத்தை பார்த்தபோது அங்கு காவல் நிலையமும் இயங்கியதாக தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
அத்துடன், பங்கா மாவட்டத்தில் போலி போலீஸ் ஸ்டேஷன் இயங்குகிறது என்று வெளியான செய்தி தவறானது. அது பிரச்னையை தவறாக வழிநடத்துகிறது என்று பிரின்ஸ் ராஜ் தெரிவித்தார்.
அதே சமயம், மத்திய, மாநில அரசின் திட்டங்களின் பலன்களை வாங்கித் தருவதாக மோசடி செய்த கும்பல் உள்ளூர் மக்களிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டதே உண்மை என்று அந்த செய்தியாளர் கூறினார். மொத்தத்தில், போலி காவல் நிலையத்தின் செயல்பாடு தொடர்பாக சில ஊடகங்களில் தவறாக செய்திகள் வெளியானபோதும், உண்மையில் அந்த கும்பல் ஒரு மோசடியான வேலையை செய்து இப்போது சட்டத்திடம் பிடிபட்டுள்ளது என்பதை உண்மை என அறிய முடிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













