கடன் மோசடி: நாமக்கல் மகளிர் குழுவினரின் பான் கார்டு, ஆதார் மூலம் திருட்டு

கடன் மோசடி

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் சுய உதவிக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் மற்றும் பான் கார்டு நகல்களை கொண்டு, அவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இரண்டு ஆண்டுகளாக அந்த கடன் தொகை நிலுவையில் இருந்தது என்றும் தெரிய வந்துள்ளது.

நாமக்கல் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி பழனிவேல் அளித்த புகாரில், அவரது அடையாள அட்டை நகல்களை கொண்டு ரூ. 75 ஆயிரம் கடனை ஏஜென்ட் ஒருவர் 2020ல் பெற்றுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தபோது அதிர்ச்சியாக அடைந்ததாக கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய மீனாட்சி, ''நான் செம்மலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவியாக இருக்கிறேன். அது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியரும் நானும் அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க சென்றபோது, ஏற்கெனவே என் பெயரில் வங்கி கணக்கு அங்கு உள்ளதாகவும், ரூ.75,000 கடன் என் பெயரில் இருப்பதாக சொன்னார்கள். எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுவரை அந்த வங்கிக்கு சென்றது கூட இல்லை. என் அடையாள அட்டை நகல் மற்றும் புகைப்படம் அடங்கிய கடன் பத்திரத்தைக் காட்டியபோது, மேலும் அதிர்ச்சியாக இருந்தது. என்னைப் போல எனக்கு தெரிந்த குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரின் பெயரிலும் கடன் எடுக்கப்பட்டிருந்தது,'' என்கிறார் மீனாட்சி.

இந்த விவகாரம் குறித்து வங்கியில் விசாரித்தபோது, ஏஜென்ட் ஒருவர் கடனை செலுத்தி வருவதாக தெரிந்தது என்கிறார் மீனாட்சி.

''இதுவரை நான் அந்த ஏஜென்ட் பற்றி கேள்விப்பட்டது இல்லை. ராசிபுரம் காவல் நிலையத்தில் நான் புகார் கொடுத்ததும், என் வீடு தேடி ஒரு சில ஏஜென்டுகள் வந்து புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். இது போன்ற மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளேன்,'' என்கிறார் அவர்.

மீனாட்சியின் தந்தை மணிமாறன் நம்மிடையே பேசியபோது, ''தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. நான் ஊக்குவித்ததால் என் மகள் புகார் கொடுத்துள்ளார். பிற உறுப்பினர்களும் புகார் தரமுன்வரவேண்டும். வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை தேவை,'' என்கிறார்.

போலீஸ் எஸ்பி விளக்கம்

நாமக்கல் எஸ்பி
படக்குறிப்பு, சாய் சரண் தேஜஸ்வி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அடையாள அட்டை நகலை கொண்டு கடன் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கூறுகிறார்.

''இந்த வழக்கில், கடன் பெற்ற குழுவில் மீனாட்சி மட்டும் புகார் அளித்துள்ளார். கடன் கொடுப்பதற்கு முன் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டபோது, முறையாக அது நடைபெறவில்லை என்று தெரிகிறது. புகார் அளித்துள்ள மீனாட்சி சொல்லும் குற்றச்சாட்டுகளை வைத்து, ஏஜென்ட் என்று அறியப்பட்ட ஷகீலா பானுவை விசாரித்தோம். அவர் கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதாக ஒத்துக்கொண்டுள்ளார்,'' என்கிறார் அவர்.

''பொதுவாகவே, ஒவ்வொருவரும், அவரது அடையாள அட்டை ஆவணங்களை தெரிந்த நபர்களிடம் கொடுத்து வைப்பது, போனில் அனுப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆதார், பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை உங்களைத் தவிர பிறரிடம் இருப்பது எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது,'' என்கிறார் சாய் சரண் தேஜஸ்வி.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன உயரதிகாரி, சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கும் முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

''சுயஉதவி குழுவில் உள்ள பெண்களின் பெயரில் தனி தனியாக வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, அந்த கணக்குகளில்தான் குழுவின் பெயரில் எடுக்கப்படும், கடன் தொகை செலுத்தப்படும். குழுவின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் எப்படி குழுவில் உள்ள பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் வாங்கப்பட்டது என்று விசாரிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளின் உதவி இல்லாமல் இந்த முறைகேடு நடந்தித்திருக்க வாய்ப்பில்லை,'' என்கிறார் அந்த உயரதிகாரி.

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் கள்ளச்சாரயத்திற்கு 42 பேர் பலி - நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: