அதிமுக தலைமை சிக்கல்: எடப்பாடி - ஓபிஎஸ் இடையே தொடரும் மோதல் - இதுவரை நடந்தது என்ன?

அதிமுகவில் தற்போது என்ன பிரச்னை நிலவி வருகிறது? ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இடையே தொடரும் மோதல் இதுவரை எந்த நிலைக்கு வந்துள்ளது? போன்ற பல கேள்விகளுக்கான எளிமையான விளக்கத்தை தருகிறது இந்த கட்டுரை.

ஒபிஎஸ் இபிஎஸ் இடையே என்ன பிரச்னை?

அதிமுகவின் நிரந்திர பொதுச் செயலாளர் பதவியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வந்த நிலையில் அவரின் மறைவுக்கு பிறகு கட்சி பிளவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே பழனிசாமியும் இருந்து வந்தனர். இந்நிலையில் சட்ட மன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தோல்விகளுக்கு பிறகு கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் ஒற்றை தலைமை என்ற கோஷம் தலை தூக்கியது.

கட்சியை தனது தலைமையில் வலுப்படுத்த வேண்டும் என அதற்கான வேலைகளை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என தெரிவித்தார். கட்சியில் பொதுக் குழு நடைப்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அதிமுகவில் தற்போது நடைபெறும் பிரச்னை எங்கு எப்போது தொடங்கியது?

அதிமுக பொதுக் குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 14ஆம் தேதி பொதுக் குழுவில் என்ன பேச வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் பேசியபோது ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் பேசியதாக தெரிவித்தார். அப்போதிலிருந்து ஒற்றை தலைமை குறித்த பிரச்னை பெரிதாக வெடித்தது.

இந்த கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வமும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பிரச்னையில் இதுவரை என்ன நடந்தது?

அதிமுக தலைமை, பொதுக் குழு தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் என இருதரப்பினரும் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இந்த பொதுக் குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஒபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் பொதுக்குழு நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பொதுக்குழுவில் கட்சியின் விதிகளைத் திருத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

முன்னதாக இந்த பொதுக் குழு நடந்தால் அது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஓபிஎஸ் காவல்துறைக்கும் பொதுக்குழு நடக்கவிருக்கும் மண்டபத்திற்கும் கடிதம் எழுதினார்.

அதன்பின் அ.தி.மு.கவின் பொதுக் குழு கடந்த 23ஆம் தேதி கூட்டப்பட்டபோது நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜூன் 23 பொதுக் குழுவில் என்ன நடந்தது?

அறிவித்தபடி அதிமுகவின் பொதுக் குழு கூட்டாம் வானகரத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளரான வைத்திலிங்கமும் மேடையில் ஏறி அமர்ந்தனர்.

ஆனால் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமை குறித்து பேசினர். அங்கு ஓபிஎஸ்க்கு எதிரான சூழல் நிலவுவது தெளிவாக தெரிந்தது.

அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.

ஒபிஎஸ்-க்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. 'ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்த பொதுக்குழுவை புறக்கணிக்கிறோம்' எனக் கூறிவிட்டு ஓ.பி.எஸ் தரப்பினர் வெளியேறினர்.

அவர் மீது தண்ணீர் பாட்டில்களும் வீசப்பட்டன. விரும்புவதாக கூறினார்.

தமிழ் மகன் உசைன் அதிமுகவின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த பொதுக் குழு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்படும் என்றும் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 11 பொதுக் குழுவில் நடந்தது என்ன?

ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அதிமுக. நான்கு மாத காலங்களுக்குள் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதுவரை ஓ.பி.எஸ். வகித்துவந்த பொருளாளர் பொறுப்புக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை பொதுச் செயலாளருக்கு மாற்றப்பட்டன.

இது குறித்து அதிமுக தலைமை நிலையத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட என்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ இல்லை. கழக சட்ட விதிகளுக்கு முரணாக என்னை நீக்குவதாக அறிவித்த அவர்களைக் கண்டிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன்" என்று அறிவித்தார்

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை

ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழு நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திட்டமிட்டபடி வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக் குழு நடைபெற்றது. இதற்கிடையில் அதிமுக அலுவலகத்தில் கூடிய ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்த பெரும் வன்முறையாக அது வெடித்தது. ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். ஓபிஎஸ் பொதுக் குழு நடைபெறும் மண்டபத்திற்கு சென்றார்.

அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓபிஎஸின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

இருதரப்பினருக்கும் வன்முறை தீவிரமாகாமல் தடுக்க அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஆர்டிஓ சீல் வைத்தார்.

அதிமுகவின் பிரச்னை - தற்போதைய நிலைமை என்ன?

அதிகமுகவில் ஒபிஎஸ் - இபிஎஸ் பிரச்னையில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் பேசிய சி.வி. சண்முகம் அடுத்த பொதுக் குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

இதுகுறித்து ஓபிஎஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த வைரமுத்து என்பவர் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு ஜூன் 11ஆம் தேதியன்று காலை வெளியானது. இதன்படி பொதுக் குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதே வழக்கில் அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்றைய தீர்ப்பு குறித்து ஓபிஎஸும் இபிஎஸும் என்ன சொன்னார்கள்?

செய்தியாளர் சந்திப்பில், எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் பொருந்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. தொண்டர்கள் இந்தக் கழகம் ஒன்றுபட வேண்டுமென நினைக்கிறார்கள். எந்தக் கசப்புகளையும் யாரும் மனதில் வைக்காமல் தூக்கியெறிய வேண்டும். கழகத்தின் ஒற்றுமையே பிரதானமாக இருக்க வேண்டும்.

ஓ. பன்னீர்செல்வம் விடுத்திருக்கும் அழைப்பு குறித்து கேட்டபோது, "அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் சென்றார். யார் அழைத்து சென்றார்? அவருக்கு பதவி வேண்டும். பதவியில்லாமல் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது. ஆனால், பதவி மட்டும் வேண்டும். குடும்பத்திலிருப்பவர்கள் பதவி பெற வேண்டும். மகன் எம்.பியாகி மந்திரியாக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. இணைய வேண்டும் என்கிறார்.

நேற்றைய தீர்ப்பு இபிஎஸுக்கான பின்னடைவா?

சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிசாமி தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்; கட்சித் தலைமையகமும் அவர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆகவே, கட்சியின் ஒரே தலைமையாக தான் உருவெடுக்க முடியுமென அவர் நினைத்திருந்த நிலையில், வெளிவந்திருக்கும் தீர்ப்பு அவருக்கு பின்னடைவை அளித்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டது செல்லாது. முன்பிருந்ததைப் போலவே ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியுமே தொடர்வார்கள்.

கட்சி பொதுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்கள் வசம் இல்லாத நிலையில், கட்சியைவிட்டு நீக்கப்பட்டு, கட்சித் தலைமையகமும் பறிபோன நிலையில் இருந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு இந்தத் தீர்ப்பு புத்துயிர் அளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: